
பணிமனை
-----------------
மனோரம்யமான மாலைவேளையின்
கடற்கரை நிலத்திலிருந்து
வெக்கை எழும்பும்
என் இருக்கைக்கு இழுத்துச் செல்லப்படுகிறேன்
ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம் பொருந்திய ஒற்றைக் கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப் போல்
கடலைத் திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அது எழுந்து உடன் வராது எனும் போதும்
கடல் முயன்று பார்க்கவே செய்தது
வரிசையாக அலைகளை எழுப்பி
என்னை நோக்கி விரட்டியது
பண்டகசாலைகள் பெரிய பெரிய கட்டிடங்கள்
அவைகளை மிரட்டிமீண்டும்
கடலுக்குள் தள்ளிவிட்டன
கடைசியாக ஒருமுறை
கால் நனைத்துக்கொள்ள
நான் அனுமதிக்கப்படவில்லை
நுரைகளை அள்ளிமுகம் கழுவிக்கொள்ள
வாய்ப்பேதுமில்லை
பணிமனை நுழைவாயிலில்
கவனமாகச் சோதனையிடப்பட்ட நான்
புட்டத்தில் ஒட்டியிருந்த
ஒன்றிரண்டு மணல் துகளையும்
பறிகொடுக்கிறேன்
(காலச்சுவடு இதழ் :93)
Comments