Skip to main content

Posts

Showing posts from May, 2024

ஒளி மாதிரி ஒன்று

  பு லராத  அதிகாலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் கூடி விட்டது. முதலில் அவர்கள் டோக்கன் வாங்க வேண்டும் அந்த டோக்கனைக் காட்டி  சீட்டு வாங்க வேண்டும் அந்த சீட்டைக் காட்டி மருத்துவரை வாங்க வேண்டும். மருந்துச் சீட்டைக் காட்டி  மருந்துகள் வாங்க வேண்டும் டோக்கன் கொடுக்கும்  அந்த ஒல்லிப்பெண் மருத்துவமனைக்கு வெளியே  எவ்வளவு பாவம் தெரியுமா? “ எங்கயோ அந்த மகராசிய இன்னுங் காணல…” என்று முனகுகிறார் ஒரு முதியவர். பிணி நீங்கும் முன்பே மருத்துவமனையை விட்டு   ஓடி விடுகிறவர்கள் எதிலிருந்து தப்பிக்கிறார்கள்? எல்லா முகங்களிலும்  அப்பிக் கிடக்கிறது கும்மிருட்டு கல்லிடுக்கில் எழுந்து கொண்டிருக்கும் கதிரவன்   மெல்ல வரட்டும் இப்போதைக்கு  நான் டியூப் லைட்களை போட்டு விடுகிறேன்.

மூன்று கவிதைகள்

ஓடுகிற பையன் எமோஜி நா ன் ஒரு இக்கட்டான தருணத்தில் அவனை வாட்ஸ் அப்பில் சந்தித்தேன் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு ஓடும் பையனாக சொல்லி ஆக வேண்டியதை சொல்லிவிட்டு ஓடும் பையனாக அவன் ஒரு பொடியன் என்பதால் “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது அவனுக்கு எளிது ஆகவே சொல்லியும் சொல்லாமல் இருப்பதில் அவன் சமத்தன் அவன் வெறுமனே ஒரு கேள்வி அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை ஆகவே எதையும் அவன் நின்று கேட்பதில்லை “இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..” என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த அப்பாவிச் சிறுவனவன், “சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு ஓடி விடுவான். நாசகாரக் கும்பல் எ னக்குத் தெரியும் இங்கு காணும் எல்லாத் துன்பங்களுக்கும் இந்தக் கவிஞர்கள்தான் காரணம் மண் மண்ணென்றிருந்தது இவர்கள் அதில் சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள் சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால் அதிலிருந்து நரகம் என்று ஒன்று தானே எழுந்து கொண்டது கண்ணெறிருந்த கண்ணில் இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள் இடையென்றிருந்த இடையில் வேலியில் படரும் கொடியைக் கொண்டு வந்து சுற்றி விட்டார்கள் பேசின...

செழு செழிப்பு

உ ச்சிப் புதர் மறைப்பில் ஒரு பூ குலுக்கம்  பார்த்தேன். அது அணிலோ புள்ளோ வானோ வளியோ அல்ல, நானே தானோ  

பார்த்தாயா?

கு லாவியபடியே  என்னைக் கடந்து செல்கிறார்கள் இரு தோழியர். தோள்களை உரசிக் கொண்டு க்ளூக், க்ளூக் என்று சிரித்துக் கொண்டு மெல்ல மெல்ல  நடந்து செல்கிறார்கள். பார்க்காமல் இருக்க இயலாத காட்சி அது எழ  வேண்டிய தருணத்தில்  சரியாக எழுந்த  வயலின் கீற்று போல் அவர் ஆட்காட்டி விரலிரண்டும் ஒரு சேர எழுந்து  தொட்டுக் கோர்க்கின்றன. " பார்த்தாயா"  என்பது போல் எழுந்து கொண்டிருக்கிறது உதயத்தின் புத்தொளி அவர்கள்  அப்படியே நடந்து நடந்து தூரத்தில் மறைகிறார்கள். நெருங்கி வருகிறது ஒரு இனிய துயர்

இசைக் கலைஞன் ‘போல’ ஆவது எப்படி?

பல்லில் பிரஷ் இடும் தாளம் பிரமாதமாக  இருப்பதை இன்றைய அதிகாலையில் அவதானித்தேன். கொஞ்ச நாட்களாக சப்தங்கள் துல்லியமாகியுள்ளன. இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட சப்தங்கள் என்று  சொல்வார்கள். எந்தச் சப்தத்தைக் கேட்டாலும் அதை ஒழுங்கு செய்ய முடியுமா? என்று தோன்றத் துவங்கியுள்ளது. பெரிய வித்வான்களுக்கு தோன்ற வேண்டிய  சிந்தனை. எனக்கும் தோன்றுகிறது.  சிந்தனைக்கு விவஸ்தையில்லை... முழு கட்டுரையை வாசிக்க:  https://akazhonline.com/?p=7167 நன்றி:  அகழ்