Skip to main content

கலை என்பது ஒரு தனித்த ஞானம்

 

   (தோழர் தியாகுவின் மார்க்சின் தூரிகை”  நூலை முன்வைத்து )

நான் என்னை ஒரு குருட்டு மார்க்ஸிய ஆதரவாளன்” என்று சொல்லிக்கொள்ளவே விரும்புவேன். அப்படிச் சொல்லிக்கொள்ளும் அளவுதான் எனக்கு மார்க்சியம் தெரியும். எனினும் ஒரு அயல்நாட்டு அறிஞரின் கூற்று தரும் தைரியத்தில் தான் இந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேச ஒப்புக்கொண்டேன். அந்தக்கூற்று..
 “ நெஞ்சத்துஉண்மை எவ்வளவு முட்டாள்தனமாக தோன்றிடும் போதிலும் அது காணவேண்டியதும் அழகானதுமாகும் “ என்று சொல்கிறது. அந்த அறிஞரின் பெயரென்ன ? அவர் எந்த தேசத்தை சேர்ந்தவர் ? என்றெல்லாம் நீங்கள் என்னைக் குடையக்கூடாது. ஒரு வேளை அவர் இந்தக் கட்டுரையில், இந்தக் கூற்றிற்காகவே பிறந்தவராக கூட இருக்கலாம்.
     மார்க்ஸியர்கள் பற்றி ஒரு அவச்சித்திரம் உண்டு.
அவர்கள் பல்லிடுக்குகளில் எப்போதும் ஜெலாட்டின்குச்சிகளை ஒளித்துவைத்திருப்பார்கள்.
அவர்களுக்கு ஒழுங்காக மழையில் நனையத்தெரியாது.
அவர்கள் வீட்டில் நிலாமுற்றம் இருப்பதில்லை.
அவர்களின் காதலிகள் அடிக்கடி தலையில் அடித்துக்கொள்வார்கள்.
இலை, சருகு, பூ, காய் , மரம் ,அணில்குஞ்சு, வண்ணத்துப்பூச்சி, ப்யானோ, பீத்தோவன், கம்பன் ஆகியோர் இவரின் வர்க்கஎதிரிகள்....
 என்பதாக விரியும் அச்சித்தரம். ஆனால் இவை உண்மையல்ல. அல்லது முழு உண்மையல்ல என்று சொல்லலாம். “ சிவப்பாக இருக்கும் ஒரே காரணத்தால் உறுகாயில் புரதச்சத்து அதிகம் “ என்று சொல்லும் வறட்டு மார்க்சியர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை இச்சித்திரம் பொருந்தலாம். மற்றபடி இது மார்க்சியர்களுக்கான பொதுசித்திரமல்ல. இந்தச் சித்திரக்காரர்கள் தீட்ட விரும்புவது மார்க்ஸியர்களுக்கு ரசனைமட்டு என்பதைத்தான். இந்தப்பின்புலத்தில் வைத்துப்பார்க்கையில் “ மார்க்சின் தூரிகை “ என்கிற இந்தப்புத்தகம் தன் இருப்பிற்கான நியாயத்தை உறுதி செய்து கொள்கிறது. மார்க்சின் இலக்கியவாசிப்பு , தன் எழுத்துக்களில் அவர் பேரிலக்கியங்களை துணைகொண்ட அழகு, அவரின் கவித்துவ எழுத்துநடை, சிடுமூஞ்சித்தனமற்ற எள்ளல் ஆகியவற்றை தியாகு இந்தப்புத்தகத்தில் விரிவாக எழுதிச்செல்கிறார்.
   காங்கிரஸ்பாரம்பரியம் மிக்க வீட்டில் பிறந்த எனக்கு எங்கள் வீட்டருகே புதிதாக முளைத்த கம்யூனிஸ்ட் மன்றம்  மனம் ஈர்ப்பதாக இருந்தது. அந்த மன்றத்தில் இருந்த எல்லோரும் புதிதாக இருந்தார்கள். புதிதாகப் பேசினார்கள். புதிதாக சிரித்தார்கள். அங்கு எப்போதும் உற்சாகம் கரைபுரண்டோடியது. சண்டைக்காரர்களாக இருந்த போதிலும் அவர்கள் தீங்கற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் தான் “ உன் வீட்டிற்கு வெளியே ஒரு உலகம் இருக்கிறது தம்பி “ என்று முதன்முதலாக சொன்னார்கள். எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்கு போனோம். யாரோ ஒருவர் எல்லோருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். யாரோ ஒருவர் எல்லோருக்கும் சேர்த்து  டீ வாங்கி வந்தார். “ இதையெல்லா நீ கத்துக்ககூடாது சரியா ? “ என்கிற அறிவுரையுடன் சில தோழர்கள் ரகசியமாக சிகரெட் குடித்தனர். மார்க்ஸ் , சோவியத்யூனியன், சேகுவேரா, பகத்சிங் , இ.எம்.எஸ் , மேற்குவங்காளம்,  முற்போக்கு இலக்கியம் , கவிதை என்று அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அவை அரைகுறையாக  என் காதிலும் விழுந்தன.
  நல்லமனிதர்களான அவர்கள் எனக்கு கெட்ட கவிதைகளை அறிமுகம் செய்துவைத்தார்கள். இதில் சதித்திட்டம் ஏதுமில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் நல்ல கவிதைகள் என்று நம்பினார்கள். கட்சி அவர்களுக்கு சொல்லித்தந்ததை அவர்கள் எனக்கு சொல்லித் தந்தார்கள். கவிதை எழுதப்பட்ட காகிதத்தை முகர்ந்துபார்த்து அதில் ரத்தவாடையடித்தால் அது நல்ல கவிதை என்றும், அடிக்காதபட்சத்தில் அது கவிதையல்ல என்றும் முடிவுசெய்து கொள்ளும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. அவர்கள் எனக்கு நல்லகவிதைகளைக் காட்டவில்லை. கவிதையின் வடிவத்தை கற்பிக்கவில்லை. சொல்லை எப்படி ஏந்தி எப்படி சுழற்ற வேண்டும் என்பதை சொல்லித் தரவில்லை.  ஆனால் பக்கத்து மனிதனை பார்க்கச்சொல்லி அவர்கள் தான் சொல்லித்தந்தார்கள். அந்த வகையில் அவர்கள் என் கவிதையின் ஆன்மாவுள் பங்கெடுக்கிறார்கள். மார்க்சின் இலக்கியம் பற்றிய இந்தப்புத்தகம் இயல்பாக இந்த நினைவுகளை என்னுள் கிளரச்செய்தன.
   மார்க்சின் தூரிகை என்கிற இப்புத்தகம் கணையாழியில் 1995 முதல் 1997 வரை  தோழர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். மார்க்சின் இலக்கியம் பற்றிப் பேசுகையில் தவிர்க்க இயலாமல் பாரதியும் வந்து சேர்ந்திருக்கிறார். “முப்பது கோடியும் வாழ்வோம் : வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் “ என்கிற கனவும் , “ கடமையறியோம் தொழிலறியோம். கட்டென்பதனை வெட்டென்போம்”  என்கிற விடுதை ஏக்கமும், கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” என்கிற உணர்ச்சிப்பெருக்கும் இயல்பாகவே இருவரையும் பிணைத்துவிடுபவைதான். மார்க்ஸ் வாசித்து , ஆராய்ந்து போராடிச்சொன்ன  சமூகஅறிவியலை ஒரு பரிசுத்த உணர்வெழுச்சியால் சென்று தொட்டுவிட பாரதியால் முடிந்திருக்கிறது. இதையே நாம் “ கலைவெற்றி “ என்று சொல்கிறோம். இது கலையின் சிறப்பு  கூட அல்ல. இதுவே நல்லகலையின் இயல்பாகும். அரசியலுக்குள் கலையின் இடத்தை ஸ்திரமாக நிறுவ பாரதி ஒருவரே போதுமானவர். பல இடங்களில் மார்க்சையும் பாரதியையும் பக்கம்பக்கமாக நிறுத்திக்காட்டுகிறார் தோழர். மறுபிறவி வாய்த்தால் என்ன செய்வீர்கள் என்கிற கேள்விக்கு  “ இப்போது செய்து கொண்டிருப்பதையே செய்வேன். திருமணம் செய்து கொள்வதைத் தவிர “ என்று பதில் அளித்திருக்கிறர் மார்க்ஸ். மார்க்ஸ் என்கிற போராட்டக்காரர் இப்படி பதில் அளித்தது தியாகு என்கிற போராட்டக்காரருக்கு ரொம்புவும் பிடித்து விட்டது போலும். இம்மேற்கோளை வெவ்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார் தியாகு.  “ வீடு பெறா வண்ணம் யாப்பதை வீடென்பார் “ என்கிற  பாரதியின் வரியை இத்தருணத்தில் தோழருக்கு பரிசளிக்கிறேன்.



தங்களுக்கு பிடித்த கவிஞர்கள் யார் என்கிற கேள்விக்கு மார்க்ஸ். “ ஷேக்ஸ்பியர், ஏஷிலஸ், கதெ என்று பதிலளிக்கிறார். இவர்களின் வரிகளை மேற்கோள்காட்டி அல்லது சற்று மாற்றி மார்க்ஸ் பயன்படுத்தி இருக்கிற இடங்களை தியாகு விரிவாக எழுதிச்செல்கிறார். இதன் ஊடாக  இந்தக்கவிஞர்களின் காவியங்களை எட்டிப்பார்க்கும் வாய்ப்பும் நமக்கு கிட்டுகிறது.ஷேக்ஸ்பியரின் “ வெனிஸ் நகர வணிகன் “ என்கிற நாடகத்தை துணைகொண்டு  பேசியிருக்கிற  “ யூதத்துயரம் “ என்கிற கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. ஷேக்ஸ்பியரின் எழுத்து மீது மிகுந்த பற்றுடைய மார்க்சின் லண்டன் வீட்டில் “ ஷேக்ஸ்பியர் வாசகர் சங்கம் “ அடிக்கடி கூடி அவரின் காவியங்களை வாசித்திருகிறது. மார்க்சின் மகள் எலீனார் சொல்கிறார்..
“ ஷேக்ஸ்பியர் தான் எங்கள் வீட்டு வேதாகமம். எங்கள் கையிலோ வாயிலோ அவர் எப்போதும் இருந்துகொண்டிருப்பார்.”
  கொலம்பஸின் கடிதத்தை, கதேயின் கூற்றை , சோஃபாக்ளிஸின்  வரிகளை மார்க்ஸ் கையாண்டிருப்பதைக் குறித்து பேசிச்செல்லும் தியாகு , மார்க்ஸ் தன் சித்தாந்தங்களைப் படைக்கையில் அவருள் இயல்பாக பீறிட்டெழுந்த கவித்துவத்தைப் பற்றியும் எழுதியிருக்கலாம் என்பது என் எண்ணம். அதாவது பிற இலக்கியங்களிருந்து பெறாமல் மார்க்ஸ் தானே படைத்தளித்த இலக்கிய சாயைகள் குறித்து எழுதியிருக்கலாம் என்று சொல்ல வருகிறேன். உதாரணமாக நாம் அனைவரும் அறிந்த
“ இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைத்தளைகளைத் தவிர ; பெறுவதற்கோ ஒரு பொன்னுலகமுண்டு “ என்கிற வரி அவரின் சிந்தனாபுத்தி எழுதியதல்ல.  கவிமனத்தின் பெருக்கமே  என்பது என் எண்ணம். இது போன்ற நிறைய வரிகளை மார்ஸ் எழுதியிருக்கிறார். அவை குறித்தும் தோழர் எழுதியிருக்கலாம்.
   இந்தநூலில் “ perfection “  என்கிற சொல்லை “ செந்நிறைவு “ என்று மொழிபெயர்த்திருக்கிறார் தியாகு. ஒரு தமிழ்மாணவனாக இது எனக்கு பிடித்திருந்தது.
   நமது ஆசான்கள் கலையை, கவிஞர்களைப் போற்றியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். இடையில் எங்கேயோ கலைமீதான ஏளனப்பார்வை நம்மைத் தொற்றிக்கொண்டது. “ கலை அரசியலின் பணிப்பெண்ணல்ல “ என்பது ஏங்கெல்ஸின் கூற்று. ஆம் அது ரோஸ்பவுடரோ, ஜிகினா பொட்டோ கிடையாது. அது ஒன்றை புறத்தே அலங்கரிப்பதல்ல. மாறாக அதன் உள்நின்று இயங்குவது. இந்தப் புத்தகத்தை தியாகு இப்படி முடிக்கிறார்..
” இத்தனை மொழிகள் கற்று இத்துணை இலக்கியம் கைக்கொண்ட மார்க்ஸ் நற்றமிழும் கற்று வளமார் தமிழ் இலக்கியமும் கைக்கொண்டிருப்பாரானால் தமிழ் இலக்கியத்திற்கும், மார்க்ஸ்க்கும், உலக இலக்கியத்திற்கும் என்ன விளைச்சல். ” தமிழ் இலக்கியத்திற்கும், மார்க்ஸ்க்கும், உலக இலக்கியத்திற்கும்” என்கிற வரி அடிக்கோடிட வேண்டியவை. மார்க்ஸியமும், இலக்கியமும் ஒன்றுகொன்று கொண்டு கொடுத்துக்கொள்ள வேண்டியவை. அவை தமக்குள் உரையாடலாம். சண்டையிட்டுக்கொள்ளலாம். ஆனால் பிரிந்துசென்று விடக்கூடாது. மார்க்ஸின் கவிமனம் பற்றிய இப்புத்தகம் மீதான இந்தக்கட்டுரையை ஒரு அசலான கவிதையுடன் முடிக்க விரும்புகிறேன். இந்தக்கவிதை மு.சுயம்புலிங்கத்துடையது..
        தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
பழைய துணிக்கைடையில் சகாயமாக கிடைக்கிறது.
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த ப்ளாட்பாரம் இருக்கிறது.
திறந்தவெளிக்காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது.
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில்போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்.
ஜீரணமாகிவிடுகிறது.
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்.

(   பிசகு நிகழ்த்திய “எழுத்தினூடே விரியும் தோழர் தியாகுவின் சித்திரம்’ நிகழ்வில் ஆற்றிய உரை )

Comments

தம்பி எழுதும் கட்டுரை என்றைக்கு சோடை போயிருக்கிறது.
Unknown said…
உங்கள் எழுத்தை நுகர்ந்தேன், கூடவே தியாகுவையும்...

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம