அது பெருந்தொற்றுக் காலம். அப்பன் சாவுக்கு மகன் போகாத காலம். அன்னைக்கும் பிள்ளைக்கும் இரண்டடி இடைவெளி இருந்த காலம். உடைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டதற்காக ஓருடல் ஈருயிர்கள் சண்டை செய்து கொண்ட காலம். கடவுள்கள் தங்கள் கதவுகளை இழுத்துச் சாத்திக் கொண்ட காலம். உலகம் வீட்டுக்குள் சுருங்கிக் கிடந்த காலத்தில் நான் வெளியேதான் சுற்றிக் கொண்டிருந்தேன். வழக்கத்தை விட அதிகமாகச் சுற்ற வேண்டியிருந்தது. எனது பணி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர். தினமும் நோயாளிகளை தொட்டுச் சந்திக்க வேண்டிய பணி. புற நோயாளிகளில் மறுநாள் கோவிட் நோயாளியாக ஆகப் போகும் பலரும் இருப்பர். இரட்டை மாஸ்க் போட்டுக் கொள்ளச் சொல்லி வல்லுநர்கள் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். நோய்க் கிருமி எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி உயிர்களை உண்டு கொண்டிருந்தது. பொது மக்கள் நோயாளிகளைப் பார்க்கும் அதே பீதியோடுதான் மருத்துவர்களையும், மருத்துவமனை ஊழியர்களையும் பார்ப்பபார்கள். ஏனெனில் நாங்கள் நோய்ப் பரப்பின் அபாயத்தில் உள்ள ஆட்கள். நான் வீதியில் போகையில் முட்கள் மு...