Skip to main content

நாசமாய்ப்போன மலர்

                                           
                                                        


   


     காஹா சத்தசஈ மகாராஷ்டரி பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 700 காதல் பாடல்களைக் கொண்ட நூல். இது கி.பி. 200 க்கும் 450 க்கும் இடையில் ஆந்திரா- மகாராஷ்டிரப் பகுதியில் இருந்து தோன்றியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதை எழுதியது ஹால என்கிற ஆந்திர தேசத்து அரசனென்று ஒரு கருத்தும், இது ஒரு தொகை நூலே என்று இன்னொரு கருத்தும் நிலவுகிறது. இந்நூலுக்கு எழுதப்பட்டிருக்கிற பழைய சமஸ்கிருத உரைகளிலிருந்து இத்தொகை நூலில் இடம் பெற்றிருக்கும் கவிஞர்களில் அறுவர் அல்லது எழுவர் பெண்பாற் புலவர்கள் என்பதையும் அறிய முடிகிறது.
    
  காஹா சத்தசஈ யில் இருந்து 251 பாடல்களை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள் சுந்தர்காளி, பரிமளம்சுந்தர் இருவரும். இதில் நமது சங்க அகப்பாடல்களின் எதிரொலிகளைக் காணமுடிகிறது. மொழிபெயர்ப்பாளர் சில ஒப்புமைகளைக் குறிப்பிடுகிறார். அதுவன்றியும் நிறையவே தென்படுகின்றன. அவற்றைக் காண நேர்கையில் நமது பழந்தமிழ் கவிவளம் குறித்த மிதப்பு தோன்றுகிறது. பாட்டனார் புகழ் பாடுகையில் வாய் தானாகவே இனித்து விடுகிறது.தவிரவும், திடீரென எதிர்ப்படும் பழைய சிநேகிதரொருவரை ஆரத்தழுவி இன்புறும் மகிழ்ச்சியும் தோன்றுகிறது.
 
  குறுந்தொகை, கலித்தொகை, ஐந்திணை ஐம்பது போன்ற சங்கப்பாடல்களின் சாயல்கள் தென்படுவது போன்றே, காலத்தால் பிந்தைய தமிழ் பாடல்களின் சாயைகளும் இதில் தென்படுகின்றன.

     அவளுடலில் முதலில் எந்தப் பாகத்தில் கண் பதிகிறதோ
     அதைவிட்டு நகர்வதில்லை
     அவள் முழுவுடலை எவரும் என்றும் கண்டதில்லை.
                                                   ( பாடல் : 122 )

என்கிறது ஒரு பாடல். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இப்பாடலில் 12 – ஆம் நூற்றாண்டு கம்பன் ஒளிந்து கொண்டு   “ தோள் கண்டார் தோளே கண்டார்...” என்று சொல்லிச் சிரிக்கிறான்.

காமத்துப்பாலின் சாயைகளும் இதில் நிறையவே தென்படுகின்றன.

 “ ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
   தாஅம் இதற் பட்டது “

         என்கிறது ஒரு குறள்.

 தலைவி எல்லாப் பழிகளையும் தன் கண் மேல் தூக்கிப் போட்டு விடுகிறாள். ‘ நீ தானே அன்று அவனை அவ்வளவு ஆசையோடு நோக்கிக் களித்தது. இன்று நீயே கிடந்து அழு ’ என்று சபிக்கிறாள். சத்தசஈ யின் தலைவியோ தன் கண்ணைத் தழுவிக் கொண்டு நன்றி பாராட்டுகிறாள்.

      ஓ என் இடக்கண்ணே !
      நீ துடிப்பதால் அவன் திரும்பிவருவது உறுதியெனில்
      உன்னால்தான் பார்ப்பேன் அவனை ஒரேயடியாக
      வலக்கண்ணை  மூடியபடி.
                                   ( பா : 12 )

        என் இதயத்தில்
        உன்னையும் உன் பதிய காதலியையும்
        சேர்த்துத் தாங்க வேண்டியிருக்கிறது
        நான் ஏன் ஓய்ந்து போகிறேன் என்றா கேட்கிறாய் முட்டாளே?
        மிதமிஞ்சிப் பாரமேற்றினால் காளைமாடும் கூடக்
        களைத்துப் படுத்து விடும்
                                        ( பா : 154 )
என்கிறது ஒரு பாடல். எனக்கு  “தனிப்பாடல் திரட்டில்” சொக்கநாதப்புலவரின் பாடலொன்று நினைவில் தோன்றி இனிக்கிறது.

   நங்கை ஒருத்தியையும் நாமிருவர் மூவரையும்
   பொங்கு அமளி பொறுக்குமோ
   சங்கம் குலைய விரால் பாயும் குருநாடர் கோவே
   பழையவரால் என்ன பயன்.

   படுக்கையில் இருக்கும் தலைவனுக்கு பரத்தையின் மேல் நினைப்பு போகிறது. இதை அறிந்து கொண்ட தலைவியின் பாடல் இது. நான், நீ, அவள் என்று மூன்று பேரின் கனத்தையும் இந்தக் கட்டில் கால்களால் தாங்க முடியுமா சாமி ? என்று குறும்பு பேசுகிறாள்.

    கவிமனம் கால, இடங்களைத் தாண்டிப் பாய்வது தானே ?



               







   இந்த நள்ளிரவில் புலியும், யானையும் திரியும் காட்டு வழி கடந்து என்னைக் காண நீ என் வீட்டிற்கு வர வேண்டும். அப்படி நீ வருவது என் மனத்தை மிகவும் நடுக்கி வருத்துகிறது ’ என்று சொல்லும் தலைவியை நாம் சங்க மரபில் பார்க்கிறோம். இதிலோ பெண் நள்ளிரவில் நடுக்காட்டில் காதல் செய்கிறாள்

    இன்றிரவு
    காரிருட்டில் சென்று கலக்க வேண்டும் அவனை என்கிறாள்
    விழிகளை இறுகமூடியபடி
    வீட்டை வலம்வந்து ஒத்திகை பார்க்கிறாள்
                                               ( பா : 47 )

   தொட்டுக் கொள்வதைக் காட்டிலும் தொட்டுக் கொள்வதற்கான நாடகங்கள் சுவாரஸ்யமானவை. கிறங்கடிப்பவை. நெஞ்சழிப்பவை. இவன் வேண்டுமென்றே தண்ணீரை கீழே வழிய விடுகிறான். அவள்  வேண்டுமென்றே ஊற்றும் நீரின் அளவைக் குறைக்கிறாள். இப்போது இருவரும் காமத்தின் சுவைமிகு பாத்திரங்கள். நடப்பது அதிரஸக் காட்சி.


  தண்ணீர் பந்தலில் நீரூற்றும் அவளையே
  கண்களை உயர்த்தி நோக்கியபடி
  விரல்வழியே நீரை வழியவிட்டுக்
  காலங்கடத்துகிறான் பயணி.
  அவளோவெனில்,
  ஏற்கனவே கொஞ்சமாய் வடியும் நீரை
  இன்னும் குறைக்கிறாள்.
                                   ( பா : 9 )

  ஒரு சுவாரஸ்மான காட்சியை காட்டுவதுடன் நிறுத்திக் கொள்கிறது ஒரு கவிதை. ஆனால் அதை அகப்பொருள் சார்ந்து சிந்திக்கையில் நுட்பமான இடங்கள் திறக்கின்றன.


 மாமி,
 ஒரு தாமரைக்கும் சேதமில்லை
 ஒரு வாத்தும் அஞ்சிப் பறக்கவில்லை
 ஆனால்,
 யாரோ ஒரு மேகத்தை பின்னாலிருந்து தள்ளியிருக்கிறார்கள்
 ஊர்குளத்தினுள்
                                    ( பா : 139 )

  தடயங்கள் ஏதுமின்றி அவ்வளவு ரகசியமாக யார் அவள் நெஞ்சத்துள் காதலைத் தள்ளி விட்டது. குளம் எவ்வளவு முரண்டு பிடித்தாலும் மேகம் விலகி விடாதல்லவா?

   தமிழ் மரபு தலைவனுக்கும், தலைவிக்கும் கறாரான இலக்கணங்களைச் சொல்கிறது. “ ஒத்த கிழவனும்,கிழத்தியும் காண்ப...” என்கிறது தொல்காப்பியம். “ செல்வத்தானும், குலத்தானும்,ஒழுக்கதானும், அன்பினானும் ஒத்தார்..” என்று இதற்கு உரை சொல்கிறார் இளம்பூரணர். சத்தசஈ யில் இப்படியான இலக்கணங்கள் ஏதுமில்லை..


      பிச்சையேற்கும் துறவி அவள் உந்திச்சுழியையே
                                       உற்றுப்பார்கிறான்
     அவளோ, அவன் பிரகாசமான முகத்தைப் பதிலுக்கு
                                                      நோக்குகிறாள்
     அவள் கை உணவும் அவன் கை உணவும்
     காக்கைகளுக்கு இரையாகின்றன.
                                              ( பா : 10 )


   சத்தசஈ கவனத்துக்குள்ளாவது அதன் “ பெருந்திணை” இயல்பால்தான். தமிழ்மரபில் கற்பு  பெண்ணின் அத்யாவசிய அணிகலன். சத்தசஈ யிலோ  “ சோரம் போகிற பெண் “ முக்கியப் பாத்திரமாக இடம் பெறுகிறாள். தமிழ்மரபில் இல்லாத “ பயணி” என்கிற பாத்திரம் ஒன்று இதில் இடம் பெறுகிறது. பொல்லாத பயணி இவன். நைஸாக “ தலைவனாகி ” விடுவதில் வல்லவன்.

   சங்கப்பாடல்களை ஊன்றி வாசித்த ஒருவனுக்கு இதன் காதல் சித்திரங்கள் பெரிதாக உவகையூட்டாது. ஏனெனில், அவற்றை அவன் ஏற்கனவே வாசித்து விட்டான். ஆனால் கலவியின் காட்சிகள் அவன் காணாதது. ஒரு வகையில் காண விரும்பாதது. எனவே கொஞ்சம் திகிலூட்டத்தான் செய்யும்.
   
          சோரம் போகிற மனைவி
          பருத்திக் காட்டை உழும் முதல் நாளில்
          கலப்பைக்குத் திலகமிடுகையில்
          நடுங்குகிறது அவள் கை
          வேட்கை மீதூர.

                                              ( பா :230 )
அதாவது உழுது பயிரிட்டு செழித்து வளர்ந்து நிற்கும் செடி மறைப்பில் சோரம் போகிற  வேட்கையைப் பேசுகிறது பாடல். கற்பையும், உழவையும் உச்சத்தில் வைத்துப் போற்றும் தமிழ் மனம் கொஞ்சம் நடுங்கித்தான் போகும். என்ன செய்ய ? உலகில் பிற மனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவை கவிதை செய்யவும் செய்கின்றன.

    “ எதுவுமே நம்ம கையில் இல்ல சார்.. “ என்பது லெளகீக வாழ்வின் நல்லதொரு ஆறுதல் மொழி. ஆம்.. சமயங்களில் எல்லாமே காமத்தின் கைகளில்தான் இருக்கிறது.

     இவள்தான் அரைமனசோடு அந்தப் பயணிக்குப்
     படுக்க கொஞ்சம் வைக்கோல் கொடுத்தாள்
     மறுநாள் காலை
     அதே வைக்கோலைக் கூட்டிப் பெருக்குகிறாள்
     கண்ணீர் சிந்தியபடி.
                               ( பா :220 )

   தொல்காப்பியம்  பெருந்திணையை “ தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்” என்கிறது. அதாவது தேற்றியும். ஆற்றியும் அடங்கச் செய்ய இயலாத காமம்.
  இந்தப் பெருந்திணை கவிதைகளை வாசிக்கையில் பெருந்தேவியின்  கவிதைகள் சில நினைவில் வந்தன. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கிற இந்தக் கவிதைகளுக்கும் அவன், அவள், கந்தசாமி, லதா போன்ற படர்கைப் பதங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.நானும் என்னுடைய சில கவிதைகளை பாதுகாப்பு கருதி தன்மையிலிருந்து படர்க்கைக்கு மாற்றியிருக்கிறேன். ஆனால் சத்தசஈ யின் பல கவிதைகள் தன்மையில் பேசுகின்றன. இது ஒரு ஆச்சர்யமூட்டும் அம்சம்தான்.

   விசுவாசமான மனைவிமார்
   என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும்
   நான் அவருடன் படுப்பதில்லை.
   அவருடன் படுக்கும்போது கூட.
                  ( பா : 68 )

   இந்தச் சிக்கலை நவீன காலத்து தலைவன் எப்படியோ தெரிந்து கொண்டான். எனவே  புணர்ச்சியின் போது தன் பெயரை உச்சரிக்க சொல்லி துன்புறுத்தத் துவங்கி இருக்கிறான். வாயில் உன் பெயரை உளறிபடியே, நெஞ்சத்துள் அவன் நாமத்தை முத்தி எடுக்க முடியாதவளா அவள்? சிந்தையை வன்புணர்வு செய்ய முடியாத தம்பி.

 மல்லிகை  இதில் “ நாசமாய்ப்போன மலர்” என்று ஏசப்படுகிறது. நான் மல்லிகையை ஏதோ நவீன காலத்து தொந்தரவுகளில் ஒன்று என எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் அது பிறப்பிலிருந்தே கொடுமதி கொண்டதுதான் போலும். இதற்கும் மாறனின் மலரம்புகள் ஐந்தில் இந்தச் சனியன் கிடையவே கிடையாது. இது எப்படியோ குறுக்கு வழியில் அரியணையேறிவிட்டது. மல்லிகையில் கால்தடுக்கித் தவறினால் அதலபாதாளம் காத்திருக்கிறது.

  காமத்தின் கொள்ளிவாயில் எரிந்தடங்க விரும்பாது அதை எதிர்த்து நிற்கும் முயற்சியையும், அதனூடான ஊசலாட்டங்களையும் அரிதாக ஒன்றிரண்டு பாடல்களில் காண முடிகிறது.

   வயலுக்குப் போகமாட்டேன்
   கிளிகள் நெற்கதிர்களையெல்லாம் கவர்ந்து போனாலும்  போகட்டும்
   அங்கே போனால்
   நன்கு தெரிந்த ஊருக்கு
   நன்கு தெரிந்த பாதையை
   விசாரிக்கிறார்கள் பயணிகள்
                                            ( பா : 218 )


ஊர் முழுதும் இளம்பையன்கள்
வசந்தம்
இளமை
வயதான கணவன்
கடுங்கள்
இன்னது செய்யென்று சொல்ல யாருமில்லை.
வழி தவறாதிருக்க ஒரே வழி
சாவதுதான்

                                       ( பா : 197 )


   பழந்தமிழ் சொற்களைப் பெய்து , அதே சமயம் சத்தசஈ யின் நாட்டுப்புறத்தன்மையையும் கைவிட்டு விடாது  செய்யப்பட்டிருக்கிற நல்ல பெயர்ப்பு என்றே இதைச் சொல்ல வேண்டும். முந்தைய மொழி பெயர்ப்பில் சில கவிதைகளை வாசித்துப் பார்த்த வகையில் எனக்கு இந்தப் பெயர்ப்பே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆனால் “ தூரதேசம்” ,    “எழுதுகோல்”  என்கிற சொற்களில் இருக்கும் பழைய வாசனை “ வெளிநாடு” , “ பேனா” என்கிற பெயர்ப்புகளில் தவறிவிடுகிறது.

   ஓ, காலம் கடந்து விட்டது
   அந்த இளைஞன்
   உணர்ச்சி கொப்பளிக்கும் கவிதைகளில் களைப்புற்று
   இப்போது சட்டம் படிக்கிறான்.
   நாங்களோவேனில்
   எங்கள் கணவன்மாருக்கு விசுவாசமாய் இருக்கிறோம்.
                                                          ( பா :248 )


கவிதைக்குள் ஒழுங்காக அமர்த்தப்படும் அநீதி ,  நீதி போன்றே ஒலிப்பதின் மர்மம்தான் என்ன ?

( காஹா சத்தசஈ -   தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள் – மொழியாக்கம்: சுந்தர்காளி, பரிமளம் சுந்தர்- அன்னம் வெளியீடு – விலை ரூ: 100)


                             நன்றி : காலச்சுவடு : நவம்பர் - 2018

Comments

Chandrakumar said…
மிக அருமையான குறிப்புகள்; படித்து, ரசித்து பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆங்கில மூலப் புத்தகத்தின் பெயர் தர முடியுமா? அல்லது காஹா சத்தசஈ என்பதை ஆங்கிலத்தில் தர முடிந்தால் நன்றாக இருக்கும்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம