போலிஸ் ஸ்டேசனில் ஒரு முறை மண்டியிட்டுள்ளேன் பஞ்சாயத்துப் போர்டு கிளர்க்கின் முன் ஒரு முறை ஒரு முறை தாசில்தார் அலுவலகத்தில் அமர்ந்த பாவனையில் விழுந்து கிடந்துள்ளேன் அந்த தணிக்கை அதிகாரி என் கோணல் சிரிப்பை பூட்ஸ் காலை நாவால் நக்குவது என்று சரியாகவே புரிந்து கொண்டார் அதனால் "போ" என்று விட்டுவிட்டார். பெரிய அரிவாளின் முன் ஒரு முறை எச்சில் விழுங்கி இருக்கிறேன் குருட்டு தெய்வங்களின் காலில் சில முறை விழுந்து கிடந்துள்ளேன் விட்டுவிடச் சொல்லி நீதி நெறி நூல்களின் முன் அழுது அழுது அரற்றியுள்ளேன் உன் முன் மண்டியிடுவது கமலப் பொய்கையுள் மெல்லச் சரிவது ரோஜாவாகி ரோஜா அளிப்பது கனத்த எடையால் துவளும் என்னை சற்றே இறக்கி வைப்பது |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments