Skip to main content

Posts

Showing posts from November, 2023

ஒத்தையடிப் பாதை

  நா ன் போகட்டுமென்று அவர் நின்று கொண்டிருக்கிறார் அவர் போகட்டுமென்று நான் நின்று கொண்டிருக்கிறேன் நான்தான் போக வேண்டுமென்று அவர் சிரித்துக் கொண்டு நிற்கிறார். அவரே போகட்டுமென்று நான் அடம்பிடிக்கிறேன் இந்தப் பத்து நொடித் தாமதத்தை பையில் போட்டு அலுவலகத்திற்கு எடுத்துப் போனேன். அம்மா கொடுத்தனுப்பிய குளோப் ஜாமூன் மறைந்து போய்விட்டதோவென டிபன் பாக்ஸை திறந்து திறந்து மூடுகிறான் ஒரு சிறுவன்.

பஸ் டிரைவரின் " play list"

இ தோ இந்த டிரைவர் ஒலிக்கவிடும் பாடல்கள் ஏற்கனவே எண்ணிறந்த முறைகள் கேட்டவை. ஆயினும் அவை திடீரென வருகின்றன திடீரென வருதலின் ஆனந்தத்தோடு என்னிடம் மேம்படுத்தப்பட்ட  ஒலிநுட்பக் கருவிகள் உண்டு 'அன் லிமிடெட் டேட்டா' வுள்  உலகம் கொட்டிக் கிடக்கிறது. தவிர என்னிடம் ஒரு சிறிய கார் உண்டு என்னால் காற்றைப் பறிக்க இயலும் குளுமையைக் கூட்ட இயலும் இன்னும் என் கைவசம் நிறையவே உண்டு கைவசம் உள்ள எல்லாவற்றின் மீதும் தொற்றிப் படர்ந்துவிடும் ஒன்றை ஊதி ஊதி துடைத்துக் கொண்டிருக்கிறேன். காகங்கள் மகிழ்ந்து கரையும் விருந்தோ இந்த ஓட்டுநன்! கை நிறையப் பலகாரங்களோடு முகம் முழுக்க ஜொலிப்போடு பள்ளத்துள் கிடக்கும் என் பெயரை  பறக்க விட்டபடி என் வீட்டிற்குள் நுழைய தெரியவில்லை எனக்கு.

கண் - கடைக்கண்

க டவுள் மனிதனுக்கு  முதலில் கண்களைப் படைத்தான்  பிறக்கப் பிறக்கவே அகலத் திறந்து கொண்டன கண்கள். மனிதன் மகிழ்ச்சியில் கூவினான். நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான். "கடவுளே! நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!" கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு பிறகு படைத்தான் கடைக்கண்ணை. * விஷயம்  மிக மிக எளிது ஒரு மனிதன்  இன்னொரு மனிதனை ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.     * தம்பி! இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்! மேலும் இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு! பார்த்துப் பார்த்து பழசாக்கு! பார்த்துப் பார்த்துப் பாழாக்கு! * காதலுக்குக் கண் இல்லை.  ஆனால் கடைக்கண் உண்டு. காதலர் கடைக்கண்ணிலிருந்து கண்களுக்குத் திரும்புவதுதான் "காதலின் ஆவியாதல்"  என்றழைக்கப்படுகிறது * கனக சுப்பு ரத்தினா! காணாமல் கண்டு கண்டு கடுகை மலையாக்குவதில் சமர்த்தன் உன் குமரன். அவனை நம்பி நீ "மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று சைக்கிள்  செயினைச் சுற்றாதே!  * கூற்றம்  !  கூற்றம் !  கூற்றம்...