நான் அவளைக் கண்ட பொழுது அவள் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள். புதிதாக ஒன்றை அறிந்து கொள்வதன் மூலம் புதிதாக வந்து சேர்வதற்கென்று அவள் அழகில் துளி இடம் கூட இல்லை. ஆனால் போனால் போகிறதென்று அவள் வாசித்துக் கொண்டிருந்தாள். என் சட்டைக்காலரைப் பிடித்து இழுத்தது அவள் தாழ்குழல். பின்னங்கழுத்தின் பிசிறுகளை சீராக்கி அதை ஒருமுறை வாரிச்சுருட்டி அவள் தோளில் இட வேண்டும் என்றொரு ஆசை பூத்தது. இந்த எளிய சேவைக்கும் இன்னொருவன் குதிரை மீதேறி வர வேண்டும் என்கிற உண்மை என்னை துக்கத்துள் தள்ளுகிறது. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments