இதோ இந்த டிரைவர் ஒலிக்கவிடும் பாடல்கள் ஏற்கனவே எண்ணிறந்த முறைகள் கேட்டவை. ஆயினும் அவை திடீரென வருகின்றன திடீரென வருதலின் ஆனந்தத்தோடு என்னிடம் மேம்படுத்தப்பட்ட ஒலிநுட்பக் கருவிகள் உண்டு 'அன் லிமிடெட் டேட்டா' வுள் உலகம் கொட்டிக் கிடக்கிறது. தவிர என்னிடம் ஒரு சிறிய கார் உண்டு என்னால் காற்றைப் பறிக்க இயலும் குளுமையைக் கூட்ட இயலும் இன்னும் என் கைவசம் நிறையவே உண்டு கைவசம் உள்ள எல்லாவற்றின் மீதும் தொற்றிப் படர்ந்துவிடும் ஒன்றை ஊதி ஊதி துடைத்துக் கொண்டிருக்கிறேன். காகங்கள் மகிழ்ந்து கரையும் விருந்தோ இந்த ஓட்டுநன்! கை நிறையப் பலகாரங்களோடு முகம் முழுக்க ஜொலிப்போடு பள்ளத்துள் கிடக்கும் என் பெயரை பறக்க விட்டபடி என் வீட்டிற்குள் நுழைய தெரியவில்லை எனக்கு. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments