Tuesday, April 8, 2014

பெருமாள்முருகன் கவிதைகளுடனான பயணம்


       


ஏழு நாவல்கள் , நான்கு சிறுகதைத்தொகுதிகள், ஏழு கட்டுரைத்தொகுப்புகள், கொங்கு வட்டார சொல்லகராதி என்னும் அகராதிப் பணி, பதிப்பாசிரியர் பணி, தொகுப்பாசிரியர் பணி என இவ்வளவு வேலைகளுக்கு மத்தியில்   பெருமாள் முருகன் நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். முதல் தொகுப்பு 1992 ல் வெளிவந்தநிகழ் உறவு “, கடைசித் தொகுப்புவெள்ளிசனிபுதன் ஞாயிறு வியாழன் செவ்வாய் ”. இடையேகோமுகி நதிக்கரை கூழாங்கல்” , ”நீர் மிதக்கும் கண்கள்என்று இரண்டு தொகுப்புகள் உண்டு.
  பாசத்தளைகளால் என்னைக் கட்டாதே/ ஐம்பொறியடக்கி/ நாற்காலிக்குள் அமிழ்ந்து/ நாட்களை ரணமாக்கி/ தேய்ந்து / விரக்தி கூன் சுமக்க என்னால் முடியாது/ சு்ற்றிலும் எரிகையில்/ காலுக்குள் தலைமாட்டி/ சுவருக்குள் புதையும் வாழ்கை / உன்னோடு போகட்டும் போ/….
என சமூக அவலங்களுக்கெதிரான தார்மீக ஆக்ரோஷத்துடன் துவங்கும் இவரின் பயணம்,  உறவுகளுக்கிடையேயான காதலும் சிடுக்கும்,  இயற்கையுடனான லயிப்பு, அது அழிக்கப்படுவது குறித்தான கவலை, குழந்தை உலகத்துடனான உசாவல், அதிகாரத்திற்கெதிரான கேலி, நவீன வாழ்வின் கோணலான வளர்ச்சியைக் காணும் பீதி, மனித மனத்தின் இருண்ட பிரதேஷங்களை எட்டி நோக்குதல் எனத் தொடர்கிறது. ”தக்காளி.. வெண்ட.. கீரேய்..”. என தலைச்சுமை தூக்கும் கீரைக்காரிகள் துவங்கி,  உணவு இடைவேளையில் சிமிட்டி சிலை போல் மணல் மேல் படுத்திருக்கும் சித்தாள் பெண்வரையும்,  எளிய மனிதர்களின் மீதான பரிவு முதல் தொகுப்பிலிருந்து அண்மைய தொகுப்பு வரை  தொடர்ந்து வருகிறது.
  கவிதை என்பது  வேற்று கிரகத்திலிருந்து சொற்கூட்டங்களைக்  கட்டி இழுத்து வருவதல்ல... அது சுயானுபவத்தை ஒட்டிய தேடலின் விளைவே என்பதை முதல் தொகுப்பான நிகழ் உறவிலேயே உணர்ந்து கொண்டவராக இவர் இருக்கிறார்.
 சாதி அமைப்பு குறித்து தொடர்ந்து அக்கரையுடனும், கவலையுடனும் பேசிவருபவராக இருக்கிறார் பெ.முருகன். அவருடைய படைப்புகளில் தொடர்ந்து சாதியத்தின் மோசமான தருணங்களைப் பதிவாக்கி வருகிறார். சமீபத்தில் கூட வெவ்வேறு சாதியைச் சேர்ந்த 32 பேர்களை அவர்களுக்கும் சாதிக்குமான உறவை எழுத வைத்து அதைசாதியும் நானும்என்கிற தலைப்பில் தொகுப்பாக்கியிருக்கிறார். ஆனாலும் சாதி குறித்த உள்ளீடற்ற வெற்று கோஷங்கள் எதையும் இவர் முன்வைப்பதில்லை. தன் அப்பிச்சியின் பெயரை எழுத நேரும் காலத்தில் கூட அவர் எப்படி தன் பெயரை எழுதிக்கொண்டாரோ அது போலவே சாதிப்பின்னொட்டுடன் தான் எழுதுகிறார். நான் என் தாத்தாவின் பெயரை எழுத நேர்ந்த காலத்தில்  கவனமாக  பின்னொட்டை நீக்கி புரட்சி நிகழ்த்தியது நினைவிருக்கிறது. வேலுமயில் தேவரை, வேலுமயில் ஆக்கி விட்டால் இங்கு எதுவும் மாறிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு சில காலங்கள் ஆனது. இன்று ரமேஸ்தேவர்களும், சுரேஸ்தேவர்களும் பீதியூட்டும் படி அரும்பு மீசையுடன் ஃபிளக்ஸ்களில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதியம் எனும் இழிவில் தானும் ஒரு தவிர்க்க இயலாத பகுதியாக இருக்க நேர்வதை உணர்ந்து கொள்வதும் , அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்வதும் தான் எல்லா சீர்திருத்தங்களுக்குமான முதல் படியாக இருக்க முடியும். அந்த நேர்மையை தொடர்ந்து கைக்கொண்டு வருபவராக இவர் இருக்கிறார். புரட்சிகர அமைப்புகளில் காத்திரமாக களப்பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலும் கவிதைக்காக தன்னை ஒரு தலித்தாக புனைந்து கொள்ளும் வஞ்சகத்தை அவர் செய்திருக்கவில்லை. அன்றும் அவர் ஒரு சாதி இந்துவாகத்தான் வெற்றுடம்புகளின் முன்விசேஷ நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.  விஷ நிழல்கள்கவிதையில் ஒரு தலித் வீட்டு திருமண விருந்தில் தனக்கு மட்டும் விசேஷமாக கடையிலிருந்து ஒரு பொட்டலம் வாங்கி நீட்டப் படுகையில்  குற்றவுணர்வில் கூனிக்குறுகிறார். இன்றைய கவிதை லட்சியங்களின் பக்கம் சாய விரும்புவதில்லை. அது உண்மையின் பக்கமே சாய விரும்புகிறது . நாம் தான் அந்த உண்மையின் துணையுடன் லட்சியங்களை நோக்கிச் செல்ல வேண்டும்.    
 சாதி என் தோலாக இருக்கிறது
 சிறுசிராய்ப்பும் வலிதான்
 வேலியின்  மீது
 உரித்து உதறிய
 பாம்புச்சட்டை
 நைந்து உதிர்வதையே  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
   என்கிறது பாம்புச்சட்டை என்கிற கவிதை.
    (”வெள்ளிசனிபுதன் ஞாயிறு வியாழன் செவ்வாய்பக் : 87 )
  அதிகாரத்தை தொடர்ந்து கூர் நோக்கும் இவரின் கவிதைகள் அதன் வெவ்வேறு ரூபங்களை நம் முன் வைக்கின்றன. அதிகாரத்தை உடைத்தெறியச் சொல்பவனின் மனத்துள் ஒளிந்திருக்கும் அதிகார இச்சையையும் இவை எட்டிப்பார்த்து விடுகின்றன..
    கடவுளின் பீடம் காலியாகி அவர் எழுந்து ஓடிய பின், காலியாக இருக்கிற பீடத்தை காணும் மனம் சற்று குழம்பி விடுகிறது..
    ……………………………………………………………………………..
    ……………………………………………………………………………………..
     என்னுள்ளே இரு குரல்கள்
    ஒன்று : உடைத்தெறி உடைத்தெறி
    பீடத்தை உடைத்தெறி
   இரண்டு  : தருணமிது தருணமிது
   ஏறி உட்கார்ந்து கொள்.
         (கோமுகி நதிக்கரை கூழாங்கல்பக் : 27 )
   உறவுகளிடையேயான அன்பு, பிணக்கு, அது தரும் மகிழ்ச்சி, அதன் பிரிவில் நேரும் கடும்துக்கம் என  உறவுகளின் குறுக்கே  நடமாடும் கவிதைகள் பலவற்றையும்கோமுகி நதிக்கரை கூழாங்கல்  தொகுப்பில் காணமுடிகிறது.  ஒரு அழகின் சிரிப்பு எல்லாவற்றையும் சரியாக்கி விடும் என்றவர் நம்புகிறார்.”  நீயற்ற நாளின் காலை வெட்டுப்பட்ட கால்களை இழுத்து நகர்கிறதுஎன்றவர் பிரிவாற்றாது  கண்ணீர் சிந்துகிறார்.
     உறவுகளின் வெதுவெதுப்பில் ஒண்ட விரும்பும் மனத்துள் விடுதலையின் ஏகாந்ததிற்கான ஆசையும் அவ்வப்போது துளிர்விட்டு அடங்கிவிடுகிறது. அதற்கு தெரிந்திருக்கிறது, நமக்கு வாய்த்திருக்கிற இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு எங்கேயும் ஓடி விட முடியாதென. அப்படி எங்கேனும் தப்பி ஓடும் பட்சத்திலும் அந்த ஓட்டம் எவ்வளவு தூரம் போகுமென. வீட்டின் கல்லும் மண்ணும் நம் இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அது நம்மை விடவே விடாது..  எனவே தான் பெ. முருகன் எப்போதோ மலையேறி , எப்போதோ மலையிறங்கும் வெள்ளாட்டுக் குட்டியை வாஞ்சையோடு நோக்குகிறார்..  அவரது மலை அவரது அலுவலக ஜன்னல் அளவிற்கு சிறுத்துப் போய் கிடக்கிறது.
   மலையைக் கடந்து போகிறேன் தினமும்
   ஒளியும் தார்ச்சாலை மீதான கவனித்தில்
   தரையிலிருந்து விரியும்  மலைப்பரப்பை
  அண்ணாந்து பார்க்க முடிந்ததில்லை

  அடிவாரத்தில் உள்ள
  என் அலுவலக ஜன்னல் அளவில்
  நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
  பாறை பற்றியேறும்
  பிரண்டைக் கொடியாய்
  வெள்ளாட்டுக் குட்டியொன்று
  அன்றாடம் மேலெறிச் செல்கிறது
    -------------------------------------------------
  -----------------------------------------------------
 ( சந்நியாசி கரடு - வெள்ளிசனிபுதன் ஞாயிறு வியாழன் செவ்வாய் ; பக்: 86 )
  -------------------------------------------------------------
 வீடு என்னைத்தாங்கியிருக்கவில்லை
எப்போதும் வீட்டை நானே  சுமக்கிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------
   என்கிறதுவீட்டைத்தொலைத்தல்கவிதை..
   நீர்மிதக்கும் கண்கள் தொகுப்பில் ஒரு விளையாட்டுப்பிள்ளையின் பாவனையுடன் ஒளிந்து கொண்டிருக்கிறதுகடைசி ராமசாமிஎன்கிற கவிதை. இக்கவிதையின் முற்பகுதியில் இருக்கிறகதைகூறல்முறை எனக்கு  உவப்பானதில்லை எனும் போதும் இக்கவிதை முக்கியமானதென்றே படுகிறது..  கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது
 எல்லா ராமசாமிகளும் போய் விட்டார்கள் / இப்போது ராமசாமி என்று யாருமில்லை
 கடைசி ராமசாமி என்கிற தலைப்பு வரியில் இந்த வாழ்விலிருந்து சென்று மறைந்த எல்லாகடைசிகளையும்  நாம் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். கடைசிகள் எவ்வளவு பெரிய காலத்தையும் வரலாற்றையும் சுமந்து கொண்டு நம்மை விட்டுப் போகின்றன. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு பிரபாகரன்என்று   பெயர் சூட்டி மகிழ்ந்த காலம் ஒன்று இங்கிருந்திருந்தது. “ கடைசி பிரபாகரன்என்று  இக்கவிதையை வாசிக்கையில் மூண்டெழும் துக்கம் ஆகக் கொடியது.
   அழைப்பு, கூடுபாய்தல், விடுபடல் , சாமந்தியும் செவ்வந்தியும், சிறுஅறை , ஈர இரவுகள் , அம்மாவுக்கு ஒன்றும் தெரியவில்லை , காளி ஆகிய கவிதைகள் வெவ்வேறு காரணங்களால் என் கவனத்தை ஈர்ப்பவையாக இருக்கின்றன.
  இலக்கிய வடிவங்களிலேயேவலிய அகத்தூண்டலைகோரி நிற்பது  கவிதைதான் என்பது என் எண்ணம்.  பெருமாள் முருகனின் சில கவிதைகள் எளிய தூண்டுதல்களை நம்பி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த எளிய தூண்டுதல்களுக்கு பலியாகமல் தப்பிச்செல்வதென்பது  அவ்வளவு  சுலபமல்ல. இதனால் தான் பிரமாதம் என்று நமக்கு நாமே சிலாகித்துக் கொள்ளும் சில கவிதைகளை கொஞ்ச நாள் கழித்து  நாமே கிழித்துப் போட்டு விடுகிறோம். கவிதையுடன் ஆடும்  இந்த பகடையாடத்தில் சமயங்களில் நமக்கு தோல்வி கிடைப்பினும், இந்த மர்மம் தான் கவிதையின் தீரா இளமையை காத்து நிற்கிறது. நாமும் கவிதையும் மாறி மாறி வெட்டிக்கொள்வதில் தான் ஆட்டம் சூடு பிடிக்கிறது. நாம் கவிதையை நோக்கி மேலும் மூர்க்கத்துடன் முன்னேறப் பார்க்கிறோம்.
      இவர் வெவ்வேறு வடிவங்களில் இயங்ககூடியவராக இருக்கிறார். எனவே ஒன்றில் மற்றொன்றின் தாக்கம் நிகழ்வதை தவிர்க்க இயலாது தான். என்னளவில் பெருமாள் முருகன் என்கிற புனைகதையாளர் கவிதைக்குள், அதன்காட்சி விவரிப்பின்துல்லியத்தை  கூட்டுவதில் சாதகமாகவும், பெருமாள் முருகன் என்கிற கட்டுரையாளர் கவிதையின் மெளனத்தில் இடையூறு நிகழ்த்தி எதையும் மிச்சம் வைக்காது பேசிவிடுவதில் பாதகமாகவும் செயல் பட்டிருக்கிறார்கள் என்று சொல்வேன்.
    சில ஆரம்பகால கவிதைகளில் சுயானுபவத்தை அப்படியே  கவித்துவ மொழியில் பதிவாக்கியிருப்பதாகவும், தற்கால கவிதைகள் பலவும்  அனுபவத்தின் நிழல்களை தவற விடாது  அதைபொதுவாக்கிஎழுதியிருப்பதாகவும் தோன்றுகிறது. இந்த பொதுவாக்கலில் தான் வெவ்வேறு விஷயங்கள் கவிதைக்குள் வந்து சேரும். இங்கு தான் வாசகன் தன் கவிதையை வாசிக்க துவங்குகிறான். அப்பட்டமான சுயத்தின்  உணர்வுவயப்பட்ட பதிவாக இருக்கிற கவிதைகளை விட அதை நுட்பமாக பொதுவாக்கியிருக்கிற கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன. இந்த வகையில் வருகிறகாளிகவிதை எனது வாசிப்பில் வெவ்வேறு அர்த்த தளங்களை சென்று தொடுகிறது. இதை நிகழ்காலத்தின் கவிதை என்று சொல்வேன்.
காளி

குத்தி உருவிய குடல்
மாலை அணிந்தபின்
கண்ணாடி பார்க்கிறாள்
காளி.
         (வெள்ளிசனிபுதன் ஞாயிறு வியாழன் செவ்வாய்                                                       பக் :65)    
 கண்ணாடி பார்ப்பவள்  ஒருக்காலும் காளியாக இருக்க முடியாது. காளியின் அழகே கலைந்திருப்பது தான். உன் புரட்சி, வீராவேசம், நீதியுணர்ச்சி , தார்மீக சீற்றம் எல்லாம் எது வரை தம்பி ? என்று இக்கவிதை என்னைப் பார்த்து கேட்கிறது. “ பொன்னுலகு காணும் வரைஎன்று என்னால் சொல்ல முடியவில்லை.அவ்வப்போது எழுந்து காளி போல் ஆடி விட்டு பிறகு சாந்தசொரூபியாகி விடுகிறது நம் நீதியுணர்ச்சி.
     பிறவடிவங்களில் இவர் ஆற்றியிருக்கும் மெச்சத்தகுந்த பங்களிப்புகளோடு ஒப்பிடுகையில் கவிதையில் செய்திருப்பது சற்று குறைவு தான் என்றாலும் , இவர் செய்து முடித்திருக்கிற வேலைகளின் முன் நிச்சயம் இது ஒரு தகுதிக் குறைவல்ல.
       இது கவிதைக்கு போதாத காலம்.. இலக்கிய திருவுருக்கள் கவிதையை சந்தேகிக்கிற இத்தருணத்தில் பெ.முருகன் எழுதியிருக்கிற ஒரு முன்னுரையின் வரிகள் கவிஞனையும், கவிதை வாசகனையும் ஆற்றுப்படுத்துவதாக இருக்கிறது.
மொழியின் ஆதிப்படைப்பு கவிதை என்பது போலவே என் படைப்புகளின் ஆதி வடிவம் கவிதை. எதுவும் முதலில் கவிதையாகவே எனக்குள் உருக்கொள்கிறது. வேலியேறிப்படரும் கொடி போல பின்னர் அதுவே தனக்குரிய வடிவத்தை தேர்ந்து கொள்கிறது. கவிதையாக நிலைப்படுவன சிலவே.  அவையே எனக்குப் பேருவகை தருகின்றன ”. கவித்துவம் என்பதைத் தான் பெருமாள்முருகன் கவிதை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் என்றே வைத்துக்கொண்டாலும் கவிதைக்கும் கவித்துவத்திற்குமாவது ஏதேனும்  தொடர்பிருக்கிறதா என்பதைஆசாரியார்விளக்க வேண்டும் ?  ஒரு கவிஞனுக்கு எழுத்தாளன் மீதிருக்கும் மலைப்பும், எழுத்தாளனுக்கு கவிஞனின் எளிய இரண்டு வரிகளின் மீதிருக்கும் எள்ளலும் பயமும் நீடு வாழட்டும் !
     கவிதையின் மேல் இவ்வளவு வாஞ்சையும் மதிப்பும் வைத்திருக்கிற பெருமாள் முருகன் தொடர்ந்து கவிதைகள் எழுத வேண்டும். அவை வெறும் வரிக்கணக்கல்ல என்பதை அவர் அறிந்தே இருக்கிறார்.

( பெருமாள்முருகனுக்கு விளக்குவிருது வழங்கும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை )


No comments: