Skip to main content

Posts

Showing posts from January, 2024

மழை என்பது பஜ்ஜி விருந்து

  "உ யிரின் சுபாவம் ஆனந்தம்"  என்கிறான் தேவதேவன். பார்க்கப் பளபளக்கும் ஒரு வரி இது தென்படும் ஒவ்வொரு மனிதனிடமும் வினவுகிறேன்.. "ஆனந்தத்தைப் பார்த்தாயா?" அதன் அங்க அடையாளங்களை வினவுகிறான் அவன் நானும் பார்த்ததில்லை பார்த்தவர்களைப் பார்த்துவிட்டால் கூட போதும் கண்ணைக் கொஞ்சம்  மூடினால் கண்டுவிடலாம் காதைக் கொஞ்சம்  மூடினால் கேட்டு விடலாம் பாவம், நம்மால் அது முடியாது. ஆனந்தம் மனிதனின் ஆறடிக்கு மேல் அறுபதடி உயரத்தில் இருக்கிறது உயிரின் சுபாவம் கிளுகிளுப்பு ஆனால், அதைச் சொல்ல மாட்டான் தேவதேவன்.                நன்றி; காலம்- 60

அணைந்து எரியும் சுடர்

"அ ந்த நாட்கள்  எவ்வளவு அழகாக இருந்தன..!" என்றான் அவன். பிறரும் அதை ஆமோதித்தனர் அந்த நாட்களுக்கு  அப்படி என்ன அழகு? என்று தீவிரமாக  யோசித்தேன் அவை அந்த நாட்கள்  ஆகிவிட்டன  என்பதைத் தவிர வேறொன்றும் சிக்கவில்லை.

வாடா மல்லி

இ ன்று உன் வீதி வழியே நான் வந்து கொண்டிருப்பது உன்னைக்  காண்பதற்கல்ல அந்தப் பச்சைப் பொட்டைப் பார்ப்பதற்காக குழலிலிருந்து விழுந்த  அருவியைக் காண்பதற்காக வாடி உதிர்ந்து விட்ட மல்லிப்பூவை வாடா மல்லியாக்கி செடிகளில் சூட்டுவதற்காக முடி கொட்டி, அழுக்கூறிய  சொறி நாய்க் குட்டியை செல்லம் கொஞ்சுவதற்காக தொடவே இல்லையே என்பது போல் தொட்டுக் கொண்ட ஒரு கணத்தை இன்னொரு முறை தொட்டுப் பார்ப்பதற்காக உடுத்தாமல் அள்ளிப் போர்த்திய சேலையிலிருந்து கேட்குமே ஒரு  கேலிச் சிரிப்பு அதைத் திரும்பவும் ஒரு முறை கேட்பதற்காக "உனக்கொன்றும் குறை இல்லையே?" என்று "அதிர்ஷ்ட விநாயக"ரை நலம் விசாரிப்பதற்காக எல்லா வாகனங்களுக்கும் வழி விட்டு  வழி விட்டு காரை கட்டை வண்டி ஆக்குவதற்காக "எல்லாத் துன்பங்களையும் கடந்து செல்க" என்பது போல் ஒவ்வொரு பாதசாரியையும் ஆசிர்வதிப்பதற்காக இத்தனைக்கும் குறுக்கே தயவு செய்து நீ வந்து விடாதே