Skip to main content

Posts

Showing posts from November, 2024

நம்மை ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது

  எ ங்கோ கண்காணாத இடத்தில் இருப்பாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வளவு பக்கத்தில் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். கொஞ்சம் ஓங்கி அழைத்தால் திரும்பிப் பார்க்கும் தொலைவில் நின்று கொண்டிருக்கிறாய். கடவுள் உன்னை நல்லபடியாக வைத்திருக்கிறாரா? பழைய நண்பர்களை அழைக்க பழைய குதூகலத்தின் குரல் வேண்டும் நீ மெல்ல நகர்கிறாய். அதே நடைதான் அதில் மாற்றமில்லை வளைவில் திரும்பி மறைகையில் ஒருமுறை என்னைப் பார்த்தாய். என்னை எனில் என் திசையை.  

திக்... திக்... திக்

வ ரவர  எனக்குத்  திகில் படங்கள் மிகவும் பிடிக்கின்றன. ரிமோட்டை அழுத்தி அழுத்தி ஒன்று விடாமல்  தேடுகிறேன் பேய்கள் என்னைக் கேட்டுக் கொண்டுதான் திரையரங்கம் வருகின்றன. காய்ந்த சருகுகள் எவ்வளவு பிரமாதமாக நடிக்கின்றன யாருமற்ற திசை நோக்கி விட்டு விட்டுக் குலைக்கும் கருப்பு நாய் கும்மிருட்டை கிழித்துக் கொண்டு அடிக்கும் சின்ன வெளிச்சம் சூப்பர்….. திகிலின் கதவைத் திறந்து கொண்டு திகிலுக்குள் வருகிறேன் காய்ந்த சருகோ கருப்பு நாயோ  இல்லாத திகில் அஞ்சி அஞ்சி குலை நடுங்கும் திகில் நடுநடுங்கித்  தலைகுனியும் திகில்

இசை கவிதைகள் - அகழ்

  ஒ ன்று விட்ட சித்தப்பா நம்பியிருந்த நிலம் அவனை தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டது. சாக்கடைக்குள் உருளவில்லையாயினும் ஓரமாய்ச் சரிந்து விட்டான். வாந்திக்குள் விழுந்து கிடக்கும் நாற்றத்தைத் தேடி யார் வருவார்கள்? அவனே கண்விழித்து அவனே கை ஊன்றி அவனே எழுந்தால்தானே உண்டு? ஆனால் கதை அப்படியில்லை ஒரு ஆட்டோவுக்குள்ளிருந்து 5 பேர் ஓடி வந்தனர் வரவே மாட்டேன் என்கிற முகத்தை தூக்கிக் கொண்டு அவன் மனைவி வந்திருந்தாள் அதில் ஒருவர் ஒன்று விட்ட சித்தப்பாவாம் கண்ணீர் வழிய வழிய அவன் மோவாயில் கொஞ்சி கூப்பாட்டில் வினவுகிறார் “ஐயோ…ராசா! உனக்கு என்னதான் வேணும்னு சொல்லு…” இங்கு கொட்டிக் கிடக்கும் இவ்வளவில் ஒன்றைக் கூட கேட்க மாட்டேன் ஆனாலும் சித்தப்பா என்னை ஒரு முறை இப்படிக் கேளேன். OOO ம னிதன் தன்னை மறக்கத் தேவையான பொருட்கள் ஸ்வீடன் போய் வந்த நண்பன் ஸ்வீடன் போக முடியாத நண்பர்களிடம் கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் ஸ்டோக்ஹோம் நகரில் ஒரு ஹோட்டல்… ஹோட்டல் என்றால் கல்லும் மண்ணும் சேர்த்துக் கட்டியதல்ல முழுக்க முழுக்க ஐஸ் கட்டிகளாலானது.. ஐஸ் ஹோட்டலில் ஒரு ஐஸ் பார்.. ஐஸ் மீது நடந்து சென்று ஐஸ் மீது அமரலாம். கதவு...

குரங்கிலிருந்து சிதாருக்கு

‘க பீர்’  என்கிற பெயர் அழைத்ததால் மீரட் நகரில் ஒரு இசைக்கூடத்திற்குள் நுழைந்தேன். இல்லாதவை இல்லை என்பது போல எங்கும் நிறைந்து ததும்பும் இசைக் கருவிகள் சின்னப் புல்லாங்குழலிருந்து பெரிய சிம்மாசனத்தில்  கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பியானோ வரை அத்தனை கருவிகளுக்கும் மத்தியில்  வெறுமனே நின்று கொண்டிருந்தால் போதும் என்று தோன்றியது பிறகு தோன்றியது அல்ல உறுதியாக  இது வெறுமனே அல்ல எந்தக் கரமும் தீண்டாத போதும் ஒரு நரம்பு தன்னைத் தான் மீட்டி அளித்தது. சரியாக அப்போது பார்த்து கடைச் சிப்பந்தி ஒருவர்  கேட்டார் “ எங்கிருந்து வருகிறீர்கள்?” தலையைத்  தாழ்த்தியவாறே உள்ளுக்குள் முணுமுணுத்தேன்.. “குரங்கிலிருந்து…..”