
மயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி
--------------------------------------------------------
எது உன்னை அவ்விடம் நோக்கி
வசீகரம் கூடிய மாயக்கரங்கள்
வாவென்றழைக்க, கிளம்பிவிட்டாய்
மயக்கு வித்தைக்காரன் பின்செல்லும் சிறுமி நீ
சரளைக்கற்களின் மீது
மேடான மேட்டில்
எதற்கிந்த நடை
வியர்வைப் பெருக்கில் ஆடைகள் நவநவத்து விட்டன
நீ சலித்து ஓயும் ஒவ்வொரு வேளையிலும்
அது தன் வனப்பின் சின்னஞ்சிறு துளியை
உன்மீது தெளிக்கிறது
நீ மறுபடியும் சிறுமியாகிறாய்
வேண்டாம் இவ்வலி என்று சொன்னால்
பாதி தூரம் வந்துவிட்டேனே
எனக் கலங்கும் நண்பா
அரவக்குட்டிகள் பதுங்கிக் கிடக்கும்
காட்டுவழி துவங்குகிறது
நல்லதற்கே சொல்கிறேன்
இப்போதேனும் திரும்பிப் போ.
(காலச்சுவடு இதழ் :93)
Comments