Skip to main content

இசை கவிதைகள்



ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிறது

மரியாதை
மிகவும் மரியாதையானது

உயர்தரத்து வாசனை திரவியம்
பட்டுச் சரிகையின் டாலடிப்பு
வானளாவிய கட் அவுட்
கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம்

காதலோ
சேற்றுப் பன்றிகளின் கும்மாளம்
ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும்
இட நெருக்கடி

மரியாதையின்
பாதுகாப்பான இடைவெளியிலிருந்து
காதலின் கட்டற்ற களிப்பிற்கு
மெல்ல
அழைத்துச் செல்கிறது
ஒருமை

‘டா’ வும், ‘டி’ யும்
முதன்முறை
மூக்குரசிக் கொள்கையில்
சடசடத்ததெதுவோ
அதைத் தேடித்தான்
படுக்கையைக் கிளறுகின்றன
இரண்டு அம்மண உடல்கள்.


000


பார்த்திருத்தல்


“வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?”

என்று கேட்டான் ஒரு நண்பன்.

அந்தக் கேள்விக்கு
விரிவாக விடையளிக்கும் தோரணையில்

நானும்
அண்ணாந்து பார்த்தேன் வானத்தை

அவன்
பதிலறிவதற்காகக் கேட்கவில்லை.

நானும்
பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை

000



‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம்


எவனோ ஒருவன்
காற்றில்
ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான்

அது
ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது

கோப்புகள் கலைகின்றன
தாள்கள் படபடக்கின்றன

நிலம் குலுங்குகிறது
ஒருவரும் அலறவில்லை

கண்ணாடிகள்
உடைந்து நொறுங்கியதில்
பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

அசையாத உறுதியால்
சபிக்கப்பட்டிருந்த
படிக்கட்டுகள்
எழுந்து பறக்கின்றன

நாற்காலியின்
ஒரு கால் உடைந்து
தலைகுப்புறச் சாயும் ஒருவன்
தெய்வத்தின் மடியில்
சரிகிறான்

அதோ அந்த
இளநிலை நிர்வாக அலுவலர்
இதற்கு முன்பும்
எத்தனையோ முறைகள்
அழுது தீர்த்தவர்தான்

ஆனால்

ஏன் அழுகிறோம்
என்பதே அறியாமல்
அவர்
இப்படி அழுவது
இதுவே முதன்முறை.


நன்றி : அகழ் 

https://akazhonline.com/?p=9782


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...