இராமனாகிய தேனும், குகனாகிய மீனும் ஒருவரையொருவர் கண்டு , களிப்பெய்தி, கண்ணீர் பெருக்கி, ஒருவருள் ஒருவர் புக்கு, பிரிந்தும் பிரியா நின்றதைப் பேச விழைகிறது இக்கட்டுரை. இராமயணத்தை வாசிக்க இராம பக்தி அவசியமில்லை.பொதுவுடமைச் சித்தாதங்களில் இறுதி வரை உறுதிப் பிடிப்போடு இருந்த தோழர் ஜீவா கம்பனை விடவில்லை. இராமயணத்தின் வற்றாத இலக்கிய வளங்களை அவர் புறக்கணிக்கவில்லை. உடல் முழுக்க திருநீறு பூசி, கைகளில் சப்ளாக் கட்டைகளைக் கொடுத்து, அவர் இராமபஜனை செய்வதாக தி.மு.கழகத்தார் கேலிச்சித்திரம் தீட்டிய போதும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் பின்வாங்க வேண்டியடிதில்லை.“அறிஞர் காதற்கு அமை விருந்துதான்“ அவன். இராமன் பெயரால் நிகழும் குருதிப் பெருக்கிற்கும் அவனுக்கும் தொடர்பில்லை.அவன் கைகளில் இருப்பது அநீதிகளுக்கெதிரான கோதண்டமே என்றும், அது பர சமயத்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இறங்கும் பிச்சுவா அல்ல என்றும் நம்புவது, தேவையற்ற மனத்தடைகளிலிருந்து நம்மை விலக்கி வைக்கும். தவிரவும் இராமகாதை வெறுமனே இராமகாதை மட்டுமல்ல.இந்தக் கட்டுரையின் நாயகனும் குகன்தான். இராமன் குகனை பெருமை செய்யும் ஒரு துணை மட்டுமே. கம்பனில...