எப்போதும் ஒரு பிஸ்கட்டை இரண்டாகப் பிட்டு என் நாயிற்கு எறிவேன் அரை பிஸ்கட்டிற்கு முழு உடலால் நன்றி செலுத்தும் பிராணி அது இரண்டு முறைகள் அந்த நன்றியைக் கண்டு களிப்பேன் இரு முறையும் அது என்னைப் போற்றிப் பாடும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை அவ்வளவு ஏக்கத்தோடு பார்த்துக் குழையும் இரண்டாம் துண்டு என் இஷ்டம் இரண்டு துண்டுகளுக்கிடையே அதன் நெஞ்சம் அப்படிக் கிடந்து தவிக்கும் உச்சியில் இருக்கும் எதுவோ இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுதான் என் பிஸ்கட்டை ஆயிரம் துண்டுகள் ஆக்கி வைத்தது. |
உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும் அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில் மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு வேறொரு காதல் இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

Comments