Skip to main content

Posts

Showing posts from 2025

டாஸ்மாக்கில் இரு மச்சிகள்

  "இ ந்தா மச்சி..."  சின்ன சில்வர் தட்டை நீட்டினான். இன்றுதான் பிறந்து இன்றே  மச்சிகளாகிவிட்ட   யாரோ இருவர் ஒரு மிளகாய் பஜ்ஜியை இரண்டாகப் பகிர்ந்து கொள்கிற காட்சி... ஆஹா...! இப்படித்தான் வையகம் இப்படித்தான் தழைக்க வேண்டும்

இசை கவிதைகள்

ஒருமையை உழுகையில் முதல் போகம் விளைகிற து மரியாதை மிகவும் மரியாதையானது உயர்தரத்து வாசனை திரவியம் பட்டுச் சரிகையின் டாலடிப்பு வானளாவிய கட் அவுட் கீழ்படிதலுள்ள மாணவனின் விண்ணப்பம் காதலோ சேற்றுப் பன்றிகளின் கும்மாளம் ஒருவர் மீது ஒருவர் ஏறிப்படுக்கும் இட நெருக்கடி மரியாதையின் பாதுகாப்பான இடைவெளியிலிருந்து காதலின் கட்டற்ற களிப்பிற்கு மெல்ல அழைத்துச் செல்கிறது ஒருமை ‘டா’ வும், ‘டி’ யும் முதன்முறை மூக்குரசிக் கொள்கையில் சடசடத்ததெதுவோ அதைத் தேடித்தான் படுக்கையைக் கிளறுகின்றன இரண்டு அம்மண உடல்கள். 000 பார்த்திருத்தல் “வானத்தை அண்ணாந்து பார்க்கையில் மனிதன் ஏன் அவ்வளவு விடுதலையடைகிறான்?” என்று கேட்டான் ஒரு நண்பன். அந்தக் கேள்விக்கு விரிவாக விடையளிக்கும் தோரணையில் நானும் அண்ணாந்து பார்த்தேன் வானத்தை அவன் பதிலறிவதற்காகக் கேட்கவில்லை. நானும் பதிலளிப்பதற்காக பார்க்கவில்லை 000 ‘ஆலாப்’பில் மிதக்கும் அலுவலகம் எவனோ ஒருவன் காற்றில் ஒரு ‘ஆலாப்’பை ஏற்றி விட்டிருக்கிறான் அது ஒரு அரசு அலுவலகத்துள் நுழைகிறது கோப்புகள் கலைகின்றன தாள்கள் படபடக்கின்றன நிலம் குலுங்குகிறது ஒருவரும் அலறவில்லை கண்ணாடிகள் உடைந்து நொறுங...

ஒரேயடியாக

தூ ர  தேசத்தில் படித்துக் கொண்டிருக்கிற மகள் வாரம் நான்கு ‘செல்பி” களை அனுப்புவாள் ஒரே முகமெனத்  தோன்றினாலும் ஒரே முகமில்லை அதே முகம் போல் தெரிந்தாலும் பழைய முகமில்லை தொட்டிலில் கிடந்தவள் முதன் முதலாகக் கை நீட்டி என் மூக்கைத் தொட்டது போல ஒவ்வொரு படமும் என்னை  எங்கெங்கோ தொடுகின்றன இந்த இரவில் அவள் செய்தியைத் திறந்து பார்த்த போது  அங்கு அவளுக்குப் பதில் சிரித்துக் கொண்டிருக்கிறது ஒரு அந்தி  பார்க்கிறேன்… பார்க்கிறேன்… பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் இதை அப்படி  ஒரேயடியாக ‘செல்பி’யில்லை என்று சொல்லிவிட  முடியாது.

சப்பாத்தியை சாதாரணமாகக் கருதி விட முடியாது

ஒ ரு முறை என் தாள வாத்தியார் என்னைக் கடிந்து கொண்டார்.. " நீ என்ன  சப்பாத்திக்கா  குத்துற... ?  மனம்....மனம் இழையனும்..." அவரே இன்னொரு முறை திரும்பவும் கடிந்தார்... " பெரிய வித்வானா  நீ... ?   சும்மா குத்து.... சப்பாத்திக்கு  குத்தற    மாதிரி குத்து...." கடைசியில் எல்லாம் அந்தச் சப்பாத்தியில்தான் இருக்கிறது போலும்?

" நீ மட்டுமே….”

ம றுமுனையில்  காதலன்  விடாது கெஞ்சிக் கொண்டேயிருக்கிறான் இவளோ தலையை ஆட்டி மண்ணைக் கீறி நாணி நாணி கோணிக் கோணி  மறுத்துக் கொண்டிருக்கிறாள் கடைசியில் ஒத்துக் கொண்டாள் " ஒரே ஒரு வரி ..." அவளுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கிறான் இந்தத் தடியன் ஆகவே அவள் குரலில் ரகசியத்தைக் குழைக்கிறாள் ரகசியம் பேச்சையே பாட்டாக்குவது பாட்டை அது என்னென்ன செய்யும்  அடுத்த முறை இன்னும்  அவளை நெருங்கி அமர்வேன் இன்னும்  அவளை ரகசியமாக்குவேன்.

இப்படியாக

எ ன் ஊர்  என் ஊருக்கு அடுத்து இன்னொரு ஊர் அதற்கடுத்து இன்னொரு ஊர் பிறகு வேறொரு ஊர் ஊர்கள் ஊர்கள் ஊர்கள் இப்படியாக உனக்கும் எனக்கும் இடையே ஒன்பதாயிரம் ஊர்கள் ஆனால் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு.

தனி வரலாறு

வி ரைவில் ஒரு காபியில் சந்திக்கலாம் என்று சொன்னாய்   அதையே திரும்ப திரும்பச் சொன்னாய் காபியென்றால் அது காபியில்லை என்பதில் உனக்கு அசைக்க மாட்டாத உறுதி ஆகவே முதல் முறை சொன்ன அதே தாளத்தில் முதல் முறை என்பது போலவே இன்று  மறுபடியும் சொல்கிறாய் "விரைவில் ஒரு காபியில் சந்திக்கலாம்..." எத்தியோபிய ஆடு மேயாத   பழங்களின் உள்ளே ஒளிந்திருக்கும் கொட்டைகளில் ஆழ்ந்து  உறங்கிக் கிடக்கிறது நமது காபி.

போகி

“உ ன்னிடம் பழையது ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டாள் மனைவி. அவை பதறி எழுந்து ஓடவில்லை. கை கூப்பி மன்றாடவில்லை ஜம்மென்று  கால் மேல் கால் போட்டபடி மல்லாந்திருக்கின்றன என் பழையதுகள்.

எனதழகு

அ டிவிழுந்து தொழத் தோன்றும் அழகே! எப்படியாயினும் அதில் பாதி தான் உனது நான் அள்ளி அள்ளி  ஈந்ததன்றோ மீதி பிறகுதான் நீ அடி விழுந்து தொழத்தோன்றும் அழகு