1.
“ எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."
என்கிற கோட்டின் வழியே
கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று அமர்ந்துவிட்டார்.
2.
தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும்.
3.
கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்
எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது
ஒரு கோட் !
4.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்
ஒரு கோட்டாக.
5
கோட்களின் காலம் முடிந்து விடக்கூடாது என்பதற்காக
நிகழ்த்தப்பட்ட திருவிளையாடல்தான்
பேப்பர்பாய் ஜனாதிபதியான படலம்
6
வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம்
என்கிற கோட்டிலிருந்து
பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்
அத்தனை பேக்கரிகளும்.
7.
எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;
ஆனால் கோட்களின்றி ஓடாது
என்பான் புத்திசாலி.
8.
இல்லத்து அரசியரே!
உங்கள் மனாளனின் அடிவயிற்றில்
ஓங்கி ஒரு உதை விட
பொன்னான வாய்ப்பு....
பதிவிறக்கம் செய்வீர்
" share chat "
9.
நட்பிலிருந்து காதலுக்கு அழைக்க
100 கோட்கள் தேவைப்படுகின்றன.
காதலிலிருந்து கட்டிலுக்கு நகர்த்தவோ
ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது
என்று அலுத்துக் கொள்கிறான்
ஒரு தத்துவாசிரியன்.
10.
உன் 800 பக்க நாவலில்
அந்த இரண்டு வரிக் கோட்டை நீக்கி விடச் சொன்னால்
ஏன் பதறியடித்து ஓடுகிறாய் தஸ்தேவ்யஸ்கி ?
11.
கோட்களை கேலி செய்து நீ எழுதிய கோட்தான்
இன்று
கோட்களுக்கெல்லாம் மேலான கோட்டாக
கோலோச்சிக் கொண்டிருப்பதை
அறிவாயா நாகராஜா?
12.
பிடித்துத் தொங்க கோட்களேதும் மிச்சமில்லை
என்றான பிறகுதான்
ஒருவன் தூக்குக் கயிற்றில் தொங்கி விடுவதென்ற தீர்மானத்திற்கு வருகிறான்.
13.
எனதருமை கோட்களே !
நீங்கள் கடவுளரைப் போலன்றி ஓரவஞ்சனை செய்யாதிருங்கள் !
நன்றி : காலச்சுவடு- செம்டம்பர்-18
Comments