பா டகர் பாடுகிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடிக் கொண்டிருக்கிறார் பாடகர் ‘பாடத்’ துவங்கும் தருணம் என்றொன்றுண்டு பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார் “ ஓ..” என்றெழுந்ததொரு வாத்தியம் “ம்” என்றொரு வாத்தியம் “ஆஹா..” என்று எங்கோ துள்ளியதொரு வாத்தியம் “ ச்….” கொட்டி மறைந்ததொரு வாத்தியம் “வாவ்..” வாய் திறந்து கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு தாயைத் திட்டி ஒரு கெட்ட வாத்தியம் பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள் செருப்புக் கால் வாத்தியங்கள் நெஞ்சத்து ஆனந்தம்…. அது ஒரு நிகரற்ற வாத்தியம் வாத்தியங்கள் கூடிக் கூடிப் பெருகியதில் மேடை கொள்ளவில்லை இதோ.. இந்த மேடை சமத்தில் சரிவதைக் காண்கிறேன் மேடை, அரங்கு என்று இரு வேறில்லை இப்போது