
புத்தன் அழுதான்
--------------------
ஆற்றமாட்டாது
கண்ணீர் பெருக்கியபடி இருந்த ஆனந்தாவுக்கு
திடீரென தான் ஒரு புத்தன் என்பது
பிரக்ஞையில் படவே
அழுகையை நிறுத்திக் கண்களைத் துடைத்துக்கொண்டான்
நித்ய ஸாந்தமும் மந்தகாசமுமாய்
தன் முகத்தை நிலை நிறுத்த முயன்றானெனினும்
அங்குமிங்கும் இழுத்துக்கொண்டு நெளிந்த
முகரேகைகளின் வழியே கண்ணீர் பீய்ச்சியது
அது அவன் தம்மங்களனைத்தையும்
அடித்துக்கொண்டோடியது
மறைவிடம் தேடி ஓடும் ஆனந்தா
எவ்விடம் போயினும் நீ ஒரு புத்தனே
இன்னும் சில வினாடிகளில்
மரிக்க இருக்கிறான் உன் புத்தன்
அவனுடலெங்கும் சிந்தட்டும்
உன் கேவல்கள்
வாரி அள்ளி மடியிலிடு
பெருங்குரலில் வெடித்தழு புத்தா
(காலச்சுவடு இதழ் :93)
Comments