சோமனூர் பஸ்  ஸ்டாண்டில்  கொய்யாப் பழம் விற்கும்  சமூக விரோதியிடம்  கிலோவுக்கு ஒன்று குறைவதாக  சண்டையிட்டுக் கொண்டிருந்தான்  நக்சல்.  தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும்  தேசவிரோத  சக்தி  நக்சலின் தோளைத் தொட்டு  வத்திப்பெட்டி கடன் கேட்டான்.  பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை.  இருவருமாய்ச் சேர்ந்து  கடப்பாரை, மண் வெட்டி சகிதம்  14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர்.  அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.   கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு  " ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி  அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது.  அந்த உரிமையில்  அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான்.  இப்படியாக  ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி  ஆகிய நால்வரும்  ஒரேயொரு குச்சியில்  4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர்.  அப்போது  இமயம் முதல் குமரி வரை  எங்கெங்கும் பற்றியெரிந்தது.