தூ ர தேசத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகள் வாரம் நான்கு ‘செல்பி” களை அனுப்புவாள் ஒரே முகமெனத் தோன்றினாலும் ஒரே முகமில்லை அதே முகம் போல் தெரிந்தாலும் பழைய முகமில்லை தொட்டிலில் கிடந்தவள் முதன் முதலாகக் கை நீட்டி என் மூக்கைத் தொட்டது போல ஒவ்வொரு படமும் என்னை எங்கெங்கோ தொடுகின்றன இந்த இரவில் அவள் செய்தியைத் திறந்து பார்த்த போது அங்கு அவளுக்குப் பதில் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு அந்தி பார்க்கிறேன்… பார்க்கிறேன்… பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் இதை அப்படி ஒரேயடியாக ‘செல்பி’யில்லை என்று சொல்லிவிட முடியாது.