சாம், நேற்று சட்டென்று பேச வரவில்லை. ஆனால் பேசியிருக்க வேண்டும். விஜியைப் போல நல்ல வார்த்தை ஒன்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும். அந்தச் சொல்லுக்காகவும் அது தந்த தூண்டுதலுக்காகவும் விஜிக்கு எனது நன்றி.
உங்களுக்கும் சரோவிற்கும் மணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் அதை மண வாழ்வு என்று சொல்ல மாட்டீர்கள். அதனாலென்ன. குழந்தைகள், அவர்களை வளர்ப்பதற்கான ஒரு கூரை, அதைச் சாதிக்கும் பொருட்டான ஒரு பொருளியல் செயல்பாடு என்ற ஒன்றை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம்.

இந்த ஆறு வருடத்தில், முதல் இரண்டு வருடங்கள் உங்கள் இருவருக்கும் அலைக்கழிப்பான நாட்கள். ஆரண்யா வந்த பிறகான நான்கு வருடங்களே நீங்கள் ஒரே கூரையின் கீழ் அமைந்தீர்கள். அது பெசண்ட் நகர் வீடு என்றழைக்கப்பட்டது. நண்பர்களுக்கிடையில் சுருக்கமாக 'பெசண்ட் நகர்' என்றே அழைக்கப்பட்டது. ஒரு நான்கு வருடங்களில் அந்த வீடு ஒரு பெரிய சாப்பாட்டு மேசையென்றாகிவிட்டிருக்கிறது. நான் சிறு வயதிலிருந்தே பெருங்கூட்டமாக உணவருந்திப் பழக்கப் பட்டவன். சிறு வயதில் வீடு ஆளும் பேருமாக இருக்கும். உங்களுக்குத் தெரியும் வீட்டாட்களே எப்பொழுதும் பத்து பேரிருப்பார்கள். அதனாலேயெ பெரிய சாப்பாட்டு வட்டங்கள் எனக்கு ஒரு மேடையெனப் பழகிவிட்டன. அங்கே நீங்கள் உழப்பும் ஒரு குழந்தையை, ஒரு கள்ளனை, பேராசைக்காரனை, ஒரு கோமாளியை, கருணை மிக்க ஒரு கொடையாளியை, ஒரு துறவியைக் காணமுடியும். மேசை விரிய விரிய அதன் சாத்தியப்பாடுகளும் கூடும்.முந்தைய தலைமுறைபோல எதிர்காலப் பொருளியல் திட்டங்களை ஒரு மதம் என ஒழுகாத மனமே இதைச் சாத்தியமாக்கும். இன்றைய சிறுகுடும்பப் பொருளியலில் இதை ஊதாரித்தனம் என்று சொல்லிவிடலாம். எனது பெற்றோரிடம் இந்தப் பண்புகளைப் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் பெற்ற நட்புகளை நினைத்துப் பார்க்கிறேன். லிபி, ஷங்கர், இசை, கவின், சாம்சன் என்று அது நீளுகிறது. அவையெல்லாம் மேற்படி சாப்பாட்டு மேசையில் கிடைத்தவைதாம். பெசண்ட் நகரை ஒரு சாப்பாட்டு மேசை என்று அழைக்கலாம்.
அந்த சாப்பாட்டு மேசையை ஒரு தொடரோட்டமாக ஆக்கியதில் உங்களுக்கு இருக்கும் பங்கிற்கு நிகரானது சரோவினுடையது. ஆளும் பேருமாக இருப்பதில் நீங்கள் இருவருமே மகிழ்பவர்கள். அது எவ்வளவு தற்காலிகமானதென்று தெரிந்தாலும் குழந்தைகளைப் போல அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். சிறு வயதில் நித்திலா வீட்டுக்கு வருபவர்களில் அவளுக்கு பிடித்தமானவர்களிடம், ‘நீங்க எப்ப போவீங்க?’ என்று கேட்பாள். தனக்குக் கிடைத்திருக்கும் விளையாட்டு பீரியட் எவ்வளவு நேரம் என்று அவள் கணக்கிடும் முறைமை அது.
கடந்த முறை சரோ மதுரை வந்த போது நித்திலாவுக்குக் கொடுத்த ’கேக் சட்டியை’ அவள் பக்கத்து வீட்டிலிருக்கும் உத்தரப் பிரதேச இளைஞிக்குக் கொடுத்து இருவரும் சேர்ந்து, நல்ல மணத்துடன் ’ஓரியோ’ கேக் செய்தனர். நீங்கள் புத்தகங்களைக் கொடுப்பவரென்றால் சரோ சோற்றுச் சட்டியைக் கொடுப்பவர். இப்போது டெஸ்ஸா வந்து நீங்கள் வீடு மாறிவிட்டீர்கள். ஆனாலும் சாப்பாட்டு மேசை பெசண்ட் நகரில்தான் இருக்கிறது.
Comments