சென்ற மாத்தின் ஒரு நள்ளிரவில்
நாச்சிமுத்து கொலைகாரனானார்.
நம்மை போல் தான் அவரும்.
கொலைசெய்வது பற்றியெல்லாம் நினைத்து கூட பார்த்தவரில்லை.
ஆனால் நம்மைபோலில்லை நாச்சிமுத்து
அவர் ஒரு கொலை செய்தார்.
“ நடிப்பிசை கதைக்கடலான” அவரைக் கொண்டு போய்
சிறையின் கும்மிருட்டுள் வீசினார்கள்.
அங்கு பத்மினியின்றி அவர் தனிமையில் வாடினார்.
திருட்டுத்தனமாக பாட்டு கேட்ட குற்றத்திற்காக
இரண்டு முறை பிடரியில் உதை வாங்கினார்.
மெய்மறந்து பாடிய சத்தத்தில் முன்பல் போனது.
அனேக இரவுகளில் அவர் அழுதுகொண்டிருந்தார்.
இன்று அதிகாலை கடன் கழிக்க கழிவறை சென்ற நாச்சிமுத்துவுக்கு
வெளியே வருகையில் ஒரு அம்சமான மீசை இருந்தது.
மார்பெங்கும் இரத்தினங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
தலையில் ராஜகீரிடம்...
அப்போது யாரோ இருவர் கொம்பூதி முழக்கினர்.
பொற்சரிகை பூண்ட அரையாடை துவள
அவர் நடந்து வருகையில்
பிண்ணனியில் ஒலித்தன ஜதியும் பாட்டும்.
தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த மன்னவன்
வரும் வழியெங்கும் கைகூப்பி எழுந்து நின்ற மரங்களை
கை அமர்த்தி அமரச் சொன்னார்.
அவை அமர்ந்து கொண்டன.
Comments