Skip to main content

காதலில் தோல்வியுண்டோ கண்மணி?

 




காதலில் தோல்வி என்றானவுடன்

நேராக பெட்டிக் கடைக்குச் 

செல்கின்றனர் சிலர்


காதல் தோல்வி சிகரெட் 

என்றொன்றுண்டு.


என் பால்யத்தில்

சசியண்ணனை 

அந்த சிகரெட்டுடன் பார்த்திருக்கிறேன்


மாலை இருளுள்

ரயில்வே ஸ்டேசனின்

நீளமான சிமெண்ட் பெஞ்சில் 

தனியே அமர்ந்திருந்தார் அப்போது


கன்னங்களில் வற்றிய கண்ணீர்த் தடம்

ஆயினும்

முகமென்னவோ இருண்டுவிட வில்லை

அதில் வேறொரு வெளிச்சம்


உலகைக்  கொன்று புதைக்கும் வெறிக்கு பதில்

அவர் வாய்க்கால் பறவைக்கு 

பதில் சொல்லிக் கொண்டிருந்தார்


மிக மிக உறுதியாக

அவர் சிங்கத்தின்  வாயினுள் இல்லை

அந்த இதழ்கடை இனிப்பு கூட

எனக்கு இப்போதும் 

நினைவிருக்கிறது.


காதலில் தோல்வி கண்டவரின் கேசத்தை

அலசுவதற்கென்றே ஒரு காற்றுண்டு

என்பதை அன்றுதான் கண்டு கொண்டேன்

அவ்வளவு அழகை 

அள்ளிக்கொண்டு வரும் காற்று


காதல் தோல்வி சிகரெட்டுகள்

என்றொரு வகையுண்டு தான்


நான் என் முதல் சிகரெட்டை ஏற்றுகிறேன்

அதோ… அந்தக் காற்று வருகிறது


Comments

Popular posts from this blog

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

                                                                                                       நண்பர் செந்தில்   தான் புதிதாக துவங்க இருக்கிற மின்னிதழுக்காக   பொறுப்பான வேலையொன்றை தந்து செய்துதரச் சொன்னார் . அப்போது நான் பொறுப்பான வேலைகள் எதுவும் செய்யும் மனநிலையில் இல்லை . ஆனாலும் முதல் இதழ் என்பதால் செந்திலுடன் இருக்க விரும்பினேன் . ஆகவே   “ பொறுப்பற்ற வேலையொன்றை “ செய்து தருவதாக ஒப்புக்கொண்டேன் . அதுவே குத்துப்பாடல்கள் பற்றிய இக்கட்ட...

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை

கரகரப்பின் மதுரம்

நான் முறைப்படி இசை பயின்றவன் அல்ல. ஆயினும் பாடகன். பெயர் கூட  ‘இசை’. எவ்வளவு திமிர்? தமிழ்நாட்டில் எல்லோரும் பாடகர்தான். தன் வாழ்வில் ஒரு பாடலைக்கூட முணுமுணுத்திராத மனிதஉயிர்என்று எதுவும் இருக்காது. அதுவும் இளையராஜாவின் தேசத்தில் எல்லோரும்தான் பாட வேண்டும். எல்லோரும்தான் பறக்க வேண்டும். பாடல் என்பது கொஞ்சமாகப் பறப்பது. மனிதன் பாதசாரியானாலும் பறக்க விரும்புவன்தான். அவன் அத்தனை நெரிசல்களுக்கிடையே நடந்து நடந்து சலிப்பவன். எனவே சமயங்களில் அத்தனையையும் விட்டுவிட்டு அவன் பறக்கத்தான் வேண்டும்.  நான் பாத்ரூம் ஓட்டை வழியே பறந்து வானத்திற்குப் போய்விடுபவன். என்னை வானத்தில் ஏற்றிவிடும் அம்மையப்பன்  இளையராஜா. எனக்கு ராஜாவின் இசையைப் போலவே அவர் குரலும் அவ்வளவு பிடிக்கும். ஆனால் ஏன் பிடிக்கிறது என்பதுபற்றி இதுவரை யோசித்ததில்லை. ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராயவும் தெரியாது.  ஆராயத்தெரியாதுஎன்பது அருவியின் முன் ஒரு சலுகை. குடைந்து குடைந்து நீராட வேண்டியதுதான்.   ராஜாவின் இசையைப் போற்றிப் புகழும் சிலருக்குக்கூட  அவர் குரல் உவப்பானதாய் இருப்பதில்லை. கொஞ்சம் இசை அறிந்த நண்பர் ஒ...