பு திய நூற்றாண்டில் நவீன தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமான குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலரில் இசையும் ஒருவர். ஒருவர் மட்டுமல்ல. முக்கியமான ஒருவர். இசையின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு தற்காலக் கவிதை பற்றிய சித்திரத்தைத் தீட்ட முடியாது என்ற அளவுக்கு முக்கியமானவர். நவீன கவிதை உச்சநிலையிலிருந்த சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் அரங்குக்கு வந்த கவிஞர்களுக்கு இலக்கிய அடிப்படையிலான சலுகையொன்று இருந்தது. அதுவரை எழுதப்பட்டு உருவான கவிதை மொழியைப் பின் பற்றி தொடக்க காலக் கவிதைகளை எழுதி விட முடிந்தது. முன்னோடிக் கவிஞர் ஒருவரின் சாயலில் எழுதிப் பார்த்து விட்டுத் தன்னுடையதான பிரத்தியேக கவிதைமொழியை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ஆத்மாநாமையே எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ஆரம்ப காலக் கவிதைகளில் அன்று எல்லாரின் கவனத்துக்கும் உரியவராக இருந்த ஞானக்கூத்தனின் சாயல் தெரிந்தது. அவரது தொடக்க காலக் கவிதைகளில் ஒன்றான ' இன்னும் ' என்ற கவிதையில் இதைப் பார்க்கலாம். ' புறாக்கள் பறந்து போகும் கழுத்திலே வைரத்தோடு கிளிகளும் விரட்டிச் செல்லும...