இரண்டு கவிதைகள்
நான் குரங்கு
நான் குரங்கு.
பானைக்குள் விழுந்து கள் குடிக்கும்குரங்கு.
வாலைக் கண்டு பாம்பென்று பதறும் வழிவந்ததில்லை.
நுனிவாலில் எழுந்து படம் விரிக்கும் பாம்பை
பகடி சொல்லும் குரங்கு.
நான் குரங்கு.
காண்பதையெல்லாம் களவுண்டு தின்றும்
கும்பிக்குள் தடநெருப்பு அடங்காத குரங்கு.
நான் குரங்கு.
நினைவுக் கோளாரால் மதியழிந்த குரங்கு.
எல்லா மரத்திற்கும் தாவி
எல்லா கிளைகளையும் உலுக்கி
எல்லா இலைகளையும் உதிர்த்து விட்ட பின்னும்
நினைவடங்கா பெருவெறியில்
மண்ணைக்கீறி வேரைக் கடிக்கும் மூடக்குரங்கு.
நான் ஒரு குரங்கு.
தீங்கொன் றறியாத அப்பாவிக் குரங்கு.
ஒடிந்த கிளைகளை ஆட்டிப்பார்க்கும்,
னைந்த கனிகளை முகர்ந்து பார்க்கும்,
உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு போய்
மரத்திலேயே ஒட்டப்பார்க்கும் பேதைக் குரங்கு.
நான் ஒரு குரங்கு.
அடிக்கடி ஆப்பில் அகப்பட்டுழலும் அழுமூஞ்சிக்குரங்கு.
மருந்தில்லாக் கொடுநோயால் தாக்குண்ட குரங்கு.
நான் ஒரு குரங்கு.
கரணமிட்டு கையேந்தும் குரங்கு.
மலத்தினும் புழுத்த யாரினும் கடைய இழிக்குரங்கு.
ஆனாலும் நான் குரங்கு.
பானைக்குள் விழுந்து கள்குடிக்கும் குரங்கு.
படம் விரிக்கும் பாம்பை பகடி சொல்லும் குரங்கு.
பெருவெறி மூளும் கடுவளிக்குரங்கு.
ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு.
தென் இலங்கை தீக்குரங்கு.
பதின்மதக்களிறு ஓருடலின் உள்ளே புகுந்திட்ட குரங்கு.
நான் குரங்கு...
.....
அறவுணர்ச்சி என்னும் ஞாயிற்றுக் கிழமை ஆடு
அறவுணர்ச்சி
என் கசாப்புக்கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்
ஒரு ஞாயிற்றுக் கிழமை ஆடு.
அதை நிலத்தில் கிடத்தி அமுக்குகையில்
அது தெரிந்து கொண்டு
ஓலமாய் ஓலமிடும்.
அப்போது நான் ஒரு செவிடன்.
ஒரு கூரான கத்தியால்
அதன் கழுத்தில் ஒரு கோடு கிழிக்க,
பொல பொலவென பொங்கி வரும் ரத்தம்.
நல்ல விலை பெறும் என்பதால்
அதைப் பிடித்து வைக்க
ஒரு அகன்ற பாத்திரம் உண்டு என்னிடம்.
உரித்துதெடுத்து உப்பிட்டு வைப்பேன்
அதன் தோலை.
கால்களை சூப்பிற்காய்
நறுக்கிடுவேன்.
நான் முதன்முதலாக ஒரு ஆட்டை வெட்டியபோது
அது குதிரையைப் போல கனைத்தபடி
கால்களைத் தூக்கிக் கொண்டு
என் கனவில் வந்தது.
நான் தலையணைக்கடியில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
அதைக் கனவில் ஒரு போடு போட்டேன்.
மகாகொடூரனின் முன்னால்
நீதிகேட்டுப் போவது மடமையென்று
தன் இனத்திற்குஅறிவித்து விட்டு
அது மடிந்துபோனது.
அன்றிலிருந்து கேள்வியற்று மடிந்து கொண்டிருக்கின்றன ஆடுகள்.
ஆனால் நண்பர்களே,
ஒரு நீதிமான் முதல் ஆட்டை வெட்டும் போது
தயவு செய்து நீங்கள் அவனை
காணாதது போல் நடந்து கொள்ளுங்கள்.
Comments
கலக்கல் நண்பா.