நிசப்தம் ஒரு நச்சரவம் அதன் நீலம் உந்தன் மூளையைத் தீண்டும் முன் டி.வி-யைப் போடு! கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும் வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம் டி.வி-யைப் போடு! எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும். விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும் இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம் டி.வியைப் போடு! உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும் கடவுளின் கருணையால் நீ அதிலில்லை டி.வி-யைப் போடு! முதலையின் வாயிலொரு வரிக்குதிரை... உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது முதலையையும் தெரியாது டி.வி- யைப் போடு ! காமுகியொருத்தி தன் பரந்த முது...
இந்த ரம்யமான அதிகாலையில் மாமதுரத் தேநீர் வாய்த்துவிட்டது இரண்டு மொடக்கு மொடக்கிவிட்டு கீழே வைத்தேன் தினத்தந்தியில் விருச்சிக ராசிக்கு என்ன பலனென்று தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பினால் இப்போது டேபிளில் இரண்டு டம்ளர்கள் பக்கத்துச் சீட்டிலும் யாருமில்லை சம அளவுள்ள தேநீருடன் என்னை நோக்கிச் சிரிக்கும் இந்த இரண்டு டம்ளர்களில் எந்த டம்ளர் எனது டம்ளர் ? விகடன் - தீபாவளி மலர்
நள்ளிரவு 2:00 மணிவாக்கில் உன் புகைப்படத்தை என் Dp- யாக வைத்தேன் பெருந்திணை அன்பின் புறநடையென்பதால் உடனே அஞ்சி அகற்றி விட்டேன். ஒரு முக்கால் நிமிஷம் நீ என் உரிமையில் இருந்தாய். அதற்குள் யாரேனும் பார்த்திருப்பார்களா? நடுசாமத்தில் யார் பார்க்கப் போகிறார்கள்? ஆனாலும் யாரேனும் பார்க்கத்தானே வைத்தேன். ஒருவர் கூடவா பார்த்திருக்க மாட்டார்கள்? நல்லவேளை நீ குளோசப்பில் சிரிக்கவில்லை எனவே,எந்தக் கண்ணிலும் விழுந்திருக்காது ஒரு கண்ணிலுமா விழுந்திருக்காது? நன்றி: உயிர்மை- ஜூலை-2017
காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன அதில் மூன்றாவது சந்தில் கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள் பள்ளிச்சீருடையில் நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள் அதன் ஐந்தாவது சந்தில் 19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட அவள் அன்னை விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள் . முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார் ஒரு அரசமரத்தடி பிள்ளையார். அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும் இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார். வாயிலிருந்து விசிலை இறக்காமல் ஓடியாடி பணியாற்றுகிறார். ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல அந்தந்த சந்திற்கான வாகனங்களை மிகச் சரியாக அதனதன் வழியில் விடுகிறார். “privacy “ என்கிற சொல்லால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும் ஒருவர் போன...
உலகம் ஒரு சின்ன குலுங்கு குலுங்கிவிட்டு இயல்புக்கு திருப்பி விட்டது. சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது எதில் அருந்தினால் உன் தாகம் தணியுமோ அந்தக் கண்ணாடி டம்ளர்.
வெயில் வறுத்தெடுத்ததால் பியர் பருகும் ஆசை துளிர்த்துவிட்டது துளிர்த்த மறுகணமே பெருமரமாகி பேயாட்டம் போட்டது ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த சித்தப்பாவின் இதயத்துடிப்பை பிடித்து நிறுத்தி அரைநாள் விடுப்பு பெற்றேன். வெயில் நன்று, அது வாழி! சூரியன் எரிய எரிய என் பியர் குளிர்ந்து வருகிறது வெம்மையைப் போற்றுவோம்; அது குளிரை இனிப்பாக்குகிறது வெயிலைப் பாடியபடி பியரைப் பாடியபடி மதுவிடுதிக்கு பயணமானேன். திடீரென முழு வானமும் இருட்டிவிட்டது. என் உலகம் மொத்தமாய்த் தொங்கிவிட்டது. மதுவிடுதியின் வாசலில் வண்டியை நிறுத்துகையில் மூக்குநுனியில் ஒரு மழைச் சொட்டை உணர்ந்தேன் சிப்பந்தி அருகில் வந்து " என்ன வேண்டும் .." என்றார். "கொதிக்கக் கொதிக்க வெய்யில்" என்றேன்
மஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு ஒரு வித மரக்கலரில் இடையே கொஞ்சம் பச்சை வாங்கி சிவந்த பொன்னிறத்தில் கிறங்கடிக்கும் வாசனையுடன் நடுமத்தியில் அளவானதான அழகான ஓட்டையோடு நாவூறித் ததும்பச் செய்யும்.... உலகத்தை வெல்வது கிடக்கட்டும் முதலில் இந்த உளுந்து வடையை வெல்! நன்றி: ஆனந்த விகடன்
ஒரு நல்ல கவிதையின் இடையே குறுக்கிட்டு நச்சரித்தாள் அந்தப் பிச்சைக்காரச் சிறுமி. இப்போதெல்லாம் கருணையும், கண்டிப்புமான ஒரு முகத்திற்கு பழகியிருக்கிறேன். அதை அவளிடம் காட்டித் திரும்புவதற்குள் கவிதைக்குள் விளையாடிவிட்டது ஒரு சுண்டெலி. இரண்டு வரிகளை இடம் மாற்றி வைத்துவிட்டதது. அந்தக் கவிதை புரியாமல்தான் அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஒரு சமோசா வியாபாரியைப் போல் பெட்டி பெட்டியாக அலைகிறேன்.
மனிதஇனத்தின் வாயிலும், எழுத்திலும் தொடர்ந்து பயின்று வரும் வரிகள் “ பொன் மொழிகள் “ ஆகி விடுகின்றன. பழமொழிகளும் இவற்றில் அடங்கும். இரண்டு எழுத்தாளர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது இருவரின் சார்பிலும் மாறி மாறி நின்று “ வால்டேர் ” வழக்காடுவதைக் காண முடியும். ஜி.நாகராஜன் பொன்மொழிகளைக் கேலி செய்யும் பாவனையில் எழுதிய ஒரு பத்தியில் உள்ளதுதான்... “ மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றுதான் சொல்வேன் ” என்பது. இப்போது அது ஒரு “பொன் மொழியாகவே ” மாறி தீவிர புழக்கத்தில் இருக்கிறது. எனக்கு பொன்மொழிகளின் மீது ஈர்ப்பு உண்டு. “அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லையும் உடைத்துவிடும் ” என்கிற பழமொழி படித்த கணத்திலிருந்து இன்று வரை என்னைத் தொடர்கிறது. ஆயினும் பொன்மொழிகளின் குணமும், கவிதையின் குணமும் ஒன்றல்ல. எனவே இக்கட்டுரை “பொன்னால் ஆன சொற்களை ” பேசுகிறது. கூடவே பொன்மொழியின் இயல்பான “பலர் வாய்ப்படுதல...