Skip to main content

Posts

தெய்வங்கள்

  ந டக்கவிருந்த பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய ஒருவன் காலூன்றி மனம் வீங்கி மயிர்கூசக் கூவுகிறான்... "தெய்வமே...! " நடக்கவே நடக்காதென்று நம்பிக்கொண்டிருந்த ஒன்று திடீரென நடந்துவிட்ட பொழுதில் கவலையின் படுகுழியிலிருந்து பரவசத்தின் அந்தரத்திற்குத் துள்ளும் ஒருத்தி தலைமீது கைகூப்பி ஏத்துகிறாள்.. "தெய்வமே ...! ஒன்றுமே நடவாத போது உள்ளதொரு தெய்வம் நான் அதன் பக்தன்.

இன்று நாள் எப்படி?

  சி றுபருக்கள் விளையாடும் முகத்தை டம்ளர் தண்ணீரில் கழுவி வாரிப் பின்னாத கலைந்த கேசத்தோடு வாய்க்குள் பிரஷ்சைச் செலுத்தி மேலும் கீழுமாய் வாசித்துக் கொண்டிருந்த ஒருத்தி பார்த்தும் பார்க்காமலும் பார்த்த லாவகத்தில் ஒரு சோகையான அழகிருந்தது இன்றைய நாள் இப்படி இருந்தால் போதும்.

காய்ச்சல் பாட்டு

  கா ய்ச்சல் என்பது கொஞ்சமாக மரணிப்பது இல்லாது போவதின் ஆசுவாசம் காய்ச்சல் என்பது சின்ன ஞானம் போதும் போதும் என்று போர்வையைத் தவிர யாவற்றையும் மறுப்பது காய்ச்சல் வந்தவுடன் அம்மா வந்துவிடுகிறாள் இப்போது நீ எங்கு தலை வைத்தாலும்  அது தாய்மடிதான் அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு அது காய்ச்சலைத் தாலாட்டுவது தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில் அது காய்ச்சல் பாட்டுத்தான்.

கவிதையின் ஆசி

  ஒ ரு பூ  இயற்கையில் நழுவி உன் தலைமீது விழுகையில் நிச்சயம் அது ஒரு ஆசி நீ ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்! ஒரு பூ  இயற்கையில் நழுவி உன் தலைமீது விழுகையில் நிச்சயம் அது ஒரு ஆசி நீ அந்தப் பூவின் பெயரைச் சொல்!

அரிய உயிரும், எளிய உயிரும்

  சா லையின் நடுவே நின்று ஓர் ஆட்டோக்காரர் போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் தூரத்தில் இருந்து பார்க்கையில் ஏதோ விபத்து போல் தெரிந்தது கிட்ட நெருங்க நெருங்க சாக்கடை உடைசல் என்று சந்தேகித்தேன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இரண்டு கல்வி நிறுவனங்களும் ஒரு வங்கியும்  நிறுத்தி வைக்கபட்டிருந்தன. கூடவே  சில வீடுகளும் எனக்கும் கைகாட்டி ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை  நிறுத்தி வைத்தார். அரியவகை பச்சோந்தி ஒன்று தேக்கித் தேக்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது அது சென்று மறைந்ததும் "யாவும் இயங்குக!" என்று அறிவித்துவிட்டு ஆட்டோவில் ஏறிப்பறந்தது ஓர் அரிய உயிர்.

ஒரு பாடலில் பாடுவது எது?

    ந ஸ்ரத் அலிகான் தன் ஒற்றைக் கரத்தால் வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம் எனக்குத் தெரியும் அந்த வானம்தான் பாடுகிறது ஒருவர் காலியிடமொன்றை உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார். அங்கு என்னென்னவோ தோன்றித் தோன்றி மறைகின்றன. எனக்குத் தெரியும் காலியில் நிரம்பி வழிபவை எவையோ அவைதான் பாடுகின்றன. ஒருவர் பாடுகிறார் கண்களை இறுக மூடியபடி. உள்ளே அவ்வளவு வெளிச்சம் எனக்குத் தெரியும்  அந்த வெளிச்சம்தான் பாடுகிறது ஒருவர் பாடுகிறார் கரங்களிரண்டையும் புறம் விரித்து ஒரு யாசகன் இறைஞ்சுவது போலே எனக்குத் தெரியும் அந்த பிச்சைதான் பாடுகிறது ஒருவர் பாடுகிறார் எதிரில் ஒருவர் தலையை தாழ்த்திக் கொண்டு கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறார் எனக்குத் தெரியும் அந்தக் கண்ணீர்தான் பாடுகிறது சஞ்சய் சமயங்களில் இரண்டு கைகளையும்  முறுக்கிப் பிழிந்து குஸ்தி செய்கிறார். எனக்குத் தெரியும் அந்தக் குஸ்திதான் பாடுகிறது குரல்வளை வெறுமனே ஒரு பாடலைத் துவக்குகிறது  அல்லது முடிக்கிறது.

புதிர்வழியில் ஒருவன்

  தா கமேதுமில்லை ஆயினும் தண்ணீர் கேட்கிறேன். நீ போத்தலை நீட்டுகிறாய் உன் சுண்டுவிரல் நகத்தில் சமைந்து நிற்பது உன் அழகல்ல நீதான் அதை முட்டி முட்டிப் பருகிறேன்.