நிசப்தம் நிலவிய கணமொன்றில்
கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டேன்
" துரதிருஷ்டசாலிகள் பொதுவாக ஜூன் மாதத்தில்தான்
பிறக்கிறார்கள்"
பக்கத்து டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்
ஒரு கணம் அதிர்ந்துவிட்டு பிறகு சொன்னார்...
" தவறு...ஏப்ரல் மாதத்தில்தான் பிறக்கிறார்கள்.."
பெரிய நெற்றியை திருநீற்றால் நிறைத்திருந்த ஒரு பெரியவர்
தூரத்திலிருந்து சத்தமிட்டுச் சொன்னார்..
" உறுதியாக , அது நவம்பர்தான்..."
அப்போது அவர் கண்களில் பளிங்கு மின்னியது
மோர் ஊற்ற வந்த சிப்பந்திச் சிறுவன்
" சார்..அது ஆகஸ்ட்.." என்று முணுமுணுத்தான்.
கைகழுவி விட்டு என்னைக் கடந்து சென்ற இளநங்கையொருத்தி
" wrong, it's march only " என்று கிசுகிசுத்துவிட்டுப் போனாள்
எல்லா திசைகளிலிருந்தும் எதிர்க்குரல்கள் எழுந்தன
பில்லை வாங்கி கம்பியில் செருகி விட்டு
மிச்ச சில்லறைகளின் மீது அடித்துச் சொன்னார் முதலாளி..
" எல்லோரும் தவறாகச் சொல்கிறார்கள்...துரதிர்ஷடசாலிகள் எப்போதும் மே மாதத்தில்தான் பிறந்து தொலைக்கிறார்கள்..."
பன்னிரண்டு மாதங்களும் தீர்ந்து விட்டன.
எனது குழப்பம் என்னவெனில்
இல்லாத ஒரு மாதத்தில் பிறந்து
எப்படி நைஸாக பூமிக்குள் நுழைந்து விடுகிறார்கள்
இந்த அதிர்ஷசாலிகள் என்பதுதான்.
- Get link
- X
- Other Apps
Comments