Friday, September 16, 2016

நிலம் நோக்கும் இசை - சாம்ராஜ்


                 
        இசையின் கட்டுரைகள் குறித்துப் பேசவே  நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும், இசையின் ஒரு கவிதையோடு இதைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். காரணத்தோடுதான்...
குடும்ப நாய்; சில சித்திரங்கள்
1.
ஒரு குடும்ப நாய்
குடும்பத்தை தின்று
குடும்பத்தை பேண்டு
அதையே தின்று
அதையே பேழ்வது
2.
 உண்மையில் குடும்ப நாய்களுக்கு
 சங்கிலியோ கயிறோ தேவையில்லை
3.
 குடும்ப நாய்களை நாம் பரிசோதிக்க
 வேண்டியதில்லை.
 அவை நிச்சயம் நல்ல சாதி நாய்கள்.

4.
 குடும்பநாய்கள்
 சமயங்களில்
 திருட்டு பூனைகள்

5.
குடும்ப நாய்களுக்கு
விசாலமான வீடுகள் உண்டு
என்றாலும்
அவை அழுக்கான விடுதிகளிலே
சுத்தமான காற்று கிடைப்பதாகச் சொல்கின்றன.
எனவே சில நேரங்களில்
சொந்த ஊரிலேயே அறை எடுத்து தங்குகின்றன.
6.
 குடும்ப நாய்களிலும் பெட்டைகள் இன்னும் பாவம்
 அவை பாத்ரூம்களில்
 மட்டும் நடமான அனுமதிக்கப்பட்டவை
7.
 குடும்ப நாயின் கர்ப்ப குட்டிகளின்
 வயிற்றில் வளர்ந்து வருகிறது.
 சலாமிடுதல் என்கிற பட்டறிவு
8.
குடும்ப நாய்கள் ரொம்பவும் மனசாட்சிக்கு பயந்தவை
எனவே
எல்லா அநீதிகளுக்கு எதிராகவும்
அவை இரண்டு முறை குறைத்துவிடுகின்றன

9
ஒரு குடும்ப நாய்
தன் வாழ்வில் ஒருமுறையேனும்
தண்டவாளத்தை உற்றுப் பார்க்கிறது

10

 சில குடும்ப நாய்கள்
 உத்திரத்தில் தொங்கி
 கவரிமான்கள் ஆகின்றன.

 இப்படி இந்தக் கவிதையை முழுமையாக வாசிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இசையின் நேர்காணலில் ஒரு பத்தி உண்டு….
 “ அப்புறம் என் வாழ்வு ஒன்றும் லட்சிய வாழ்வு ஒன்றும் கிடையாது. சொந்தகாரியோடு கூடி சொந்த சாதிப்பிள்ளைகளை ஈனப்போகிற நான். சாதி ஒழிப்பைப் பற்றி பேசும்போது என் தொண்டையில் என்னவோ உறுத்துகிறது. இலக்கியம், கவிதை, புரட்சி, என்கிற ஒரு இழவும் தெரியாத என் தங்கையொருத்தி சாணிப்பொடியை கரைத்து குடித்து  தன் காதலை நிறைவேற்றிக் கொள்கிறாள். அந்த நெஞ்சுரம் கூட இல்லாதவனாகத்தான் நான் இருந்திருக்கிறேன். குடும்பம் என்ற வலிய தாம்புக்கயிறால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் எழுபத்தியொரு கிலோ நாய் நான், எனவேதான் முழங்குவதற்கு பதிலாக அழுகிறேன். என் சில படைப்புகளில் குடும்பம் என்கிற தளையிலிருந்து வெளியேற தவிக்கிற ஒரு மனிதனின் விசும்பலை நீங்கள் காதிருந்தால் கேட்கலாம்.அப்புறம் என்னை போன்றவர்களுக்காகத்தான் சேகுவாரா டீ- சர்ட்டுகளை மலிவு விலையில் ரோட்டில் விற்கிறார்கள்.... “

திருடன் மணியன்பிள்ளை சுயசரிதை குறித்த இவரது மதிப்புரை இப்படி துவங்குகிறது....

  இந்தப்புத்தகத்தை படிக்கவும் இது குறித்து எழுதவும் அடிப்படை தகுதி ஒன்று அவசியம் என்று நினைக்கிறேன். அது தானும் ஒருவகையில் திருடன் என்கிற புரிந்துணர்வே. சமூகக் கட்டுபாட்டை குலைக்கும் திருட்டு என்கிற குற்றம் தண்டனைக்குரியதாகிறது. இதுபோலவே சமூகம்  உருவாக்கி வைத்திருக்கிற ஒழுங்குகளை குலைக்கிற பலவும் தண்டனைக்குரிய குற்றங்களே என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடர்கள் க்ளவுஸ் அணிந்து கொள்ளும்போதும் எங்கேனும் ஓரிடத்தில் தன் கைரேகையை தவற விட்டு விடுகிறார்கள். ஆனால் வெடிகுண்டைச் சத்தமில்லாமல் வெடிக்க வைப்பதில் சமத்தர்களான நாம் வெகு நிதானமாக, வெகு நுட்பமாக தேர்ந்த கைகளால் குற்றங்களைச் செய்கிறோம். தனிமையில் நம் சிந்தைகள் அடிக்கிற கூத்துகளை நாமே அறிவோம் என்கிற படியால் நாம் மணியம்பிள்ளைக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை.... “


 “ நாம் கொஞ்சம் துணிந்திருந்தால் செய்திருக்க கூடிய அற்பத்தனங்கள்தான் இவை. மணியன்பிள்ளை நினைத்ததை முடித்தவர். நாம் நினைத்து நினைத்து ஏங்குபவர்கள்... “

     நான் வாசித்த அந்தக் கவிதையையும் அடுத்த வாசித்த உரைநடைப் பத்திகளையும் இணைத்து வாசித்தால் இசை என்ற எழுத்துக்காரனின் சித்திரம் துலங்கம் பெறும். இத்தோடு இசையின் இந்த வரிகளையும் சேர்த்துக் கொண்டோமேயானால்.

 ‘நாங்கள் முட்டாளகத்தான் இருந்தோம்  ஆனால் சந்தோஷமாக இருந்தோம் ஒருவேளை அறிவை தொலைத்துவிட்டு போனால்தான் சந்தோஷம் கட்டிக்கொள்ளுமோ என்னமோ? மண்டைக்குள் பூரான் ஊறாத அக்காலத்தையே நான் மகிழ்ந்திருந்த காலமென்று இன்றும் சொல்வேன்.’

     இந்த வரிகள் இசையின் சித்திரத்தை பூர்த்தி செய்கின்றன.

 கவிதை எழுதுகின்ற அதே மனோபாவத்தோடு, அதே தயக்கத்தோடு, அதே குழப்பத்தோடு, அதே பகடியோடு, அதே அச்சத்தோடு அதே தொழுதலோடுதான் இந்த இலக்கிய விமர்சன கட்டுரைகளை இசை எழுதுகிறார். இசைக்கு கவிதைக்கென்று ஒரு பேனா இலக்கிய விமர்சனத்துக்கென்று ஒரு பேனா என தனித்தனியாக இல்லை. எல்லாமே அந்தக் காலை நடையில், ரயில்நிலையத்தில், ரயிலில் சோமனூரிலிருந்து பூமலூர் ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு இடையேயான பாதையில்  உருக்கொண்டவைதான்.


          தமிழ் இலக்கியத்தில் இலக்கிய விமர்சன மரபு நீண்ட காலத்தையும் வரிசையும் கொண்டது. ஒருபுறம் படைப்பாளிகளாகவும், இலக்கிய விமர்சகராகவும் ஒருங்கே இருப்பவர்கள் மறுபுறம் திறனாய்வு மாத்திரம் செய்கிறவர்கள் என்கிற இருவரிசை திருப்பதி தேவஸ்தானத்தின் முன் நீண்டு கிடப்பதுபோல் எப்போதும் உண்டு. கடவுளை கணநேரம் காண மாத்திரமே அனுமதி. ‘ரெண்டி ரெண்டிஎன்கிற காலத்தின் குரல் எப்போழுதும் விரட்டிக்கொண்டே இருக்கும். திறனாய்வு மாத்திரம் செய்கின்றவர்கள். அந்தக் கணநேரத்தில் காலைப்பார்த்தால் காலை , கையைப் பார்த்தால் கையை என வெளியே வந்து அங்கஅங்கமாய் வெங்கடாசலபதியை வெட்டுவார்கள். மாறாக படைப்பாளிகளாகவும், இலக்கிய விமர்சகராகவும் ஒருங்கே இருப்பவர்களைப் பார்த்துக் அந்தக் கணநேரத்திற்குள்ளும் வெங்கடாசலபதி அவர்களைப் பார்த்து புன்னகைப்பார். திறனாய்வாளர்களைப் பார்த்து சிரிப்பதற்கு அவர்களிடம் அவருக்கு என்ன இருக்கிறது ?

   “அண்டாக்காகசம் அபூக்காகசம் “என்ற மந்திரத்தை மனப்பாடம் செய்துகொண்டு போனாலும் திறனாய்வாளர்களுக்கு ஒருபொழுதும் திறந்ததே இல்லை இலக்கிய குகை. வரலாற்றில் அவர்கள் செய்த பாவம் அப்படி.

   ஏசுநாதர் ரத்தம் சிந்தியவாறு சிலுவையை சுமந்தபடி போனார் என்று எழுதியிருப்பதை பின்தொடந்து போகும் அவர்கள் அந்தரத்தம் சிந்திய மண்ணை எடுத்து நுகர்ந்து பார்த்து இந்தவகை பிளட்குரூப் இந்த நிலத்தில் இல்லையே இது எப்படி உண்மையான இலக்கியம் ஆகும் என்று கேட்டவர்களை திரும்பிபார்த்த ஏசுநாதர் அப்பொழுதே அவர்களை யூதாஸ் பட்டியலில் சேர்த்து விட்டார். உலகம் அழியும்போதுதான் இவர்களுக்கு பாவமன்னிப்பு.

   நம் தமிழ் இலக்கியத்தில் இலக்கியவாதிகளே பொறுப்புடன் இலக்கிய விமர்சனத்தை முன்னெடுத்து சென்றனர்... செல்கின்றனர். ஒரு கணக்கில் அது பாரதியில் தொடங்குகிறது. புதுமைபித்தன் என நீண்டு சுந்தர ராமசாமி என வளர்ந்து ஜெயமோகன், என அது போய்க்கொண்டிருக்கிறது. வெங்கட்சுவாமிநாதன் போன்றவர்கள் விதிவிலக்கு.


   மார்க்சிய திறனாய்வாளார்கள் என்றொரு மரபுண்டு. கைலாசபதி, சிவத்தம்பி, ஞானி, கோ. கேசவன், எஸ்.வி. ராஜதுரை  . மார்க்ஸ், என அந்தப் பட்டியல் நீளும். இதில் கோவை ஞானி மாத்திரமே விதிவிலக்கு. அவரே ஜெயமோகனின் ரப்பரை அடையாளம் கண்டுகொண்டார். தொடர்ந்து அவரைப் பற்றி எழுதினார். கோ.கேசவனின் தமிழ்ச் சிறுகதையின் உருவம் என்றொரு நூல் உண்டு. பத்தோ பனிரெண்டோ சிறுகதையாசிரியர்களின் சிறுகதை பற்றி பேசும் நூல் அது. மிக சட்டகமான தட்டகமான முன்முடிவுகள் கொண்ட நூல் அது. கேசவன் மிகச்சிறந்த மார்க்சிய ஆய்வாளர். சாதிகள் குறித்து அவரது ஆய்வுகள் மிக முக்கியமானவை. ஆனால் இலக்கியத்தில் கு.சின்னப்பபாரதி எழுதுவதை இலக்கியம் என்று நம்பக்கூடியவர். பழநிபாரதியைப் பற்றி  ஒரு நேர்ப்பேச்சில் என்னிடம் இப்படி குறிப்பிட்டார். பழநிபாரதியின் சில கவிதைதொகுப்புகள் வெளிவந்திருந்த காலமதுபழநிபாரதி நல்லா பாட்டு கட்டுவான்கவிதைஎழுதுவதென்பது பாட்டுக்கட்டுவாதாகத்தான் அவர் மூளையில் பதிந்திருந்தது.

   எப்பொழுதும் ஒரு இலக்கிய வாசகனுக்கு இலக்கியவாதியே சுவற்றோடு மறைந்திருக்கும் கதவுகளை திறந்துவிடுகிறான். இலக்கிய திறனாய்வாளன் கோட்பாடுகள் பேசுகிறான். தன் கோட்பாட்டு பெட்டியில் படைப்பாளியை அடைக்க முற்படுகிறான். வெளியே தொங்கும் கால்கள் அவனுக்கு வேண்டாதவை.
இசையின் முதல் கட்டுரை தொகுதியான“அதனினும் இனிது அறிவினர் சேர்தல் “ கட்டுரை தொகுதி குறித்து ..

 “ஒரே விபூதி பொட்டலமா இருக்கே என.. “ தான் இசைக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாய் கவிஞர் சங்கரராமசுப்பிரமணியம் நேர்பேச்சில் சொன்னார். முதல் தொகுதியில் நண்பர்களின் தொகுதிகளுக்கு  கூடுதலாக  எழுதியிருப்பதைக் கொண்டு ஷங்கர் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த தொகுதியில் தூரன் குணாவின் கடல்நினைவு என்ற கவிதை தொகுதிக்கு  இசை எழுதியிருக்கும் கட்டுரையின் சிறிய பகுதியை மாத்திரம் வாசிக்கிறேன்.

அந்திம கால ஒட்டகங்கள்
மூப்பின் துர்வாசனையோடு
காட்சிபொருளாய் நடக்கும்
நகரத்தின் சிமிண்ட் தெருக்களில்
மங்கைகள் இறகு பந்து விளையாடுகிறார்கள்
இந்த ஐந்து வரியை முன்வைத்து குணாவின் கவிதைகளில் துளியூண்டும் அழுவதற்கு இடமில்லை என்கிற என் முந்தைய வரியை ஒரு வாசகன் நிராகரிப்பானனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இந்த ஆயூளின் அனேக இரவுகளை நனைக்க இந்த ஐந்து வரிகள் போதுமானவைதான். ஆனால் இந்த வரிகளுக்குப்பின் குணா பிதற்றுவது எதுவும் இந்த அனுபவத்தை தாண்டியதாகவோ தக்கவைத்துக்கொள்வதாகவோ இல்லை. தன் புத்திசாலித்தனத்தின் பாறாங்கல்லைப் போட்டு அவ்வனுபவத்தை உருத்தெரியாமல் நசுக்கி விடப்பார்க்கிறான்.’

   கல்யாண்ஜி கவிதைகள் குறித்த கட்டுரையில்என் வாழ்வில் இது ஒரு வரலாற்றுத் தருணம். எனக்கொரு வாழ்வுண்டு என்பதையும் அதற்கொரு வரலாறுண்டு என்பதையும் தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். இதுபோன்ற ஒரு தருணத்தில் நான் நெஞ்சராப் பொய் சொல்வதையோ, கபடமாக எதையோ மறைத்து வைப்பதையோ விரும்பவில்லை. எனவே இத்தொகுப்பில் என்னை உறுத்துகிற விஷயம் ஒன்றையும் நான் பதிவு செய்திடவே விரும்புகிறேன். அப்படி செய்யாது விட்டு விடுவது கவிதை என்கிற போர்க்களத்தில் இளைஞர்களோடு இளைஞனாய் இன்றளவும் வாள்வீசத்துடிக்கும் கல்யாண்ஜிக்கு செய்யும் ஒரு வித துரோகமும் ஆகும். கல்யாண்ஜி சில கவிதைகளில் அந்த  கவிதை சொல்ல வரும் சேதியை உருத்திரட்டி ஒரு கட்டுரையின் முடிவுரையைப் போல கடைசி இரண்டு வரிகளில் சொல்கிறார். அவர் கடைசி இரண்டு வரிகளில் சொல்ல வருவது ஏற்கனவே அக்கவிதை சொல்லி முடித்து விட்ட ஒன்றாக இருக்கிறது………………… இது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். தொழிற்நுட்பமும் சேர்ந்தது தான் கவிதை என்பது அவர் அறியாததல்ல
இசை கலையில் யாருக்கும் சலுகைகள் தருவது கிடையாது.

   அவரது இரண்டாவது தொகுதியான லைட்டா பொறாமைப்படும் கலைஞன் நண்பர்களோடான உறவை ஏறக்குறைய முறித்துக்கொள்கிறது. பெருமாள் முருகன், திருடன் மணியன்பிள்ளை, சுப்ரமணியபாரதி, தோழர். தியாகு, ஞானக்கூத்தன், மிஷ்கின், மோகனரங்கன், சே. பிருந்தா, குத்துப்பாட்டு, என கலவையாக ரகளையாக விரிகிறது. பாரதி குறித்த கட்டுரையும் கவி- கவிதை-கலகம்கலப்படம் சில அடிப்படை குழப்பங்கள் கட்டுரையும் மிக அசலானவை நம்மை பரவசத்தில் ஆழ்த்துபவை.

   இசையின் கட்டுரைகள் ஒருங்கே சந்தோஷத்தையும் பதட்டத்தையும் புதிய கண்டுபிடித்தங்களையும் நமக்கு வழங்குகிறது. நாள்முழுக்க ஜெபமாலையை உருட்டி கொண்டிருக்கும் மூதாட்டிகளைப்போல இத்தொகுப்பில் நீண்டகாலத்திற்கு அப்படி மனதில் உருட்டுவதற்கான வரிகள் உண்டு.
இசையின் கட்டுரைகளின் தலைப்புகளே வசீகரமானவை. பிசாசு பற்றியான கட்டுரையை அவர் இப்படி முடிக்கிறார்.

 “ பிசாசு பியர்பாட்டிலை உடைக்கிறது, சிகரெட் பாக்கெட்டையும் பறித்து போகிறது, ஆனால் அக்காட்சிகள் நம் நெஞ்சோடு பேசுவது புகைபிடிக்காதீர் ! மது அருந்தாதீர்! போன்ற ஒழுக்க வசனங்களை அல்ல என்பது என் துணிபு. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர் என்கிற அறிவுரையும் படத்தில் உண்டு அதுவும் படத்தின் மையத்தில்... இருந்தும் அப்படி ஒன்று இருப்பதையே நம் கவனத்தில் இருந்து மறைத்திருப்பதை கலைவித்தை என்று சொல்லலாம்.

  “பொதுவாக பியர் பாட்டிலை உடைத்துபோடும் பிசாசை நமக்குப் பிடிக்காதல்லவா? பிறகேன் நாமிதை இப்படி சீராட்டுகிறோம்? என்னதான் நடக்கிறது கலையில் ? “

                  

           


நிறைய வாசித்துக்காட்டலாம்தான் ஆனால் அது மனித உரிமை மீறாலாகும் நானெல்லாம் கால் நூற்றாண்டு அனுபவித்தது அதையே உங்களுக்கும் நானும் திருப்பிச் செய்தால் மாமியார் மருமகள் பழிவாங்குதல் போலாகும்ஒரே ஒரு பத்தியோடு விடைபெற்றுக்கொள்கிறேன்.

  "கலை தன்சோதி ப்ரகாசத்தைநமக்கு காட்டி மறைக்கிறது. மானுட வாழ்வின் பொற்கணம் ஒன்றை ஏந்தி நம் உயிர் தளும்பி வழிகிறது. கடவுளைக் காண கடுந்தவம் புரியும் ஒருவன் கண்ட மாத்திரத்தில் கண்களை மூடிக்கொள்கிறான். அப்படிக் கண்களை மூடிக்கொள்ளச் செய்வதன் பெயரே கடவுள். நாம் அதைப் பார்க்க முடியாது. அதனூடே பேச முடியாது. மாறாக அதன் சோதியும் ப்ரகாசமும் எங்கிருந்து வருகிறது என்று பார்த்துவிடலாம் என்று கிளம்பிய பலரும் ஒரு அதிகாலையில் இரத்தம் கக்கிக் கிடந்திருக்கிறார்கள். இரத்தம் கக்கிச் சாகத்துணிந்தவர்கள் என்னோடு வரலாம்... "

       போகலாம் இசை... சாகலாம் இசை.

                 ( இசையின் கட்டுரைத் தொகுதிகளைக் குறித்து ஆற்றிய உரை )                     
                             நன்றி : வாசகசாலை அமர்வு 

No comments: