நேற்று மேலும் ஒரு பொன்மொழியை உண்டேன். அது என் அறிவை அகண்டமாக்கியது எலும்பை இரும்பாக்கியது. பொன்னாக மாறிவிடத் துடிதுடிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன் என்பதால் விடாது பொன்மொழிகளில் மூழ்கி வருகிறேன். அவை ஒருவன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் வல்லமை மிக்கவை என்பதால் புரண்டுவிழத் தயார் நிலையில் அமர்ந்தே வாசிக்கிறேன். ஆயினும் இரும்புகள் மீண்டும் எலும்பாகும் மர்மம் எங்குதான் நிகழ்கிறது? வாழ்வு முழுக்க கூடவே வருவேன் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்த காதலியின் திருமண ஆல்பம் போல் புன்னகைக்கின்றன இந்தப் பொன்மொழிகள். உணவை உண்டால் அது கொஞ்சம் சக்தியாகும் கொஞ்சம் வெளியேறும் அள்ளி அள்ளி நான் உண்ட பொன்மொழிகள் அத்தனைக்கும் என்ன ஆகிறதோ? ஏது ஆகிறதோ? |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".
Comments