Skip to main content

தூரன் குணாவின் நூல்விமர்சனம்


ஒளிமீன்கள் துள்ளும் கடலும் TN 37 T 7014 ல் ஒரு சாதாரணனும்

-தூரன் குணா

இசையின் உறுமீன்களற்ற நதி தொகுப்பை முன்வைத்து.

இரண்டாயிரங்களுக்குப் பின்னாலான தமிழ்க்கவிதையை மீநவீன கவிதை எனலாம்.தொண்ணூறுகளில் ஆழ அகலத்தோடு தமிழ்க் கவிதையில் பேசப்பட்ட உலகமயமாக்கல்,பாலியல் சார்ந்த உள்ளடக்கங்கள் இன்று வேறுவிதமான பரிமாணத்தை எய்திவிட்டது.தொண்ணூறுகளின் ஒரு பத்து பெருங்கவிஞர்கள் தமிழ்க்கவிதை வரலாற்றுப்பாதையில் நடுகற்களாக மாறிக்கொண்டிருக்கையில் இரண்டாயிரத்திற்கு பின்னாலான இளம் கவிஞர்கள் அவர்களுக்கே உரிய தனித்துவங்களுடனும் பலவீனங்களமுடனும் மெல்ல முன்வரிசைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒன்று அல்லது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ள ஒரு ஆறேழு கவிஞர்களை குறிப்பிடுகிறேன்( நீங்கள் பெயர்களை எழுதிக்கொள்ளலாம்).உலகமயமாக்கல் வெகு ஸ்திரமாகி அது தேசிய இனங்களின்,மொழிகளின் விழுமியங்களை அழித்துவிட்டபின் இந்த இளம்கவிஞர்களுக்கு தம் கவிதையில் தனித்த நிலப்பரப்பு ஒன்றை எய்துவது பெரும்சவாலானதாக இருக்கிறது.மாறாக சிதைவுற்ற பிம்பங்கள்,உடைவுண்ட நிலப்பரப்பு,மாறிவிட்ட அறங்களை எதிர்க்கொள்ளுதல் என்று அவர்களளுடைய கவிதையின் நிலப்பரப்பு துண்டுபட்ட,அந்தியத்தன்மை மிக்கதாய் உருவாகும் ஒரு பொதுப்பரப்பில் வாழ்வையும் மொழியையும் வினை புரிய வேண்டியவர்களாக இருக்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் இரண்டாயிரத்திற்கு பின்னாலான கவிஞர்களில் தனித்துவமிக்கவரான இசையின் “உறுமீன்களற்ற நதி” தொகுப்பை அணுக வேண்டியிருக்கிறது.முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய,கடந்த ஆண்டில் வெளிவந்த இத்தொகுப்பு மிக முக்கியமானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
இசைக்கு கவிதைக்கான தரிசனங்கள் அகம் மற்றும் புறம் சார்ந்த இரண்டு தளங்களிலும் இணைந்தே நிகழ்கிறது.அவரது கவிதைகள் ஒரு வழமையான, நமது கண்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒரு காட்சியை முற்றிலும் வேறொரு கோணத்தில அணுகிப்பேசுகிறது.அதாவது சாதாரணத்தின் மீது அசாதாரணத்தை
ஏற்றிவிடும் அவரது உத்தியில் அற்ப சேதன/அசேதனங்களும் அதிசயிக்கத்தக்க விதத்தில் பரிமளிக்கின்றன.கவிதை நமக்கு அளிக்கும் கிளர்ச்சியை ,துயரார்ந்த அமைதியை,புதிர்மையை இக்கவிதைகள் நமக்கு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகின்றன.மிக முக்கியமாக மீநவீன கவிதைகள் புறக்கணித்துவிட்ட கவிதைமொழியின் இசை சார்ந்த அழகியலை இந்தக் கவிதைகள் மீட்டெடுத்துள்ளன.வறட்டுத்தனம் இல்லாததாக இருப்பது இத்தொகுதியின் முதல் வெற்றி.

மொத்தம் அறுபத்தி மூன்று கவிதைகளைக் கொண்டிருக்கும் இத்தொகுப்பின் ஆன்மாவை தேடும்போது நமக்கு கிடைப்பவையாக கீழ் வருபவற்றைச் சொல்லலாம்.
அ)உலகமயமாக்கல் நமது தனித்த வாழ்முறையை அழித்தொழித்தபின் தெருமுனைகளெங்கும் புதிய அறங்களை தட்டி அடித்து வைத்திருக்கிறது.அந்த அறங்களுக்கும் நமது வாழ்முறையாக இருந்ததற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.ஆகவே முன்னிலும் அதிகமாய் தெருக்களில் மன நலம் குன்றியவர்கள் நம்மை கடந்து போகிறார்கள்.இச்சூழலில் புதிய அறங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள இயலாத நகரமும் கிராமமும் அற்ற ஊரிலிருந்து கிளம்பும் முதல் தலைமுறை இளைஞனின் மன அவசங்கள்,துயரங்கள் ,இயலாமையில் ஊற்றெடுக்கும் வன்மம்,வாழ்வில் யாரேனும் முதன்முதலாய் அளிக்கும் பரிசைப்போல் மெல்லிய மகிழ்வுகள் இவற்றை பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு பகுதி கவிதைகள்

ஆ)மரணத்தைப் போல் காமமும் நம்மை என்றும் தொடரும் வேட்டை நாயாக இருக்கிறது.அது பசியைப்போல நமது கண்களின் மேலே அறங்களை மறைக்கும் படலத்தை உருவாக்கும் வல்லமை படைத்ததாக இருக்கிறது.புனித மரபுகளை மீறத்தெரியாத/மீறமுடியாத காமவயப்பட்ட உடலுக்கு எதிர்பால் உடலென்பது மிகவும் விலையுர்ந்த வஸ்துவாகிவிடுகிறது.அதுவே யெவ்வனம் கொழுத்த வீடுகளின் முன்னால் அவனை பிச்சாந்தேகியாக்குகிறது.இவ்வாறாக காமத்தின் தீராத அவஸ்தையை பேசக்கூடிய கொஞ்சம் கவிதைகள்
இ)தர்க்கத்திறனை இழந்துவிட்ட அல்லது அறியாத மனங்களை பிறழ்வடைந்துவிட்டதாக கற்பிதம் செய்துகொள்ளும் நமது மனப்பிறழ்வுகளை பகடி செய்து,அவ்வகையான மனங்களுக்குள் பயணித்து அதன் நுண்ணுணர்வு ரகசியங்களை காட்சிப்படுத்தும் கவிதைகள்
ஈ)தீராத காதலை தன்னுள் சுமந்துகொண்டு அது தரும் கிளர்ச்சிகளை,வேதனைகளை,பாதுகாப்புணர்வுகளை மையமாகக் கொண்ட காதல் கவிதைகள் மற்றும் கவிஞனின் தன் கவிதை பற்றிய சந்தேகங்கள்,அதன் போதாமைகள்,கவிமனதை நசுக்கும் தினசரிச் சூழல் இவற்றைப்பேசும் கவிதைகள்.
மேற்கண்ட புரிதலுடன் நான் இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதைகளாக தேர்பவை குறுகலான சந்துகள்,திடீர் வளைவுகள், நிலைபெறும் மனம்,பேரின்ப வகைப்பாட்டில் வரும் ப்ளம் கேக் சாப்பிடுதல்,ஒரு கூரான கத்திக்கு முன்னால்,மிக எளிய பணி,Mr.சஷ்டிக்கவசம்,முன்னொரு காலத்தில் குணசேகரனென்றொருவன் வாழ்ந்து வந்தான்,ஒரு பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை.இது எனக்கு வசதியான வரிசை,பிற கவிதைகளை வேறொரு வரிசையில் விவாதிக்க வேண்டியிருக்கிறது. நான் மேற்குறிப்பிட்ட கவிதைகளில் பொதுவான அம்சமாக காணுவது இந்தக் கவிதைகள் தம்மளவில் கொண்டிருக்கும் செவ்வியல் தன்மை.கருப்பொருள்,உத்தி,வெளிப்பாடு ஆகியவற்றில் தனித்துவத்தைக் கொண்டிருக்கும் இக்கவிதைகள் வெகு பிரகாசமானவை.இந்தக் கவிதைகளே இசையின் அசலான படைப்புலகத்தின் சாரமாக இருப்பதாக நான் நம்புகிறேன்.

குறுகலான சந்துகள்,திடீர் வளைவுகள் என்ற அவரது கவிதை தமிழின் நிஜமான மீநவீன கவிதைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.இசை உபயோகப்படுத்தியிருக்கும் படிமமும் விவரித்திருக்கும் காட்சியும் உலகின் எண்ணற்ற சாதாரணர்களின் வாழ்வை இருபது வரிக்குள் விவரித்துவிடுகிறது.குறுகலான சந்துகளில் பயணிப்பதில் அவ்வளவு தேர்ச்சி இல்லாத அது குறுகலான சந்துகளே பெரிய சாலைகளாக மாறிவிட்ட காலத்தில் தன் கொலைவெறியோடு முடிவுறாத சந்துகளில் அலைந்து கொண்டிருக்கிறது.
நிலைபெறும் மனம் கவிதையில் இசை, ஒரு பைத்தியம் தன் கை நரம்பை அறுத்துக்கொண்டு இந்தக் கணம் மனதின் ஓயாத அலைச்சலில் இருந்து தப்பித்துக்கொள்வதாக சொல்லும்போது நமது மனங்களுக்குள் குடிகொண்டிருக்கும் பேய்மைகள் எழுந்து குதியாளம் போடுவதை பார்க்க நேர்கிறது.வாழ்வின் ஒவ்வொரு கணமும் நாம் அனுபவிக்கும் துயரங்களையும் சித்ரவதைகளையும் நாம் கைக்கொண்ட சட்டக வாழ்வு வெளியேற்ற வழியில்லாததாக மாற்றிவிட்டது. நாம் குழம்பி நின்று கொண்டிருக்கையில் ஒரு பைத்தியம் சிரித்துக்கொண்டே நம்மைக் கடக்கிறது.அதன் கை நரம்பிலிருந்து குருதி வழிந்துகொண்டிருக்கிறது. நாம் நம் மொன்னையான கைகளைப் பார்த்துக்கொள்கிறோம்
மிக எளிய மொழியில் ஒரு உயிரின் ஆதார எளிய தேவையை பேசும் “பேரின்ப வகைப்பாட்டில் வரும் ப்ளம் கேக் சாப்பிடுதல்” கவிதை இசையின் கவி ஆளுமைக்கு இன்னொரு உதாரணம்.இது யாவருக்குமான கவிதை.வாசகன் ப்ளம்கேக்கின் இடத்தில் தனக்கு விருப்பமானதை நிரப்பிக்கொள்ளும்போது இக்கவிதை பொதுத்தன்மையின் உச்சத்தை அடைகிறது.”ஏனைய நாட்களின் மேல்/துடுப்பிட்டு துடுப்பிட்டு/” என்ற இசையின் லகுவான அழகிய வரி நமது எந்திரத்தனமான தினங்களுக்கு எப்படிப்பட்ட ஒரு அர்த்தத்தைக் கொடுக்கின்றன!தேடலும் அடைதலும் என்ற உயிர்களின் மிகப்பெரிய கோட்பாட்டை இசையின் அனாயசமான கவிமொழி வெகுசிறப்பான கவிதையாக மாற்றுகிறது.
இசையின் தனித்துவமான கவிமொழியில் அதிர்வுமிக்க மூலப்பொருளாய் விளங்கும் பகடிக்கு வீரியமிக்க உதாரணமாய் “Mr.சஷ்டிக்கவசம்” கவிதையைச் சொல்லலாம்.இவ்வளவு கிண்டலான மொழியில் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான விமர்சனத்தை வைத்துவிட்ட இசையை பார்க்கும்போது எனக்கு மெல்லிய பொறாமை தோன்றுகிறது.இதே விதமான பகடியை நாம்
“கிரீடங்களை மட்டும் தாங்கும் தலைக்காரன்” கவிதையிலும் காணலாம். இறுகிய தன்மையுள்ள கருப்பொருட்களை மட்டும் பேசிக்கொண்டிருக்கும் மீ நவீன கவிதையுலகில் இசையின் பகடி நமக்கு புன்னகையையும் ஊட்டுகிறது.
குணசேகரனைப் பற்றி இசை இரண்டு கவிதைகள் எழுதியுள்ளார்.மேற்குறிப்பிட்டது தவிர “குணா (எ) குணசேகரன்” என்ற ஒரு கவிதையும்.இரண்டும் ஒரே நபரைப் பற்றியதாக இருந்தாலும் முதல் கவிதையை விட இரண்டாவது சற்று ஆழமற்றதாக இருப்பதற்கான காரணங்களை யோசிக்கும்போது இரண்டாவதில் குணாவோடு கவிஞனும் கவிஞனின் தன்முனைப்பும் இருப்பதாக தோன்றுகிறது.மேலும் இக்கவிதையில் விஷயங்கள் ஒரு சட்டகத்துள் வலிந்துகொள்ளப்பட்டவையாக இருப்பதை காண்கிறோம்.மாறாக முதல் கவிதை வெகு இயல்பாக ஞாயிற்றுக்கிழமையின் ஆன்மாவோடு ஒரு செவ்வியல் திரைப்படத்தின் துயரமான இறுதிக்காட்சியைப் போல் இருப்பதையும் காண்கிறோம்.ஞாயிற்றுக்கிழமை,வீதியின் கடைசிக் குடியிருப்பு,காரை பெயர்ந்த மண்சுவர்கள்,பீடித்துண்டுகள்,மதுக்குப்பிகள்,தீராத பேச்சு எல்லாம் மறையும்போது தனியனுக்கு துணையாய் மிச்சமிருப்பது நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் மணியோசை மட்டும்.அப்போது அவன் கடைசிப் பெட்டிக்கும் முந்தைய பெட்டிக்குமிடையே ரயிலைக் கடந்து கடவுளுக்கு காட்சியளிக்கிறான். நமக்கு உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுமைமிக்க குணசேகரனை போன்ற தோழ்ர்களின் கண்களே நினைவிற்கு வருகின்றன.
ஒரே தன்மையின் இருவித பரிமாணங்களாக தோற்றமளிக்கும் “மிக எளிய பணி” மற்றும் “பணிமனை” ஆகிய இரண்டுகவிதைகளும் சாதரணனுக்கு எதிராய் நிகழ்த்தப்படும் அரசியலின் முகமற்ற குரூர வன்முறையைச் சித்தரிக்கின்றன.இதில் அரசியலின் மீதான எதிர்விமர்சனத்தை இசை வெகு நுண்மையான பகடியின் வழியாக நிகழ்த்துகிறார்.கவிதையின் வழியே விமர்சனத்தை நிகழ்த்தும்போது பெரும்பாலனவர்களுக்கு கவிதையை கைவிடும் போதாமை நிகழ்கிறது.இசை இந்தத் தடைகளை வெகு சாதரணமாக தாண்டுகிறார்.
“இன்பியல் ஓவியம் வரைந்த கதை”,”கிடார் கலைஞனின் சடலம்”,”சகலமும்”,”ஒரு பிளாஸ்டிக் டம்ளர்”,” நாய் கவிதைகள்” போன்ற கவிதைகள் தம்மளவில் தனித்துவத்தைக் கொண்டிருக்கும் சிறப்பான கவிதைகள்.குறிப்பாக நாய் கவிதைகளில் “கனரக வாகனங்களை/கடிக்கத் துரத்தும்/ நாயின் படிமம் எனக்கு” மற்றும் சகலமும் கவிதையில் “சகலமும் கலைந்து சரிய/அழுதழுதடங்கியவன்/ தன்னருகே வந்து/குழைந்த நாய்க்குட்டியை/மெல்ல மெல்ல தடவிக் கொடுத்தான்/அது அவன் உடலாகவும் இருந்தது” என்ற வரிகள் நம்மை சொற்களற்ற துயரார்ந்த நிலப்பரப்புக்குள் நம் துயரங்களோடு இறக்கிவிட்டுவிடுகின்றன.”கிடார் கலைஞனின் சடலம்” இத்தொகுப்பிலுள்ள காதல் கவிதைகளில் முழுமையடைந்ததாக வந்துள்ளது.ரொமாண்டிஸத் தன்மை கொண்ட “ஒரு பிளாஸ்டிக் டம்ளர்” வினோதமான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.
இந்தத் தொகுப்பு இன்னும் இரு விதத்தில் மிக வித்தியாசமனதாக தோன்றுகிறது.ஒன்று,இத்தொகுப்பின் கவிதைகளுக்கு இசை அளித்துள்ள தலைப்புகள்.அவை ஒவ்வொன்றும் வாசகனை கற்பனையின் வெளிக்குள் செலுத்தும் தன்மையை கொண்டுள்ளன.இரண்டாவது அடர்வான மொழியோடு இசை உருவாக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் புதுப்புது சொற்கள்.”தனியன்”, ”உடலன்”, ”பிச்சாந்தேகி”,” துயரன்” போன்றவை.இன்னொன்றையும் நாம் சொல்லவேண்டும்.அவர் பணி சார்ந்த மாத்திரைகள்,மருந்துகள் இவற்றின் மெல்லிய வாசனையையும் மயக்க நிலைகளும் அவரது கவிதைக்குள் அழகாக பொருத்திக்கொள்கின்றன.
இந்தத் தொகுப்பில் இசை எழுதியுள்ள காமம் மற்றும் காதலைக் குறித்த கவிதைகளில் சில வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன.ஆனால் பெரும்பாலானவை உள்ளீடற்றதாக அல்லது description ஆக இருக்கின்றன.அவரது கவிதைகள் குறித்த கவிதைகள் முழுக்க தொகுப்பில் ஒட்டுக்குடலைப் போலத் தோற்றமளித்து எரிச்சலை ஊட்டுகின்றன.பெரும்பாலான கவிதைகளின் பலவீனமாக நாம் ஒன்றை அனுமானிக்க முடிகிறது.அது இயல்பாய் எழும் கவிதையை காத்திருக்க விடாமல் கவிஞன் வலிந்து உள்ளே போய் வேலை செய்து அதை கவிதை எழுந்த மூலத்திற்கு பொருத்தமில்லாமல் அல்லது அழுத்தமற்று முடியச்செய்துவிடுவது அல்லது கவிதை வலுவற்று முடிவது.இவ்வகைக் கவிதைகளுக்கு உதாரணமாக மயக்கு மருந்துகளை தவிர்க்கவும்,கன்றுக்குட்டியைப் போல்,தற்கொலக்குத் தயாராகுபவன்,அழைப்பு மணியை,ஒரு சுவரஸ்யத்திற்காகத்தான் போன்ற கவிதைகளைச் சொல்லலாம்.ராசா வேஷம் கட்டும் கூத்துக்கலைஞன் கவிதைகள் துணுக்குககளாகவே நின்று விடுவதா அல்லது கவிதையாக மறுவதா என்ற இடைப்பட்ட குழப்பத்தில் இருக்கின்றன.
பித்தேறிய கனா,ஒரு திகிலூட்டும் வரி ஆகிய இரு கவிதைகளும் முதல் இரண்டு வரிகளை மட்டும் கவிதையாக கொண்டிருந்தால் வீரியமிக்கதாக இருந்திருக்கும்.ஆனால் கவிஞர் மேலும் கவிதைக்குள் பேச முற்பட்டு அதன் வீரியத்தை இழக்கச்செய்கிறார்.மிகச்சிறப்பாக வந்திருக்க வேண்டிய “பிதாவே” கவிதை Pattern Poetry ஆக மாறிவிடுகிறது.
இத்தொகுப்பின் ”சிறப்பாக எழுதப்படாத” கவிதைகளாக “வெற்றி,மிகப்பெரிய வெற்றி”, “ஓப்பியடிக்கும் பெண் அதிகாரி” ,”மியாவ்” போன்றவற்றை நான் மதிப்பிடுகிறேன்.காரணம் இக்கவிதைகளில் கவிஞன் உள்ளடக்கத்தைப் பார்க்கும் கோணமே தவறாக இருக்கிறது.ஆனால் மொத்தத் தொகுப்பின் கவிதைகளை மதிப்பிடுகையில் இந்த பலவீனங்கள் அனுமதிக்கத்தக்கதே.மேலும் சிறப்பாக எழுதப்படாத கவிதைகள் என்று குறிப்பிடுவது ஒரு அடையாளம் சார்ந்த வகைப்பாட்டுக்கு மட்டுமே.எழுதும் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு காரணம் இருப்பதை கவிஞன் அறிவான்.ஆகவேதான் நாம் கவிதைகளை மோசமானவை என்று வகைப்படுத்தாமல் வேறுவிதமாக சொல்ல வேண்டியிருக்கிறது.
இசையின் “உறுமீன்களற்ற நதி” யில் பொங்குவது புதுவெள்ளம்.இந்த வெள்ளம் சிற்சில குப்பை கூளங்களையும் அடித்து வந்தாலும் புதுவெள்ளத்தின் அழகை அது குறைக்கவில்லை.தன் சரியான திசையை இந்தத் தொகுப்பில் கண்டடைந்திருக்கும் இந்நதி ஒளிமீன்கள் துள்ளும் பெருங்கடலை நோக்கியே போகிறது என்று நான் நம்புகிறேன். நதிமுகத்தைப் பாதுகாத்துக்கொள்வது இசையின் கடமை.
Reply Forward


New window
Print all
« Back to Sent Mail
Archive

Comments

ஒளிமீன்கள் துள்ளும் கடல்- ஆஹா, அட்டகாசமான தலைப்பு.

பதிவு போட்டிருந்த அன்றே வாசிக்கத்தொடங்கிவிட்டேன். இன்றைக்குத்தான் முடிக்க முடிந்தது.

ஆழ்ந்த வாசிப்பும் , தேர்ந்த பக்குவமும் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை.

உறுமீன்களற்ற நதியை இன்னுமொருமுறை படிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டது, கட்டுரை.

இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை பற்றியும் எழுதும்படி , தூரன்குணாவை கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் .நண்பா
இது ஒரு மிக சிறந்த எழுத்து.எனக்கு இதில் சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு.ஆனால் மிக்க உழைப்பும், அர்ப்பணிப்போடும் எழுதப்பட்டிருக்கிறது. அவன் என் தொகுப்பை எத்தனை முறை படித்தான் என்று சொன்னால், கொங்சம் நம்புவதற்கு சிரமமாக இருக்கும்.என்னை ஊதிக்காட்டவோ, அவனை ஊதிக்காட்டவோ இது இங்கு பதியபடவில்லை.இந்த எழுத்துவன்மை என்னை மிரள வைத்தது.அதுவே காரணம்.
இசை,
உன் தொகுப்பு குறித்து எழுதப்பட்ட நல்ல விமர்சனங்களில் இது பிரதானமானது.
நண்பன் குணாவுக்கு என் வாழ்த்துக்கள்.
padmanabhan said…
நண்பருக்கு வணக்கம்
தங்களின் உறுமீன்களற்ற நதி வாங்க விரும்பி ஆர்குட்டில் விபரம் கேட்டிருந்தேன். நான் நீலகிரியில்,தஞ்சையி்ல் முயன்றும் கிடைக்கவில்லை
வாங்கும் முறைகளை(முகவரி,பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்ற) கூறினால் நன்று.
நன்றி
பத்மநாபன்,Office of the ACFA, Cordite Factory, Aruvankadu, The Nilgiris - 643 202
tan_padma@rediffmail.com
கோவை விஜயா பதிப்பகத்தில் 10 பிரதிகள் வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். காலச்சுவடு அலுவலகத்தில் கேட்டாலும் அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன். காலச்சுவடு தொடர்பு எண்;967778863
Unknown said…
நல்ல விமர்சனம் இசை.
அடுத்த தொகுதி எப்போது?

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம