அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க விறைசெறி குழலி ஓங்க மெளலி ஏறியது இராமனின் முடியில் வீசிக் கொண்டிருந்த கவரியில் ஒன்று மெல்ல மெல்ல ஓய்ந்து அசையாது நின்றுவிட்டது போற்றி கோஷங்களும் கொண்டாட்டக் கூச்சல்களும் ஆரவாரித்து ஓய்ந்த பொழுதில் தனித்து அதிர்ந்ததொரு உறுமல் சாமரதாரி ஒருவனின் பிளந்த வாயிலிருந்து காற்றின் கடு ஊளை அப்போது அவையை நடுநடுக்கி உலுக்கியது ஒருத்தியின் கூப்பாடு “ அய்யோ….! “ “ அய்யய்யோ…!” புவியெலாம் புரக்கும் கொற்றவன் அந்த 'அய்யோ ' வின் காலில் சரிந்து விழுகிறான் பட்டுத் தெறித்து தூரப் பறந்து பொங்கு கடலில் வீழ்கிறது அவன் மணிமுடி கடல், அதைத் தன் இருண்ட ஆழங்களுக்குள் இழுத்துச் செல்கிறது. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments