முதல் முறை பார்த்த போது ஊரும், பேரும் விசாரித்தேன் என்பது தவிர உறவேதுமில்லை இப்போது ஊர் மட்டும் நினைவிருக்கிறது இடையில் சில மாதங்கள் காணாமல் போய்விட்ட அந்த வளரிளம் சிறுவன் இன்று மீண்டும் தென்படுகிறான் கருத்த வதனத்தின் நெற்றிப் பொட்டில் சந்தனத்தின் பொன் ஊஞ்சல் அன்று போலவே ஆடிக் கொண்டிருக்கிறது என்னை தூரத்தில் கண்டதும் முகம் முழுக்க அரும்பி நெளிந்து குழைந்து நெருங்கி வந்து "சாப்பிட்டீங்களாண்ணே...?" என்றான். நேரம் அப்போது முற்பகல் 11: 30 ஆகவே அது காலை உணவைக் குறிக்காது மதிய உணவைக் குறிக்காது உணவையே குறிக்காது |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments