சாம், நேற்று சட்டென்று பேச வரவில்லை. ஆனால் பேசியிருக்க வேண்டும். விஜியைப் போல நல்ல வார்த்தை ஒன்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அந்தச் சொல்லுக்காகவும் அது தந்த தூண்டுதலுக்காகவும் விஜிக்கு எனது நன்றி. உங்களுக்கும் சரோவிற்கும் மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் அதை மண வாழ்வு என்று சொல்ல மாட்டீர்கள். அதனாலென்ன. குழந்தைகள், அவர்களை வளர்ப்பதற்கான ஒரு கூரை, அதைச் சாதிக்கும் பொருட்டான ஒரு பொருளியல் செயல்பாடு என்ற ஒன்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம். இந்த ஆறு வருடத்தில், முதல் இரண்டு வருடங்கள் உங்கள் இருவருக்கும் அலைக்கழிப்பான நாட்கள். ஆரண்யா வந்த பிறகான நான்கு வருடங்களே நீங்கள் ஒரே கூரையின் கீழ் அமைந்தீர்கள். அது பெசண்ட் நகர் வீடு என்றழைக்கப்பட்டது. நண்பர்களுக்கிடையில் சுருக்கமாக 'பெசண்ட் நகர்' என்றே அழைக்கப்பட்டது. ஒரு நான்கு வருடங்களில் அந்த வீடு ஒரு பெரிய சாப்பாட்டு மேசையென்றாகிவிட்டிருக்கிறது. நான் சிறு வயதிலிருந்தே பெருங்கூட்டமாக உணவருந்திப் பழக்கப் பட்டவன். சிறு வயதில் வீடு ஆளும் பேருமாக இருக்கும். உங்களுக்குத் தெரியும் வீட்டாட்களே எப்பொழுது...