வெள்ளந்திக்கருளாள் ” மழை பற்றிய பகிர்தல்கள் ” என்றொரு நீலக்கலர் புத்தகம். அந்தப் புத்தகம் வந்த போது நன்றாக வரவேற்கப்பட்டது. மூத்த ஆளுமைகள் அந்தக்கவிதைகள் குறித்து நம்பிக்கையூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்கள். வாசிப்பின் பால்யத்தில் என்னை ஈர்த்த இந்தப் புத்தகம் சே.பிருந்தாவின் முதல் கவிதைத்தொகுப்பு. எனக்கான கவிதையை காட்டித்தந்த விரல்களில் ஒன்று அவருடையது. அதன் இயல்பான எளிமையாலும், குறுகத்தரித்தது போன்ற அதன் கச்சிதமான மொழிதலாலும் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். அப்போது நான் இடதுசாரிய கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்டவனாகவும், அதே சமயம் அதில் ஒரு போதாமையை உணர்ந்தவனாகவும் இருந்தேன். தோழர்களின் கண்ணீரை சந்தேகிப்பவனல்ல நான். அப்படிச் சந்தேகிக்க ஒரு பொட்டு யோக்கியதையும் எனக்கில்லை. அருவாளை கழுத்தில் வைத்து வசூலிக்கிற காலத்தில் அவர்கள் உண்டியல் ஏந்தி வருகிறார்கள். பொதுஜனம் ”பிச்சைக்காரர்கள் வந்து விட்டார்கள்” என்று அவர்களை கேலிபேசுகிறது. தொண்டிற்கென்றே அலைந்து கேலிக்கு ஆளாகி யாராலும...