Friday, January 23, 2015

மகளுக்குச் சொன்ன கதை - விமர்சனவுரை


                           வெள்ளந்திக்கருளாள்



மழை பற்றிய பகிர்தல்கள் என்றொரு நீலக்கலர் புத்தகம். அந்தப் புத்தகம் வந்த போது நன்றாக வரவேற்கப்பட்டது. மூத்த ஆளுமைகள் அந்தக்கவிதைகள் குறித்து நம்பிக்கையூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்கள். வாசிப்பின் பால்யத்தில் என்னை ஈர்த்த இந்தப் புத்தகம் சே.பிருந்தாவின் முதல் கவிதைத்தொகுப்பு. எனக்கான கவிதையை காட்டித்தந்த விரல்களில் ஒன்று அவருடையது. அதன் இயல்பான எளிமையாலும், குறுகத்தரித்தது  போன்ற அதன் கச்சிதமான மொழிதலாலும் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். அப்போது நான் இடதுசாரிய கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்டவனாகவும், அதே சமயம் அதில் ஒரு போதாமையை உணர்ந்தவனாகவும் இருந்தேன். தோழர்களின் கண்ணீரை சந்தேகிப்பவனல்ல நான். அப்படிச் சந்தேகிக்க ஒரு பொட்டு யோக்கியதையும் எனக்கில்லை.  அருவாளை கழுத்தில் வைத்து வசூலிக்கிற காலத்தில் அவர்கள் உண்டியல் ஏந்தி வருகிறார்கள். பொதுஜனம் ”பிச்சைக்காரர்கள் வந்து விட்டார்கள்” என்று அவர்களை கேலிபேசுகிறது. தொண்டிற்கென்றே அலைந்து கேலிக்கு ஆளாகி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் போகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு கவிதைக்குள் சரியாக அழத்தெரியவில்லை என்பது என் எண்ணம்.  அதற்கான பயிற்சி போதவில்லை. ஆமாம் பயிற்சி தான்...  கலைவாணி வெள்ளந்திகளுக்கு அருளமாட்டேன் என்கிறாள். இடதுசாரிய கவிதைகளில் நான் உணர்ந்த போதாமை என்னவென்பதை பிருந்தாவின் கவிதை ஒன்று எனக்கு சரியாக காட்டித் தந்தது.
  எந்தச் சாவு வீட்டிலும்
  பீறிட்டுக் கிளம்பி விடுகிறது
  பொறுக்க முடியாமல் அழுகை
  என் அப்பா இறந்த துக்கம் தாளாது.

கவிதையிடமிருந்து நான் வாங்கிய முதல் அறை என்று இதைச் சொல்லலாம். இந்தக்கவிதை அழுவதற்கு முகத்தை கோணலாக்கிக் கொண்டு சிரமப்படவில்லை. அழுபவனுக்கு வெளியே நின்று அவன் தோளைத் தட்டி சம்பிரதாயமாக ஆறுதல் சொல்லவில்லை. மாறாக, சாவு வீட்டில் இன்னொரு சாவு வீடாக கலந்து கொள்கிறது. இந்தக் கலந்து கொள்ளல்” நல்ல கவிதையின் இயல்புகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். கவிதை என்பது சுயத்திலிருந்து கிளம்பி பொதுவை அணைத்துக்கொள்வது தான் என்கிற எனக்கான சூத்திரத்தை உருவாகித்தந்த கவிதைகளில் ஒன்று இது. இந்தக் கவிதையில் அப்படி சிலாகிக்க ஒன்றுமில்லையே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இது என் வாசிப்பின் காலத்துடன் புழங்கியது. எனவே எனக்கு முக்கியமானது.  அத்தொகுப்பின் கவிதைகளில் இருந்த கச்சிதத்தன்மை அனைவரையும் ஈர்த்தது. அது குறித்து பிரபஞ்சன் இப்படி சொல்லி இருந்தார்...
“ சேதாரம் இல்லாமல் நகை பண்ணுவது பிருந்தாவுக்கு கைவந்துள்ளது “
            வீசும் காற்றில்
     வீடே ஆடுகிறது
     விளக்குச் சுடருடன்.
போன்ற கவிதைகள் அவர் கூற்றை பெய்ப்பிப்பதாகவே இருந்தன. ஆனால் இந்தத் தொகுப்பில் கொஞ்சம் சேதாரம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
சில கவிதைகளில் காணக்கிடைக்கும் அவரின் பிரசித்தி பெற்ற வாள்மினுக்கத்தை பல கவிதைகளில் காண முடியவில்லை. அவை தொள தொள “ ஆடைகளை அணிந்து கொண்டு கோமாளியைப் போல் காட்சி தருகின்றன. சமயங்களில் இரண்டு கவிதைகளை சேர்த்துக் கட்டி ஒரு கவிதையாக முன் வைத்திருக்கிறார் பிருந்தா. அவை தனித்தனியே இருக்கையில் தோன்றும் அழகு, கட்டுதலில் மங்கிவிடுகிறது. உதாரணமாக 8 என்று எண்ணிடப்பட்ட கவிதைக்குள் இருப்பவை தனித்தனியான நான்கு கவிதைகள். முதல் கவிதை எனக்குப் பிடித்திருந்தது...
        எங்கிருந்து தொடங்குவது
        கிண்ணத்தில் அமிர்தம்
        எந்தப் பக்கம் அருந்தினாலென்ன்ன
        எல்லாமும் அதே ருஸி
        உன்னை அருந்துகிறேன்.



  எனக்கு வர வர அன்பை வாசிக்கையில் வாந்தி வாந்தியாக வந்துவிடுகிறது. அன்பால் இயக்கப்படுபவன்.. அடிக்கடி தழுதழுப்பவன்... நண்பர்களால் ஜீவிப்பவன்.. இவை தான் என்னைப் பற்றிய எனது சித்திரமும்.  ஆனால் நமது அன்பு வெளியில் இருந்து கவிதைக்கு வரும் வழியில் “ப்ளீச் “ பண்ண அழகு நிலையம் போய்விடுகிறது. அல்லது வேண்டுமென்றே சட்டைப்பட்டனை அறுத்துவிட்டுக் கொண்டு பின்னூசி குத்திக் கொள்கிறது. அன்பு வெளியில் இருக்கையில் பகட்டில்லாததாக, போதுமான கனிவுடன் போதுமான பொறாமையுடன் , போதுமான நீதியுடன், போதுமான தீங்குடன் இயல்பாக இருக்கிறது. அது கவிதைக்குள் வருகையில் கூடக்குறைய ஆகிவிடுகிறது. ஒரு சொல் மிகுந்து விடுகிறது. அல்லது அரைச்சொல் போதாமல் போகிறது. இதற்கு நமது அன்பை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒரு கவிஞன் வாசகனின் முன்னால் அன்பையல்ல கவிதையையே முன் வைக்கிறான். இத் தொகுப்பின் அனேக கவிதைகளில் அன்பெனும் சொல் அகப்படுகிறது. அது அன்பாகவும்  இருக்கிறது. ஆனால் குறைவான இடங்களிலேயே அதை கவிதையாகவும் உணரமுடிகிறது. அதிலும் சொல்லாக கூட புதிதாக இல்லாமல் பிருந்தா “ அன்பு “ என்னும் சொல்லையே  தைரியமாக உபயோகித்திருக்கிறார். அப்படியெனில் சொல் தான் கவிதையா என்று கேட்டால், சொல்லும் தான் என்று சொல்வேன். சொல்புதிதும் பொருள்புதிதும் சேர்ந்தே சுவைபுதிதாகிறது.மகளுக்கு சொன்ன கதைகவிதை  குழந்தைக்கு கதைசொல்லும் லாவகத்துடன் கையாளப்பட்டு கவிதையாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சாதுர்யமான முயற்சி எனலாம். சில கவிதைகள் நிறைய வரிகளில் பேசுகின்றன. அவை அவசியமற்றவையாக இருக்கின்றன. உதாரணமாக “ தவிப்பின் மொழி பெயர்ப்பு “ கவிதைக்கு கடைசி நான்கு வரியே போதுமானது...
  நதி மீதொரு சருகு
  என்னவானதென
  மரமும் நினைக்கவில்லை
  நதியும் நிற்கவில்லை.

இந்த வரிகள் தான் நயமாகவும் புதிதாகவும் இருக்கின்றன. மேலே இருக்கிற 9 வரிகள் தரும் அயர்ச்சியில் இந்த நான்கு வரியும் துலங்கி வராது போகும் ஆபத்துண்டு. இதைப்போல சில கவிதைகளில் முழுக்கவிதை அயர்ச்சியை தந்தாலும் இடையிடையே வைத்திருக்கும் சில வரிகளில் நாம் நம்மை புத்துணர்வாக்கிக் கொள்ளலாம்.
“ நாளை என்பதே இல்லை போல்
 இன்றின் மேல் வெறித் தழுவல் “
   என்கிற இடைவரியை வாசித்த போது இதுவே ஒரு தனிக்கவிதையல்லவா? என்று தோன்றியது.
அன்பின் அலை(க்கழிப்பு)கள்”  இப்படி எழுதப்பட்ட ஒரு கவிதை இருக்கிறது இத்தொகுப்பில். அந்தக்கவிதை இப்படி சமர்பிக்கப்பட்டிருக்கிறது என் எல்லா நட்பூக்களுக்கும்” .  உங்களிடம் இதைப்போன்ற அதரப்பழசான குரங்காட்டி வித்தைகளைக் காண வருத்தமாக இருக்கிறது பிருந்தா. நட்பு என்பதை “ நட்பூ “ என்று எழுதத்தான் இத்தனை தூரம் கால்கடுக்க நடந்து வந்தீர்களா ?.
இடதுசாரிய கவிதைகளைக் குறித்து சொல்கையில் வாணி வெள்ளந்திகளுக்கு அருள்வதில்லை என்று சொன்னோம். துரதிஷ்டவசமாக இப்போது அதையே பிருந்தாவிற்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. தாய்மையின் பூரிப்பு ,ப்ரியத்தின் நெகிழ்ச்சி , பிரிவின் துக்கம் , அன்பன்பன்பெனும் புல்லரிப்பு இவை ஒரு வெள்ளந்திக்கு போதுமானது. ஆனால் கவிஞனுக்கு கொஞ்சம் திருட்டுத்தனமும் தேவைப்படுகிறது பிருந்தா. அதை அவளிடம் யாசியுங்கள்.

   இறுதியாக பிருந்தாவிடம் சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. 
அது “ கவிதையை இன்னும் கொஞ்சம் மதியுங்கள் “ என்பதே. கவிதைத் தொகுப்புடனேயே ஒரு விமர்சனவுரையையும் இணைத்து வெளியிடுவது , அதை உங்களின் வாசகனையே எழுத வைப்பது ஆகியவற்றில் நீங்கள் கவிதை மேல் காட்டுகிற அக்கறை வெளிப்படுகிறது தான். ஆனால் நான் சொல்ல வந்தது அதையல்ல. 
“ ஒரு கவிதையுடன் எப்படி உறவாட வேண்டுமோ அப்படி உறவாடுங்கள் “ என்று சொல்கிறேன்.

 (சே.பிருந்தாவின் “ மகளுக்குச் சொன்ன கதை “ தொகுப்பில்                 இடம்பெற்றிருக்கும் விமர்சனவுரை)

2 comments:

Prabhakaran Sivasubramaniam said...

அன்பன்பன்பெனும் புல்லரிப்பு!!!!!!!!!

சின்னப்பயல் said...

நச் உரை :)