“சத்தியம் தோற்பதில்லை!" இதைச் சொன்ன போது என் நெஞ்சம் விம்மியது கண்கள் கொஞ்சம் கலங்கின முஷ்டி தானாகவே விண்ணை முட்டியது. "என்னையா அழைத்தாய்.."? என்று கேட்டு என்னை நோக்கி சத்தியங்கள் எழுந்து வந்தன. வெள்ளையில் கருப்பில் கருப்பு வெள்ளையில் பழுப்பில் ஆரஞ்சில் ஊதாவில் கலக்கவே முடியாத கலவைகளில் வானவில்லின் நிறத்தில் கூட ஒன்று இருந்தது. "என்னையா அழைத்தாய்...? இந்த முறை கொஞ்சம் சத்தமாக கேட்டன நான் அதைவிடச் சத்தமாய் அண்ணாந்து கூவினேன்... "எப்படியாயினும் ஏதோ ஒரு சத்தியம் தோற்பதில்லை" |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments