‘கபீர்’ என்கிற பெயர் அழைத்ததால் மீரட் நகரில் ஒரு இசைக்கூடத்திற்குள் நுழைந்தேன். இல்லாதவை இல்லை என்பது போல எங்கும் நிறைந்து ததும்பும் இசைக் கருவிகள் சின்னப் புல்லாங்குழலிருந்து பெரிய சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பியானோ வரை அத்தனை கருவிகளுக்கும் மத்தியில் வெறுமனே நின்று கொண்டிருந்தால் போதும் என்று தோன்றியது பிறகு தோன்றியது அல்ல உறுதியாக இது வெறுமனே அல்ல எந்தக் கரமும் தீண்டாத போதும் ஒரு நரம்பு தன்னைத் தான் மீட்டி அளித்தது. சரியாக அப்போது பார்த்து கடைச் சிப்பந்தி ஒருவர் கேட்டார் “ எங்கிருந்து வருகிறீர்கள்?” தலையைத் தாழ்த்தியவாறே உள்ளுக்குள் முணுமுணுத்தேன்.. “குரங்கிலிருந்து…..” |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments