Skip to main content

ஒரு புத்தகம் பத்து கேள்விகள் ( சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பை முன்வைத்து... )


                                                                     



1. காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி என்கிற உங்கள் முதல் தொகுப்பு வாசிக்கக் கிடைக்கவில்லை. 2002ல் வெளிவந்த அந்தத் தொகுப்பிற்கும் சிவாஜிகணேசனின் முத்தங்களுக்குமான இடைவெளியில் இசை என்ற கவிஞர் அடைந்திருக்கும் பரிணாமம் என்ன?


ஆமாம். அந்தப் புத்தகம் ”நமக்கு நாமே “ திட்டத்தின் கீழ் நானே போட்டுக் கொண்ட தொகுப்பு. இளங்கோ, சுகுமாரன், கல்யாண்ஜி போன்ற சிலரைத் தவிர அதிகமாக யாரும் அந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எழுதத் துவங்கும் எல்லா கவிஞனுக்குமான ஒரு இயல்பான குறுகுறுப்பின் விளைவே அந்த நூல். இன்று அதில் வாசிக்க ஒன்றுமில்லை தான். ஆனால் சிலர் ஏனோ ”இது போன்ற” தன் முதல் தொகுப்பை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள்.. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது.... எல்லோரும் உமையவளின் ஞானப்பாலிற்கு ஆசை கொண்டால் எப்படி ?

இந்தப் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன என்றால், நான் அடிப்படைகளைச் சொல்லுவேன்.. இலக்கியத்தின் அடிப்படைகளை.. கவிதையின் அடிப்படைகளை.. ஏனென்றால் நீங்கள் எவ்வளவு பெரிய மாடமாளிகைகளை எழுப்புவதாக இருந்தாலும் அதன் மேல் தான் எழுப்ப வேண்டியிருக்கும்.. இலக்கியத்தின் அடிப்படைகளை தன் எழுத்தின் மூலம் போதித்தவர்களை இதன் நிமித்தமே நான் பெரிதும் மதிக்கிறேன்.. கால் சுண்டுவிரலை வாய்வழியே கொண்டு வருவதில் சமத்தரான ஒரு கவிஞர் சமீபத்தில் என்னிடம் நெஞ்சுருகச் சொன்னார். “ உள்ளதிலேயே சிரமமானது என்ன தெரியுமா இசை, எளிமையாக எழுதுவது தான் ". அவர் முருகப்பெருமான்... நான் விநாயகன். "உலகம்தான் அம்மையப்பன் .. அம்மையப்பன் தான் உலகம்”என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

2) இன்று நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் கவிதைகளின் அழகியலை அல்லது இந்த பாணியை உருவாக்கிக் கொண்டது எவ்வாறு?

என்னால் அதை அவ்வளவு துல்லியமாக சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. இயல்பாகத்தான் உருவாகி வந்தது என்று நினைக்கிறேன். அல்லது இயல்பாகவும், உருவாக்கியும் வந்தது என்று சொல்லலாம். எழுதிக்குவிக்கப்படும் எண்ணற்ற கவிதைகளுக்கு மத்தியில் ஒரு கவிதை தன்னை தனித்துக் காட்ட ரொம்பவும் போராட வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்தே இருந்தேன். ஆனால் அதன் நிமித்தம் திட்டமிட்டு உருவாக்கி கொண்டது தான் தற்போதைய என் கவிதையின் அழகியல் என்று சொல்ல ஏனோ எனக்கு நா எழவில்லை.

3) வேதனைகளைக் கவிதைகளாகப் பகிர்ந்து கொள்ளும்போது இயல்பாக எழும் கிண்டல் ஏற்கனவே புதுமைப்பித்தன் போன்றவர்கள் தம் சிறுகதைகளில் உருவாக்கிக் காட்டிய போக்குதானே?

புதுமைப்பித்தனும் வேறு சில எழுத்தாளர்களும் தன் புனைவில் பகடியை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார்கள். ஆனால் கவிதைக்குள் பகடி பேசுவது அதை விட ஆபத்தானது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் பிசகினாலும் அதலபாதாளம் காத்திருக்கிறது.. டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பகடி பேசுவதும் , கவிதைக்குள் பகடி பேசுவதும் ஒன்றல்ல என்கிற பிரக்ஞை வேண்டும். தமிழ்கவிதைக்குள் பகடி வெகு அரிதாக தான் செயல்பட்டிருக்கிறது என்பது என் எண்ணம். கேலிக்கவிதைகளை இதில் சேர்க்க முடியாது. காளமேகம் புரட்சிக்காரராக வேண்டுமானால் இருக்கலாம், கவியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. தனிப்பாடல் திரட்டில் நிறைய கேலிக்கவிதைகளை காணமுடிகிறது. ஆனால் அவை நீங்கள் இன்று உச்சரிக்கும் பகடி என்ற சொல்லில் அடங்காது. ஞானக்கூத்தன் பகடி பேசினார். ஆனால் அதில் கொஞ்சம் தத்துவசாயல் விழுந்தது. நம் அன்றாட வாழ்வை தரிசிக்கும் சிக்கலற்ற எளிய பகடிகளை ஷங்கர் ராமசுப்பிரமணியன் எழுதிக் காட்டினார். நான் ஷங்கரின் கவிதைகளால் பாதிக்கப்பட்டேன் என்பதை மகிச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன்.

4) ஒரு நவீன கவிஞன் வாழ்க்கையின் குரூரங்களை தித்திப்பாக பாவிக்கிறானா, அல்லது இயலாமை அவனை அவ்வாறு எழுதப்பணிக்கிறதா?

தித்திப்பதா.. ? .. பழுத்த ஞானிக்கேனும் இது இயலுமா ?. ”மூஞ்சிலேயெ ஓங்கி மூனு குத்து குத்துனா, புத்தனுக்கும் கோவம் வரும்” என்பது கவுண்டமனியின் வாக்கு... ஏன் அவன் வாழ்வின் குரூரங்களையே திரும்ப திரும்ப எழுதுகிறான் ? என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்., பொதுவாகவே எழுத்து துக்கத்திற்கு தான் காது கொடுக்க விரும்புகிறது. மகிழ்ச்சியிடம் அதற்கு சோலி குறைவுதான். இலக்கியத்தை ஒரு தேடல் என்று கொண்டால், அது துக்கத்திற்குள் நுழைந்து தேடவே விரும்புகிறது. ஆனால் வெற்றுப் புலம்பல்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

5) ”லட்சுமி டாக்கீஸ்” கவிதை ஒரு கதையாக எழுதப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது? 

அந்தக் கவிதையையும் சேர்த்து கதைத்தன்மை கொண்ட சில கவிதைகளை நான் எழுதியுள்ளேன். என்ன செய்ய ? எனக்கு கவிதை தான் வருகிறது.. என் இயல்பிற்கும் அது தான் சரியாக இருக்கிறது.. ஒரு எழுத்தாளன் மணிக்கணக்காக, நாள்கணக்காக தன்னைத் தானே நாற்காலியில் கட்டிப்போட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது. எனக்கு அது ஒத்து வ்ராது.. என் அநேக கவிதைகள் நீண்ட , தனித்த நடைக்காலங்களில் எழுதப்பட்டது தான். அப்புறம், “ சிறுகதை எழுத பூமியில் உள்ளவைகளே போதுமானது: ஆனால், கவிதைக்கு ஆகாயத்திலிருந்து எதையோ பெற வேண்டி இருக்கிறது “ என்கிற எண்ணம் எப்படியோ என் மண்டைக்குள் நுழைந்து விட்டது. இப்படி கவிதையை மர்மப் படுத்திக் கொள்வதில் கவிஞனுக்கு ஒரு சுகமும், பெருமிதமும் கிடைக்கிறது.ஆனால் என் உரைநடையை மெச்சிய சில நண்பர்கள் தந்த உற்சாகத்தில் நான் கதை எழுத அமர்ந்த போது என்னால் பூமியில் உள்ளவைகளை ஒழுங்காக பார்க்க முடியவில்லை என்பதைக் கண்டு கொண்டேன். சரி.. ஆகாயசாரியாகவே வாழ்ந்துவிடலாம் என்று விட்டுவிட்டேன்.

6) பொறாமையாக இருக்கிறது. சிறுகதை எழுத்தாளர்களும் நாவலாசிரியர்களும் 500, 600 பக்கங்களில் மாங்குமாங்கென்று எழுதித்தள்ளுவதை அதே விஷயங்களை அதே அழுத்தத்துடன் இன்னும் அதைக்காட்டிலும் கூர்மையாக ஒரு பக்கத்துக் கவிதையாக எழுதிவிடுகிறீர்கள் ?

மகிழ்ச்சி .. ஆனால் இது நல்ல கவிதைகளுக்கான பொதுவான இயல்பு தான். ஒவ்வொரு கலைவடிவமும் தனக்கேயான மொழியில் பேசுகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறான சவால்களை முன் வைக்கின்றன. ஒரு பெரிய நாவலில் திரண்டு வருகிற தரிசனத்தை கவிதை தன் சின்ன உடலில் அடைக்க பிரயாசை கொள்கிறது. சமயங்களில் செய்தும் காட்டுகிறது. ஆனால் நாவலில் சில உபதரிசனங்கள் உண்டு என்பதை மறுக்க இயலாது. உதாரணத்திற்கு வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க விரும்பும் ஒரு கோயமுத்தூர்காரனை கவிதை ”அலேக்காக” தூக்கிக் கொண்டுபோய் நீண்ட தரிசனவரிசையில் முதல்ஆளாக நிறுத்தி விடுகிறது. ஆனால் நாவல், முதலில் உங்களை முன் பதிவு செய்ய ரயில் நிலையத்திற்கு அனுப்புகிறது. அங்கு niiஒரு வேளை நீங்கள் “ கண்டார் உயிர் உண்ணும் கண்களை” காணலாம். அது உங்களை நெருங்கி வந்து பேனாவை ஓசி கேட்கலாம். பயணத்தில் உங்களுக்கு ஜன்னலோர இருக்கை என்கிற பேரதிர்ஷடம் அடிக்கலாம். வாழ்வில் முதல்முறையாக ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு நீங்கள் கை அசைக்கலாம். பக்கத்து சீட்டுக் குழந்தை உங்கள் மேல் தாவி விழலாம். மலைகளை, மரங்களை, புதுவெள்ளம் புரளும் ஆற்றை, தூர்ந்து கிடக்கும் ஏரியை, மயில் ஆடும் துறையை நீங்கள் காணலாம். ரயில்பெட்டியின் கழிப்பறை அருகே புது பிச்சைக்காரனும், புது பைத்தியமுமான ஒருவன் சுருண்டு படுத்திருப்பதையும் நீங்கள் பார்க்க நேரலாம். இதையெல்லாம் கவிதை இழந்து விடுகிறது என்று சொல்லலாமா? உளறிக்கொண்டிருக்கிறேனா ? எனக்கும் தெரியவில்லை.. சும்மா பேசிப்பார்க்கிறேன்..

ஆனால், எல்லா மகத்தான எழுத்தாளர்களுக்கும் கவிதையை தெரிந்திருக்கிறது. அது வெறும் வரிக்கணக்கல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அதை கண்ணீர் மல்க கை தொழுகிறார்கள். கவிஞனுக்கு எழுத்தாளன் மீதிருக்கும் மலைப்பும், எழுத்தாளனுக்கு கவிதையின் சின்ன உடலின் மேல் இருக்கிற பயமும் விந்தையானது. அது நீடு வாழட்டும்.

7) நூறு காதல்களில் ஒரு காதல் ரொம்பவும் குள்ளமானது. அது தன் கையை உயர்த்திக் காட்டவேண்டியிருக்கிறது... இன்றைய சூழலில் வாழ்க்கை குறித்த சகலமான விஷயங்களுக்கும் ஒரு குள்ளமானவன் என்றில்லை, சராசரி உயரமுள்ளவனும் கூட கையை உயர்த்தி உயர்த்தி காட்டத்தானே வேண்டியிருக்கிறது?

நீங்கள் அந்த கவிதையில் ஒலிக்கும் தனிக்குரலை பொதுவாக்கி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு சராசரிக்கே இடமில்லாத போது குள்ளமானதற்கு என்ன கிடைத்துவிடும் என்று கேட்கிறீர்கள்.. சரி தான்.. நம் சமூகம் “ மெகா” விற்கு மாறிவிட்டது போல. தற்போது மெகா சீரியல்கள் தானே சக்கை போடு போடுகின்றன. சாதரண குலுக்கலில் என்ன விசேஷம் இருந்து விடப் போகிறது. “ மெகா பம்பர் குலுக்கல் “ வேண்டி இருக்கிறது தற்போது. ஆனால் சாதாரணமாக இருப்பதிலும் சில சலுகைகள் இருக்கவே செய்கின்றன. மார்க்கேஸின் “ தனிமையின் நூறு ஆண்டுகள் “ நாவலில் வரும் சில வரிகள் இப்படி சொல்கின்றன...

“ ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அவர் எளிமையின் சலுகைகள் என்னவென்பதைக் கண்டுபிடித்தார். அதற்கு அவர் முப்பது இரண்டு போர்களைத் தொடங்கி நடத்த வேண்டியிருந்தது.மரணத்துடனான எல்லா ஒப்பந்தங்களையும் மீற வேண்டியிருந்தது. புகழின் மலக்குவியலில் பன்றியைப் போல புரள வேண்டி இருந்தது”

8) உருவகங்கள், படிமங்கள், சொற்சிலம்பங்கள் இல்லாமல் கவிதையை இலகுவாக வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக அணுகும் முறையை மரபான கவிதையியலாளர்கள் இன்னமும் ஏற்பதில்லையே?

ஆமாம்.. அவர்களுக்கும் சோலி வேண்டாமா ? உருவகங்கள், படிமங்கள், சொற்சிலம்பங்களில் தானே அவர்கள் தங்களின் மேதமையைக் காட்ட முடியும். எளிய சொற்களில் கவிதை நிகழ்ந்து விடுவதின் அதிசயத்தை அவர்களால் ஜீரணிக்க இயலாது தானே ?

9) பாரதிக்கு சுதந்திரப் போராட்டக்காலம் அவருடைய கவிதைகளுக்கான உந்துசக்தியாக பின்புலமாக இருந்ததது என்று சொல்வார்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் பல்லாயிரம் பிரச்சனைகள் சூழ்ந்த நவீனகாலம் நம்முடைய நவீன கவிஞர்களை இந்த அளவுக்குத்தான் இயங்கவைக்குமா?

முதலில் பாரதி மகாகவி ஆனது அவருடைய தேசபக்தி பாடல்களால் மட்டுமல்ல என்பதை சொல்லி விட வேண்டும். அவருக்கு தொட்டதெல்லாம் துலங்கியது. கவிதை தன் பூரணத்தை இயக்கிப் பார்த்துக் கொண்ட இடம் என்று அவனைச் சொல்லலாம். அவருடைய காலத்தில் கொஞ்சம் லட்சியவாதம் மிச்சமிருந்தது. முழுமனதோடு ஒன்றை நம்பிப் பற்ற வாய்ப்பிருந்தது. எனவே சத்தம் செய்ய முடிந்தது. நாங்கள் அதிகமாக மூளையை வளர்த்துக் கொண்டு, அதிகமாக தர்க்கித்து, அதிகதிமாக சண்டையிட்டு, அதிகமான உண்மைகளை கண்டறிந்து விட்டோம். அவரவர் அவரவர் நம்பும் உண்மைகளுக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே ஒரு ஒற்றைக்குரல் சத்தமாக எழுந்து வர வாய்ப்பில்லை. சகலமும் குழம்பிக் கிடக்கிற காலத்திலிருந்து குழப்பமான குரல்கள் கேட்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே இன்று அதிகமாக தேட வேண்டி இருக்கிறது. தேடித்தான் கண்டடைய வேண்டி இருக்கிறது. ” உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது “ என்கிற யவனிகாவின் கவிதையை விக்கிரமாதித்யன் தொகுத்த “ தற்கால சிறந்த கவிதைகள் : நூலில் கண்ட போது இத்தனை நாள் இந்தக் கவிதையை தவறவிட்டதற்காக அவமானமாக இருந்தது..

                   உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது

முட்டாளும் விறகு உடைப்பவனுமாகிய இசக்கி
ஒரு மோசமான அதிகாலையில் இனி ஒருபோதும்
தான் உழைப்பதில்லை எனச்சொல்லி ஆவேசத்துடன்
கோடாரியை விட்டெரிந்தான்
அகன்றுபோன தன் கால்களுக்கிடையில்
தலை கவிழ்ந்து/முகம்புதைத்து உறங்கும்
அவனுக்கு எப்படித் தெரியும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுவதும் அதே முடிவை எடுத்திருப்பதுபற்றி
முதல் பத்துநாள் அவரவர் கையிருப்பை
தின்று தீர்ப்பது என முடிவாயிற்று
அடுத்த பத்துநாள் அதிகம் இருந்தவரிடமிருந்து
கோரியும் பிடுங்கியும் தின்னும்படி நேர்ந்தது
கடைசி பத்துநாள் மிச்சமீதி அனைத்தையும்
வழித்து வாயில் போட்டுக்கொள்ள
தலைதூக்கிய இசக்கிக்குப் பசி கண்ணை மருட்டியது
எங்கும் உணவில்லை
பரிதாபமாய் கோடாரியைத் தூக்கி
தோளில் போட்டுக்கொண்டு இசக்கி தனது
வளைந்த கால்களால் நகரத் தொடங்கினான்
ஆனால்
அவனுக்கு எப்படித் தெரியாமல் போகும்
இந்த அருமையான அதிகாலையில்
உலகம் முழுவதும் இதே முடிவை எடுத்திருப்பதுபற்றி.


 

”பாடுபடல் வேண்டா/ ஊனுடலை வருத்தாதீர்” .. என்கிற வரியை மகத்தான கவிதை என்று சொல்கிற நாம் இந்தக் கவிதையையும் கொஞ்சம் கண் திறந்து பார்க்க வேண்டும்.

மற்றபடி கவிதை காலகாலத்திற்கும் எதைச் செய்து வந்ததோ, அதை தற்போதும் செவ்வனே செய்து வருகிறது என்பதே என் எண்ணம்.

10) நவீன கவிஞர்கள் யேசுவையும் புத்தனையும் கிட்டத்தட்ட தங்கள் சிநேகிதர்களாக பாவிக்கிறார்கள். ஒருவிதத்தில் அவர்கள் குறியீடுகளாகவும் இருக்கிறார்கள். இன்னும் சிலரை கவிதைக்குள் அழைத்து வரலாம் என்று தோன்றுகிறது...

பாவம் அவர்களை விட்டு விடுங்கள் என்பதைத் தானே இப்படி நாகரீகமாக கேட்கிறீர்கள் ? ஆனால் அவர்களுக்கு இது தேவை தான். அவர்கள் பேசிய பேச்சுக்களுக்கான, செய்திருக்கிற காரியங்களுக்கான பலனை எங்களிடம் அனுபவிக்கிறார்கள்.. இன்னும் சிலர் என்று யோசித்தால் மிஸ்டர் காந்தி இருக்கிறார்... அவருக்கு எங்கள் கவிதைகளில் இழுபட முழுத்தகுதி உண்டு.
                                         
                     -  நன்றி-கீரனூர் ஜாகிர் ராஜா-புதிய புத்தகம் பேசுது -ஆகஸ்ட் 2014

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம