Thursday, January 1, 2015

அதனினும் இனிது அறிவினர் சேர்தல் - விஷால்ராஜா
இசையுடனான எனது முதல் உரையாடலை இங்கே நினைவு கொள்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பிருக்கும். அவருடைய சிவாஜி கணேசனின் முத்தங்கள் தொகுப்பை வாசித்து அவருடன் பேச விரும்பி அவரை அலைபேசியில் அழைத்திருந்தேன்.
கவிதைகள் பற்றி பேசுவதற்கு முன்பாக சில அறிமுக கேள்விகள். “என்ன பண்ற நண்பா?” என்று என்னிடம் கேட்டார். நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த நேரம். “காலேஜ் ஸ்டூடன்ட்என்று சொன்னேன். எதிர்முனையில் மூச்சிழுபடும் சத்தம் கேட்டது.”ம்ம்.கல்லூரி மாணவர்கள் எல்லாம் நமக்கு வாசகரா இருக்காங்க.மாணவிங்க யாரும் அப்படி இல்லையே.ஏன்?”. உடனேயே இரண்டு பேருமே வெடித்து சிரித்துவிட்டோம்.
இசையை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வது என்பதும் ஒருவகையில் அவருடைய கவிதைகளை புரிந்து கொள்வதுதான் என அப்போதே நான் தெரிந்து கொண்டேன். இசையின் இந்த கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போதும் எனக்கு அதுதான் திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டேயிருந்தது. சமகால கவிதை நூல்களை பற்றிய பத்து கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. இசை ஒரு விமர்சகனாக இல்லாமல் கவிஞனின் இடத்தில் நின்றே இவற்றை எழுதியிருக்கிறார். அதனாலயே இதில் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நூலின் மொழிக் கூட கட்டுரைகளுக்குரிய நடையிலிருந்து விலகி,ஒருவிதமான உரையாடல்த் தன்மையையே கொண்டிருக்கிறது.இது இந்நூலின் மிகப் பெரிய பலம். அதேப் போல் இசையின் கட்டுரைகள் கோட்பாடு ரீதியான விமர்சனங்கள் அல்ல. அவை அவரது ரசனையின் முடிவுகள். எனவே அவை வாசகர்களுடன் ஒரு நேரடியான உறவை கொண்டிருக்கின்றன.
கவிதைகளை அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுகள் வைத்தே அளவிட வேண்டும் என்று இசை நம்புகிறார். தன்னுடைய ரசனையின் அடிப்படையிலேயே கவிதைகளை மதிப்பிடுகிறார். அவருடைய கட்டுரை என்பது ஒரு வகையான அனுபவ பகிர்தலே. அதனாலயே அது நேர்மையானதாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் இருக்கிறது.
இக்கட்டுரைகளின் வழியே கவிதை வாசிப்பிற்கான ஒரு பொது அளவுகோலை நிச்சயமாக பெறமுடியாது. ஆனால் இசையின் வாசிப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் எப்படி கவிதைகளை அனுகுகிறார், எதன் அடிப்படையில் ஒரு கவிதையை ஏற்கிறார் அல்லது மறுதலிக்கிறார் என்பதை எல்லாம் அருகில் இருந்து பார்ப்பதைப் போல் உணர முடிகிறது. இசை ஒரு தேர்ந்த வாசகர் என்பதாலயே இக்கட்டுரைகள் கவனம் பெறுகின்றன. இசை முன்வைக்கும் ஒரு பரிந்துரை பட்டியல் என்றுக்கூட இத்தொகுப்பை சொல்லலாம்.
இசை குறிப்பிடுகிற, அடையாளம் காட்டுகிற கவிதைகளின் பொதுகுணங்கள் என்ன? எனக்கு தெரிந்த இரண்டு அடிப்படை பண்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.
O
1.கவிதையின் மொழி.
அது அதிகம் சிடுக்கானதாகவும் இருக்கக் கூடாது. ரொம்ப தட்டையாகவும் இருக்கக்கூடாது. ராணி திலக்கின்நாகதிசைபற்றி சொல்லும்போது அதன் சிக்கலான மொழியை இசை விமர்சிக்கிறார். சாம்ராஜின்என்றுதானே சொன்னார்கள்தொகுப்புக் குறித்த கட்டுரையில் சாம்ராஜ் மொழியை இன்னும் துள்ளவிடலாம் என்று எழுதுகிறார்
மொழி நயத்தின் மீதும் இசைக்கு ஒரு பிரத்யேக கவனம் இருக்கிறது.
நமது மரபுக் கவிதைகளில் இசை வெள்ளம் பெருகி,அது கவிதையையே அடித்துக் கொண்டு போனதால் நாம் நவீன கவிதைகளில் இசைத் தன்மை என்பதை வெறுத்து ஒதுக்கினோம்” (பக்.37)
இசை சொற்களின் ஓசைமீதும் தாள அடுக்கின் மீது அதிகம் விருப்பம் கொண்டவராக இருக்கிறார். இதை அவருடைய கவிதைகளிலேயே காணலாம். (குத்துப்பாட்டின் அனுபூதி நிலை ஒரு நல்ல உதாரணம்), எனவே இயல்பாகவே அவரது ரசனையும் மொழி நயம் கொண்டவர்களின் பக்கம் சாய்கிறது. அவரைப் போலவே கவிதைகளில் லய ஒழுங்கிற்கு அதிக கவனம் கொடுக்கும் இன்னொரு கவிஞரான இளங்கோவைப் பற்றி எழுதும்போது இசை இக்கூறுகளை குறிப்பிட தவறுவதே இல்லை. உரைநடைத் தன்மைக் கொண்ட கவிதைகள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுமே செயல்படமுடியும் என்பதையும் அவர் அடிக்கோடிட்டு சொல்கிறார்.
2.கண்ணீரின் அழகியல்.
துயரம் இல்லாத மனிதரே இல்லை என்பதைப் போல் துயரம் இல்லாத தமிழ்க் கவிதையே இல்லை என்கிற நிலை கிட்டத்தட்ட வந்தே விட்டது. அதுவும் நம்பிக்கைகள் நொறுங்கிக் கொண்டே இருக்கும் இந்நூற்றாண்டில் நம் கவிஞர்கள் ரொம்பதான் கலங்கி போயிருக்கிறார்கள். கவிதைகள் தவிர அவர்களுக்கு வேறு சாய்மானமே கிடையாது என்பதால் வாசகர்களும் அவர்களோடு சேர்ந்து கண்ணீர் விடவே வேண்டியிருக்கிறது.
இசை இதை ஒரு அழகியலாக காண்கிறார். கவிதைகளில் துயரங்களை தவிர்க்க முடியாது என்று அவர் சொல்லும்போது அதை நம்பவே தோன்றுகிறது.அவருடைய அனைத்துக் கட்டுரைகளிலுமே வாழ்வின் மீதான சலிப்பும் அதன் அர்த்தமற்ற தன்மை மீதான அதிருப்தியும் பலமாகத் தெரிகின்றன. ஆனால் எல்லா துயரங்களிலும் கவித்துவம் இருப்பதில்லை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதற்குரிய வரையறைகளை கச்சிதமாக வகுத்து வைத்திருக்கிறார்.
               
                 


                                        
      கவிதைகளை அளவிட இவ்விரண்டு குணங்களை மட்டுமே இசை அடித்தளமாக கொண்டிருக்கிறார் என்று நான் கண்டிப்பாக சொல்லமாட்டேன்.ஆனால் தொடர்ச்சியாக பல கட்டுரைகளில் இக்கருத்துக்கள் இடம் பெறுவதால் இவையே பிரதானமானவை என்று எனக்கு படுகிறது. இதன் வழியே இன்னொரு சுவாரஸ்யமான புரிதலையும் அடைய முடிகிறது. இசையின் கவிதைகளையும் அவற்றின் வடிவமைப்பையும் இவ்விரண்டு குணங்களை வைத்து இன்னும் எளிமையாகவும் நெருக்கமாகவும் புரிந்து கொள்ளலாம். அவரது மொழி.அதன் இசைவு. பகடியின் பின்னே ஒளிந்திருக்கும் துயரம். புன்னைகையில் மறைக்க முயன்று பின் அதை மீறி பொங்கும் அழுகை. இவையே இசையின் கவிதைகள். இத்தொகுப்பின் மூலமாக நான் பிறக் கவிஞர்களை தெரிந்து கொண்டதைவிடவும் இசையையே ஆழமாக தெரிந்து கொண்டேன் என்று சொல்ல வேண்டும்.
 இசையின் பெரும்பாலான கவிதைகளில் ஒரு வலுவற்ற இருதயம் மெலிதாக விசும்பியபடியே இருப்பதை காண முடியும். நியாயமற்றதும் இரக்கமற்றதுமான இவ்வாழ்வைக் கண்டு மிரண்டு ஒடுங்கிய அந்த இருதயம் யாருடையது என்பதை சாம்ராஜின் கவிதைகள் குறித்த அவரது கட்டுரையை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது.
சாம்ராஜின் “CANON FM10 காமிராக்கள் கிடைப்பதில்லைகவிதையில் தெரியும் வஞ்சமொன்றும் அவ்வளவு புதியதல்ல. இணையத்தில் அப்படிப்பட்ட வஞ்சங்கள் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இசை அதை வாசித்ததும் அதிர்ச்சியடைந்து போகிறார். அழி ரப்பரை வைத்து ஒரு நாளை அழித்துவிட முடியுமா என்று கேட்டக் குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை உணர்ந்து நான் உதட்டோடு சிரித்துக் கொள்கிறேன். ஆனால் மறுவரியிலேயே நான் அதிலிருந்து வெளியேறி ஒரு சிறிய அதிர்ச்சியை எதிர்கொள்கிறேன்.
நான் உறுதியாக நம்புகிறேன்,சாமையும் வெய்யிலையுமே கூட திகிலடையச் செய்யும் இன்னொரு புதுவஞ்சத்தை இவ்வாழ்வு தன்னுள்ளே பத்திரமாக ஒளித்து வைத்திருக்கிறது” (பக்.44)
இவ்வுலகில் நிறைய வஞ்சங்கள் இருக்கலாம். வன்மங்களும் வக்கிரங்களும் இருக்கலாம். அவற்றின் இருப்பு மாற்ற முடியாததாகக்கூட இருக்கலாம். ஆனால் கால ஓட்டத்தில் மனிதர்கள் அவற்றிற்கு பழகி விடுவதுதான் மிகப் பெரிய துரதிருஷ்டம்.
இதுப் போன்ற கவித்துவமான அவதானிப்புகளும், வரிகளும் நூல் முழுக்க இருக்கின்றன. அதனாலயே வாசகர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் கிட்டுகிறது. அபுனைவு எனும்போதும் நூலில் தொய்வே இல்லை.       
O
கல்யாண்ஜியின் கவிதைகள் குறித்த கட்டுரையே இத்தொகுப்பின் சிறந்த கட்டுரை என்று நான் சொல்வேன்.
கனியும் உங்களுடையதல்ல/புழுவும் உங்களுடையது அல்ல/ இந்த/கனிவு மட்டுமே உங்களுடையது” –கல்யாண்ஜி.
மணல் உள்ள ஆறுபுத்தகத்தில் வரும் இக்கவிதையை வாசித்தபோது சுமைப் போல் பாரமாக ஒரு ஏக்கம் வந்து என்னில் சேர்ந்து கொண்டது. நான் அவ்வரிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் அவற்றை வாசித்து பார்த்தேன். சடுதியில் ஏக்கம் மறைந்து எனக்குள் ஒரு பெரிய நம்பிக்கை வந்தது. கைக்கு எட்டுகிற தொலைவிலேயே பேரானந்தம் மிக்க ஒரு வாழ்க்கை இருப்பது போல.மனதை இழுத்து பிடித்து இன்னும் சில அடிகள் நடந்தால் அதை அடைந்துவிடலாம் என்பது போல. கல்யாண்ஜிக்கு மானுடத்தின் மேலிருக்கும் நம்பிக்கையை எண்ணி நான் அப்போது ஆச்சர்யத்தில் நெகிழ்ச்சி அடைந்தேன்.
பூனை எழுதிய அறைபற்றிய இசையின் கட்டுரையிலும் அதே நெகிழ்ச்சி இருக்கிறது கல்யாண்ஜியை அவர் ஒரு நன்நோய்த் தொற்று என்கிறார். அக்கட்டுரையே ஏதோவோர் அதிசயத்தை பற்றிய விவரனை போலதான் இருக்கிறது. எப்போதோ தொலைத்துவிட்ட ஒரு அரிய பொருளை நீண்டகாலம் கழித்து திரும்ப பார்ப்பதுப் போல் இசை, கல்யாண்ஜியின் கவிதைகளில் தெரியும் அன்பையும் வெளிச்சத்தையும் தொட்டுத் தொட்டு பார்க்கிறார். அவர் பக்கத்தில் நின்றபடி அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் நான் சொல்கிறேன். “ஆம்,நாம் அதை கண்டுபிடித்துவிட்டோம்”.
O
நான் முன்னரே சொன்னதைப் போல் இசையின் கட்டுரைகள் தர்க்கங்களுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் பெரும்பாலும் உணர்ச்சிகளையே முதன்மையாக கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாக அவரது கட்டுரைகள் பெறும் அனுகூலங்களில் முக்கியமானது வாசிப்பின்பம். அவரது கட்டுரைகளில் அலுப்பே தெரிவதில்லை. ஆனால் உணர்ச்சிகளுக்கென்று சில பலவீனங்கள் உள்ளன. அவை எளிதாக ஒரு பக்கச் சார்பை உண்டு பண்ணிவிடுகின்றன. இசையின் கட்டுரைகளில் உறுத்தலாக தெரிவதும் இதுவே.
ஒவ்வொரு கவிஞரை பற்றி எழுதும்போதும்அவர் இதை சொல்கிறார்.அதை சொல்கிறார்என்று இசை தொடர்ந்து கவிதை துணுக்குகளை வரிசைப் படுத்திக் கொண்டேயிருக்கிறார். அனுபவ பகிர்தல் அப்படிதான் இருக்க முடியும் என்றாலும் இசை கவிஞர்களின் பக்கமாக தன்னை ரொம்பவே சாய்த்துக் கொள்கிறார்.ஏறக்குறைய கவிஞர்களின் குரலாகவே தன்னை மாற்றிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் கவிதைகளில் அவர் தன் சுய அனுபவங்களை கண்டு கொள்கிறாரா அல்லது தன் சுய அனுபவங்களை கவிதைகளின் மீது ஏற்றுகிறாரா என்றே சந்தேகம் வந்து விடுகிறது.சில சமயங்களில் எளிய வரிகளைக் கூட அவர் மிகைப் படுத்தியே காட்டுகிறார்.
விமர்சனங்களை முன் வைப்பதிலும் அவருக்கு தயக்கங்கள் இருக்கின்றன. கல்யாண்ஜியின் கவிதைகள் பற்றிய ஒரு சிறு விமர்சனத்தை சொல்ல அவ்வளவு பெரிய பீடிகை தேவையா என்பதையும் இசை யோசிக்க வேண்டும். படைப்பாளிகளின் மீதும் விமர்சகர்கள் கருணையோடு இருந்தாலும் காலம் நிச்சயமாக கருணையோடு இருக்காது.
O
இத்தொகுப்பின் மீது எனக்கு ஒரு பெரிய மனக் குறை உண்டு.இசை நினைத்திருந்தால் நவீன கவிதைகளின் இன்றைய நிலை பற்றிய ஒரு முழுச் சித்திரத்தை இந்நூலில்  உருவாக்கியிருக்க முடியும். ஆனால் இசை அப்படி செய்யாமல் துண்டு துண்டாக சில பகுதிகளை மட்டுமே அடையாளம் காட்டுகிறார். நிறைய விஷயங்களை அவர் தொட்டுக் கூட பார்க்கவில்லை.
இன்றைக்கு எழுதுகிற பல கவிஞர்களின் வரிகள் நினைவிலேயே தங்குவது கிடையாது. நினைவில் பதியும் வரிகளை தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. சிலரிடம் சல்லடைப் போட்டு தேடினாலும் ஒன்றுமே அகப்படுவதில்லை. கவிதையின் அனுபவம் வாசிப்போடே நின்றுவிடுகிறது. இல்லையென்றால் மங்கலான ஞாபகம் போல் சில காட்சிகள் தட்டுபடுகின்றன.நினைவில் நிற்கும் வரிகளே கிடையாது. ஒரு நல்ல கவிதை வரி என்பது ஒரு வகையில் புத்திசாலித்தனமான வரிதான். மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்கவிதை எழுத MADNESS மட்டும் போதாது BRILLIANCE-உம் வேண்டும்என்று.
போன தலைமுறைக் கவிஞர்களிடம் இப்பிரச்சனை அதிகம் இருந்த மாதிரி தெரியவில்லை. இந்த தலைமுறையிலும் முகுந்த் நாகராஜன் போன்ற ஒரு சிலரின் வரிகள் நினைவில் அழுத்தமாக பதிந்துவிடுகின்றன. ஆனால் பெரும்பான்மையான கவிதைகளில் மேதமையோடுக் கூடிய உணர்ச்சி வேகம் இருப்பதில்லை. ஒரு வேளை இது என் வாசிப்பின் பிரச்சனையா என்றும் தெரியவில்லை. ஜே.பி.சாணக்யாவின் கதையில் வரும் வசனம் ஞாபகம் வருகிறது, “அழகானவர்களை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதில்லை.மனதில் நிரம்பிவிடுவார்கள்”. அழகான பெண்களைப் போல் மனதில் நிரம்பும் கவிதை வரிகளையே நான் விரும்புகிறேன்.
அதே மாதிரி இன்றைய கவிதைகளில் இருக்கும் இன்னொரு பிரச்சனை, மொழியிலும் உள்ளடக்கத்திலும் தனி அடையாளங்கள் இல்லாமல் இருப்பது. எந்த கவிதை யாருடையது என்று தெளிவாக சொல்லவே முடிவதில்லை என்று ஜெயமோகன் கூட ஒரு முறை தன் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் இசை மேற்கோள் காட்டும் கவிதை வரிகளையே எடுத்துக் கொள்ளலாம். அவற்றை பெயர் மாற்றிப் போட்டாலும் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதே சுகுமாரனின் கவிதையையோ தேவதச்சனின் கவிதையையோ ஒரு நாளும் நாம் அப்படி செய்ய முடியாது.
இது போல் இன்னும் பல விமர்சனங்கள் நவீன கவிதைகளின் மீதுண்டு. அதீதமான சோர்வு, நம்பிக்கையின்மை, எதிர்மறை சிந்தனைகள் என நவீன கவிதைகளை பிண்ணியிருக்கும் தளைகள் ஏராளம். இசை இவற்றை பற்றியெல்லாம் அதிகம் பேசவே இல்லை. சில இடங்களில் பேச நேரும்போதும் கவிஞர்களின் பக்கம் நின்று சமாதானங்களை மட்டுமே சொல்கிறார். இங்கே மனுஷ்யபுத்திரனின்எப்போதும் வாழும் கோடைநூலை குறிப்பிடவேண்டும். அதில் இருக்கும் கறார்த்தன்மையும் முழுமையும் இதில் இல்லை என்பது எனக்கு வருத்தமான விஷயம்தான்
இசை இதையெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. கூடவும் கூடாது. அவரே படைப்பாளர்களின் சுதந்திரத்தில் அடுத்தவர் தலையிடுவதை தீவிரமாக மறுத்து எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு வாசகனாகஇதை நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்என்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் தொகுப்புகளில் என் கோரிக்கையை அவர் பரீசிலிக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா
O
கவிதைகள் பற்றிய விமர்சனங்கள் மட்டுமன்றி கணேசகுமாரன், திசேரா ஆகியோரின் சிறுகதை தொகுதிகள் குறித்த கட்டுரைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. இக்கட்டுரைகளை எழுதும்போது கவிஞன் என்கிற இடத்திலிருந்து இசை இறங்கி வந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். கவிதைக் குறித்த அவரது கட்டுரைகளில் இருந்து பிரிந்து இவை தனித்து தெரிகின்றன. தனக்கே உரிய பகடியான மொழியில் மிகவும் காத்திரமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.  
இவையல்லாமல் எம்.கே.டி பற்றிய ஒரு கட்டுரையும், பெருமாள் முருகனின்வான்குருவியின் கூடுபற்றிய மதிப்புரையும், “ஏன் எழுதுகிறேன்?” என்று ஒரு அனுபவக் கட்டுரையும், கொம்பு இதழில் வெளியான ஒரு நேர்க்காணலும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இதில்வான்குருவியின் கூடுபற்றிய மதிப்புரை மிகவும் விரிவான  நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது. நூலிற்கான நல்ல அறிமுகத்தையும் வழங்குகிறது.
இசையின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிற எல்லோருக்குமே எம்.கே.டியின் மீதான அவருடைய காதல் கண்டிப்பாக தெரிந்திருக்கும். எம்.கே.டி பற்றிய கட்டுரை அதன் அழுத்தத்தை இன்னும் அதிகப்படுத்தி காண்பிக்கிறது. இசையினால் உந்துதல் பெற்று நானும் எம்.கே.டியின் சில பாடல்களை தரவிறக்கி அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்றைக்காவது ஒரு நாள் அவர் என் சித்தத்துள்ளும் தித்திப்பார். என் நாட்களையும் வெளுத்து தருவார் எனும் நம்பிக்கையில்.

O

No comments: