Skip to main content

மூன்று கவிதைகள்


உனது லட்சணம்

இந்த முறை
“போகிறேன்..” என்பதை
அவ்வளவு திடமான குரலில் சொன்னாள்

போய்விடுவாள்தான் போல?

எழுந்தவள்
எட்டு வைத்து
நடக்கிறாள்

பின்னோக்கி…
பின்னோக்கி…

உச்சிவெயிலில்
மொட்டைப் பாறையில்
நன்றாகச்
சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு
ஆயுளுக்கும் அசையாத கதியில்
அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்?



காலிப்பொன்

கனத்த செல்வமென
கொஞ்ச காலம்
உன்னை என் கைகளில்
ஏந்தியிருந்தேன்.

இந்தக் கைகளில்..
இதே கைகளில்..

காலியாகிக் கிடக்கிற
இதே கைகளில்

இப்பவும்
இவைதான்
வெறுங்கைகள் ஆகுமோ ?

கனத்த செல்வம்
சுடர்ந்த கைகள்



இளம் இசை மாணவனின் புத்துலகு

நான்குமுனைச் சந்திப்பின் மூலையில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இப்படி
‘ரி’ யிலேயே
நின்று கொண்டிருப்பார்
அறிஞர் அண்ணா

விளையாட்டுச் சிறுவர்கள்
தூண்களுக்குப் பின்னே
மறைந்து கொண்டு
சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்
‘பதநி ‘
டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன.

அந்தப் படகு
‘ஸரிகம’ வில் ஏறி
‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது

ஒருவன்
இன்னொருவனின் முகத்துக்கு நேரே
‘க’ வை நீட்டி
வசை மொழிகிறான்
‘ க’ வை அவ்வளவு
நெருக்கத்தில் கண்டவனின் கண்கள்
இரத்தமாகின்றன.

சப்தம் முடக்கப்பட்ட
கலவிப் படத்தில்
கவ்வி இழுத்து
மெல்ல
விடப்படும் கீழுதடு
‘ரி ‘ என்று ரீங்கரித்துவிடுகிறது

இரண்டு
‘ஸ’ க்கள்
இறுக அணைத்து கொண்டு
வெற்றியை
கூச்சலிட்டுக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன்

இசைப்பலகை
நெஞ்சிலேறிய பிறகு
உலகம் தாளமாகிறது

என்னைக் கொல்வதற்கு
கத்தியை உருவியபடி
வெறி கொண்டு ஓடிவரும்
கந்துவட்டிக்காரரே…!

பார்த்து ….பார்த்து
’ப ’ வுக்கும், ’ த ’ வுக்கும் இடையே
’த’ வுக்கும் , ‘ நி’ க்கும் இடையே
அய்யய்யோ…
ஒரே அபஸ்வரங்கள்

நாராசம்..!
நாராசம்…!


(நன்றி ; அகழ்)

Comments

Popular posts from this blog

தோழர் !

          கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.

பவனி

   பு திய ஊரின் சிக்கலான வழித்தடத்தின் முன் குழம்பி நின்றுவிட்டது கார். ரோட்டோரம் பீடி புகைத்தபடி  நின்றுகொண்டிருந்த டி.வி.எஸ் சிடம்  அது உதவி கோரியது. அதற்கும் வழியை விளக்கி ஆகவில்லை. ஆகவே அதுவே வழியாகி காருக்கு முன்னே கிளம்புகிறது ஒரு சொகுசுகாரை உளுத்த  டி.வி.எஸ்  அழைத்துச் செல்லும்  காட்சியைக்  காண்கிறேன் இரண்டும் ஒன்றையொன்று அன்பே...! என்று விளித்துக் கொள்ளக் கேட்கிறேன். இரண்டிற்கும் இடையே வடம் போல் ஒன்று வடமில்லைதான்  அது ஆயினும் தேரோட்டம் கண்டேன் தெய்வமே!

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...