சுமாரான பாடகனொருவன் கைதியானான்.
கைதியானவுடன் பாடகனவன் துள்ளி எழுந்தான்
வெளியே
அவனும், பாட்டும் , 1008 விஷயங்களும் புழங்கி வந்தன
1008 விஷயங்களால்
சிறை மதிலைத் தாண்ட இயலவில்லை.
கம்பிகளுக்கிடையே
அவனும், பாட்டும் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்
வெளியே திரிகையில்
அவனால் புல் நுனியைச் சரியாக காண இயலவில்லை.
எனவே அதைப் பாடக் கூடவில்லை.
உள்ளே
புல்நுனிப் பனியுள்ளும் பார்க்க முடிந்தது அவனால்.
இது வரை
கைவராத அத்தனை அழகுகளும்
மகிழ்ந்து குலாவின அவன் கீதத்தில்.
சத்தியமாக
மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்றவனின்
குரலல்ல இது.
நன்றி : கல்குதிரை இதழ் - 30
Comments