அவருக்கு 7 பற்களை கட்டாயம் அகற்றியாக வேண்டும் இரண்டு தவணைகளில் என்பது ஒரு சின்ன சலுகை. அவருக்குத் தேக பலமில்லை செல்வ வளமில்லை. அம்மா இறந்து போய் ஆண்டுகள் இருபது ஆகிவிட்டன வந்த அம்மாக்களோ சென்று விட்டனர் ‘வெடுக்’ , ‘வெடுக்’ என்கிற வலியைத் தவிர இப்போது அவருடன் வேறு ஒருவருமில்லை பற்றும் கரங்கள் அற்றவருக்கு தவறும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை கடைவாய்ப் பஞ்சைத் தாண்டி குருதி வெளியே கொட்டினால் அதைத் துடைக்க கொள்ள அவரது இரண்டு கைகளும் நலமுடன்தான் திகழ்கின்றன. எளிதில் அசைந்து தராத பல்லை குறடால் அழுத்தி வலு திரட்டி இழுக்கையில் நினைத்துக் கொள்வதற்கென்றே அவருக்குச் சில நினைவுகள் உண்டு ஆகவே அவர் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை |
கடவுள் எனக்குச் செய்யும் ஒரே ஒரு உருப்படியான காரியம் அதிகாலையிலேயே என்னை எழுப்பி விட்டு விடுவதுதான் இளமிருளில் கொஞ்சமாய்த் திரியும் மனிதர்கள் ஒருவரோடொருவர் பரிவோடிருக்கிறார்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய முயல்கிறார்கள் என்னைத் தூரத்தில் கண்டதுமே சர்க்கரை குறைவான, ஆற்றாத தேநீர் ஒன்றை தயாரிக்கத் துவங்கி விடுகிறார் கூன் விழுந்த அந்த டீ மாஸ்டர் நான் வரும் முன்பே என் வழக்கமான டேபிளில் டீ வந்து அமர்ந்திருக்கும். அதை ஒரு பூச்செண்டு என்று உணர்ந்த கொண்ட நாளில் அவருக்கே கேட்காதபடி கண்ணீரை மறைத்துக் கொண்டு அவரைத் " தோழர்! " என்றழைத்தேன்.

Comments