Skip to main content

வதனப் புத்தகம்

 



ன் வாழ்கிறோம்

என்றே தெரியாமல்

வாழ்ந்து வரும்

கோடிக்கணக்கான மனிதர்களைப் போலே

இந்த  ப்ளூ லைக் 

இங்கே வாழ்ந்து வருகிறது.


கனவான்கள் கொஞ்ச நாட்கள் 

கைக்கொண்டுவிட்டு

கனவானாகவே நீடிக்க முடியாத ஆத்திரத்தில்

அவர்களும் அதை கைவிட்டு விட்டார்கள்.


அதை யாரும் காண விரும்புவதில்லை


அதனோடு இரண்டு வார்த்தை பேச நாதியில்லை.


கல்யாணங் காச்சிக்கு அழைப்பதில்லை.


நீலத்தில் ராசிக்கல் வைத்து 

மோதிரம் அணியும் மாந்தர்க்குக்  கூட

அது நல்ல சகுனமில்லை.


உலகின் முன்னணி மூளைகள்

இணைந்து உருவாக்கிய ஒன்றை

"உயிரற்ற சடம்"  என்று

நேற்றொருவள்  ஏசக் கேட்டேன்.


எல்லோரும்

சிவந்த இதயத்தால் அன்பு செய்து கொள்கிறார்கள்.


சிவந்த இதயத்தால் 

"காலை வணக்கம் "சொல்லி

அதனாலேயே  "இரவு வணக்க"மும்

சொல்கிறார்கள்


இரத்த வேட்கை அலையடிக்கும் சிவப்பால்

இறுக அணைத்து  முத்தமிட்டுக் கொள்கிறார்கள்


இரண்டு சிவந்த இதயங்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் சில

ருதுவாகி அமர்ந்திருக்கின்றன 

இப்போது.


'ஆலோலம் பாடி' யில் வரும்

அநாதைச் சிறுவனின் முகத்தோடு

இந்த ப்ளூ லைக்

இங்கு 

என்னதான் செய்து கொண்டிருக்கிறது?


ஆதரவாய்க் கைபற்றி  அதை

இந்த ஊருக்கு வெளியே விடப் போகையில்

துளிர்த்த கண்ணீரில் நமட்டுச் சிரிப்பு கலந்து

அது என்னிடம் சொன்னதை

நான் உங்களிடம் 

சொல்லிவிடவே கூடாது என்று எண்ணியிருந்தேன்


ஆயினும்

உண்மை என்றேனும் ஒரு நாள்

வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்?


"அந்த சிவந்த இதயமும் நான்தான் என்பதை அறிய நேரும் போது 

நீங்கள் என்ன ஆவீர்கள்?"




Comments

This comment has been removed by the author.

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...