Skip to main content

அன்புள்ள இசை

                                             
         



அன்புள்ள இசை,

      நேற்று உங்களின் ‘ஆட்டுதி அமுதே’ தொகுப்பை வாசித்தேன். முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது முகம் மலர்பவர்களில் நானும் ஒருவன்.உங்கள் புனைப்பெயர் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.இசையைப் போலவே உங்கள் எழுத்துகளின் வழியே நீங்கள் வாசகனை மலர்த்துகிறீர்கள்.வெறும் மலர்த்தல் மட்டுமல்ல… நான் கவனிக்கத்தவறிய பலவற்றை நேரடியான மொழியில், பகடியான தொனியில் காட்சிப்படுத்துவதுதான் உங்களது தனித்துவம்.பெரும்பாலும் நவீன கவிதைகளை படிக்கும்போது சிறிது நேரத்தில் ஒரு அயற்ச்சி வந்துவிடும்.காரணம்,சிக்கலான படிமங்கள்,குறியீடுகள்,இறுகிய மொழிநடை,புரியாத்தன்மையால் மறுவாசிப்பைக் கோருபவை என்று அவை இருக்கும்.மேலும்,நான் அடிப்படையில் சற்று சோம்பேறி என்பதாலும்,அவசரம் பிடித்தவன் என்பதாலும் என்னதான் கவிதைகள் மீது ஆர்வமும்,வேட்கையும் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் எரிச்சல் வந்துவிடும்.புரிய மாட்டீங்குதே என்று.ஆனால் உங்கள் கவிதைகள் பெரும்பாலும் முதல் வாசிப்பிலேயே புரிந்து விடுகின்றன.(என்பதால் சிங்கத்தின் சினத்திற்கு நீங்கள் ஆளாகாமல் தப்பிவிட்டீர் புலவரே!!).
   இது என்னுடைய முதல் வாசகர் கடிதம்.ஏனெனில் நான் வாசிப்பில் அதி சின்னப்பயல்.என் வாசிப்பிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.என்னதான் புரண்டு,கரணம் போட்டு வாசித்தாலும், இப்போதுதான் இலக்கியத்தின் outline என்னவென்றே புலப்பட்டிருக்கிறது.
    உங்களது கவிதைகள் என் சௌந்தர்ய இதழில் புன்னைகையை இழைய வைப்பவை என்றாலும் ,அதிர்வுறச் செய்த ஒரு சில கவிதைகளும் இருக்கின்றன.கெக்கலக்க போட்டுக்கொண்டு ஒவ்வொரு கவிதையாக வாசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தபோது ‘இப்படி மழை வந்து விசுறுகிறது’ கவிதையில் சட்டென நின்று விட்டேன். என் புரிதலின் அடிப்படையில் சொல்வதென்றால், அதை நிராகரிப்பின் படிமங்கள் நிறைந்த கவிதையாய் பார்க்கிறேன்.பைத்தியம் என்பதை நான் விலக்கப்படவர்களின் குறியீடாகப் பார்க்கிறேன்.
      “பைத்தியத்திற்கு ஒரு வெட்டவெளி இருந்தது
      இப்படி மழை வந்து விசுறுகிறது”
என்ற வரிகள் அக்கவிதையின் உச்சம்.எனக்கு மிகப்பிடித்தமான கவிதை அது.'நீதிநெறி விளக்கம்’ கவிதையில் வரும் அதுபோன்ற சாவிக்காரர்கள் நான் பலமுறை  சந்தைகளில் கண்டவர்கள் தான்.ஆனால் அவர்கள் இசையால் தான் கவிதையாகியுள்ளார்கள். ‘வல்லான் வகுத்தது’ சுய சிந்தனைகளுக்கு மதிப்பளிக்காத இன்றைய பல்துறை நிறுவனங்கள் மீதான இடித்துரைத்தல்.
   இப்படியும் கவிதை எழுதமுடியுமா என்று வியக்கவைத்தவை-‘நம்பு’,‘வாழ்விலோர் ஆனந்தம்’ போன்ற கவிதைகள்.வெறும் பகடிகள் மட்டுமே உங்கள் கவிதை இல்லை என்று சொல்வேன்..சமகால வழ்வின் போலிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் ,தார்மீகக் கோபங்கள், (நத்திங் ஸ்பெஷல்?,குடலுறுவி,வீடு,வெள்ளைக்கலர்,ரவா ரோஸ்ட்) சொந்த வாழ்க்கையின் பிரச்சினைகள், மகிழ்ச்சிகள்,ஏக்கங்கள் என்று பல்முனைகள் கொண்டவை அவை.உங்களுக்கேயான தனித்துவத்தின் அடையாளங்களாக ஆட்டுதி அமுதே,காவியம்,கார் சிறப்பு,இன்னிரவு,சாதாமாங்காய்,அவரும் நானும்,ஆட்ட நாயகன், போன்றவற்றைச் சொல்லலாம்(சில கவிதைகள் விடுபட்டிருக்கலாம்)
    செவ்விலங்கியங்களின் சொற்கள்,பெயர்கள் கொண்ட கவிதைகளில் தற்காலத்தைப் பிணைத்திருப்பது புதிய அனுபவம் தருபவை.(நாட்டு வளம் உரைத்தல்,தலைவி அரற்று)

“சுபம்” கவிதை உங்களது உறுமீன்களற்ற நதி தொகுப்பில் வரும் ‘ப்ளம் கேக்’ கவிதையை நினைவு படுத்துகிறது.அதில் ப்ளம் கேக் சாப்பிடுவதற்காக நாட்களின் மேல் துடுப்பிட்டு துடுப்பிட்டுச் செல்லுதல்.இதில் நாட்களை தாண்டிக் குதித்து,சண்டையிட்டு,கெஞ்சி சினிமாவின் ஸ்டைலில் அவற்றைக் கடந்து, விரும்பிய ஒரு நாளை அடைவது.நல்லதொரு சித்தரிப்பு இக்கவிதை.அதேபோல ‘சுமாரான கொள்கைக்குன்று’ கவிதை, ‘Mr.சஷ்டிக்கவசம்’ கவிதையை நினைவூட்டுகிறது.‘சாய்ஸ்’, ‘ஏகாந்தவாசம்’-போன்ற கவிதைகள் சுயபகடியின் சிருஷ்டிகள். ‘சுந்தரமூர்த்தியை மகிழ்ச்சி பீடித்துக்கொண்ட’போது தனசேகருக்கும் மகிழ்ச்சி பீடித்துக்கொண்டது.அவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.சளி மூக்கில் வழிந்தபோதும் உற்சாகம் கொண்டார்.
     இத்தொகுப்பிலுள்ள பாதிக் கவிதைகளை உங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவெ படித்திருக்கிறேன்.இருப்பினும் புத்தகமாகப் படிக்கும்போது ஒரு தனி இன்பம் உள்ளது.இத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த அண்ணன் திருமூர்த்தி என் நன்றிக்குரியவர்.போன வாரம் என் அலைபேசியின் தொடர்பு எண்கள் யாவும் அழிந்துபோனபோது உங்கள் எண்ணும் சுவாஹா ஆகிவிட்டது.அதையும் அவர்தான் தந்தார்.எண் இருந்தபோதிலும் ஒரு முறைதான்(ஆறு மாதங்களுக்கு முன்பு) உங்களிடம் பேசியுள்ளேன்.ஒரு முறை சந்தித்திருக்கிறோம்(ஆத்மாநாம் விருது விழா 2016).

                                                                             அன்புடன்
                                                                             தனசேகர்
                                                                 

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை