ஒரு காம்பவுண்டு வரிசை வீட்டை
எதேச்சையாகக் கடக்கும்படியாகிவிட்டது.
கிரிக்கெட் பந்தெனச்
சீறி வந்து
தலையைத் தாக்கியது ஒரு சொல்.
" மூடு..."
ஜன்னலில் தெரிந்தாள் ஒரு பதுமை
உண்மையில்
அவள் அதை அவ்வளவு சத்தமாகச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால்
அவ்வளவு சத்தத்தில் ஒலித்துவிட்டது.
அவள் கூனிக்குறுகிப் போய்விட்டாள்.
விருட்டெனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்
ஒரு கையை மட்டும்
வெளியே நீட்டி
ஜன்னலை அடித்து
தன்னைச் சாத்திக் கொண்டாள்
செல்லமே!
"மூடு" கூட இல்லாமலா
வீட்டில் இருக்க முடியும்?
" மூடு" கூட இல்லாமலா
குடும்பத்தில் இருக்க முடியும்?
" மூடு" கூட இல்லாமலா
உறவில் இருக்க முடியும்?
"மூடு" கூட இல்லாமலா
உயிரோடிருக்க முடியும்.
மூடாதே திற!
Comments