ததும்புவதைக் காணும் போது
மனிதனுக்கு என்னவோ ஆகிவிடுகிறது. கடற்கரைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மலரில் ததும்பும் ஒன்றை யுகயுகமாக கண்டு தீர்க்கிறான் கவி ஒரு வயலின் ததும்பும்போது சகலமும் ததும்பிவிடுகிறது. பெண்ணின் காலடியில் கொட்டிக்கிடக்கின்றன கணக்கற்ற மண்டையோடுகள். எல்லாம் அவளில் ததும்பும் அதுவைக் காண வந்தவை. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments