Skip to main content

நார் இல் மாலை - சங்கத்து மாலைக்காட்சிகள்



அ.முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலொன்றில் இதுபோலச் சொன்னார். “சங்க இலக்கியங்கள படிச்சாவே போதும்...எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சில சமயம் தோன்றும்..”. எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படித் தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரும் பொழுதாகவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் போன்ற பொழுதுகள் சிறுபொழுதுகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் மாலையைப் பற்றியே நம் அகப்பாடல்கள் அதிகமும் பாடியுள்ளன. சங்கத்து மாலைக்காட்சிகளில் நான் கண்டு மயங்கிய சிலவற்றை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சங்கப்பாடல்கள் எல்லா பொழுதையும் பாடியுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா பொழுதுகளும் அதில் உண்டு.


“தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே”
(கு. தொகை: 157)

முயங்கியிருக்கும் காதலரின் தோள்களுக்கு இடையே ஒரு வாள் போல இறங்குகிறதாம் வைகறை.

சங்கத்தில் மாலைக்கு அடுத்து அதிகம் புனையப்பட்டுள்ளது இரவு. “ முட்டுவேன் கொல்.. தாக்குவேன் கொல்” என்று இரவை அலற விடுகிறாள் ஒளவை. “ கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே “ என்கிற ஒற்றை வரியைக் கொண்டு “ கங்குல் வெள்ளத்தார்” என்றே ஒரு புலவர் அழைக்கப்படுகிறார். “தொழுவத்து மாடு ஈ விரட்டுகையில் எழும் மணியோசையைக் கேட்டபடி இரவெல்லாம் விழித்துக் கிடக்கிறாள் ஒருத்தி”. இப்படியெல்லாம் இரவும் பாடப்பட்டிருந்தாலும் மாலையே அதிகமும் பாடப்பட்டுள்ளது. அதன்முன்தான் உயிர்கள் மயங்கி நிற்கின்றன.

பிரிவில் உழலும் காதலர்க்கு மாலை, இரவு இரண்டுமே துயரம்தான். மாலையில் பாம்பு உயிரைக் கவ்வ வருகிறது. உயிர் போராடுகிறது. தப்பியோடப் பார்க்கிறது. வெற்றிகொள்ள விரும்புகிறது. மன்றாடி வேண்டுகிறது. மாலையில் தலைவன் தேர்மணி ஒலிக்க வந்தாலும் வந்துவிடுவான் என்று நம்புகிறாள் தலைவி. நம்பிக்கை தோன்றுவதால் ஏமாற்றமும் தோன்றுகிறது. இரவில் போராட்டம் இல்லை. உயிர் இரவுக்கு கீழ்படிந்து விடுகிறது. பாம்பின் வயிற்றுக்குள் அடங்கிவிடுகிறது. துயரத்துள் மூழ்கிவிடுகிறது. “எல்லாம் முடிந்து விட்டது” என்பது போலான ஒரு ஓய்வு இரவில் உண்டு. இரவில் நடக்கக் கூடாதது நடந்து முடிந்துவிட்டது. மாலையில் நடக்கக்கூடாதது நடந்து கொண்டிருக்கிறது. மாலை என்பது பாம்பின் வாய், இரவு அதன் வயிறு.

மாலை முல்லைத் திணைக்கு உரியது. “காரும் மாலையும் முல்லை” என்பது தொல்காப்பிய சூத்திரம். முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும். அதாவது தலைவனைப் பிரிந்த தலைவியர் அவன் வரவு பார்த்து ஆற்றியிருப்பது. தலைவன் வீடு திரும்பிவிடுவதாக வாக்களித்துச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் இன்னும் வரவில்லை என்று ஏங்கி அழும் பாடல்களில் மாலை பிரதான இடம் பெற்றுள்ளது. இதுதவிர திணை மயக்கமாக வேறு நிலங்களிலும் மாலை தோன்றுவதுண்டு. சங்கத்தில் மாலை இரண்டு விதமாகப் பாடப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். ஒன்று, வெறுமனே பின்புலமாக இடம் பெறுவது. மற்றொன்று, ஒரு பாத்திரம் போலவே வருவது. “ வெறுமனே பின்புலமாக” என்று சொல்வது பிழையோ என்று தோன்றுகிறது. சங்கத்தில் பொழுது வெறுமனே புனையப்படுவதில்லை. எனவே “பின்புலமாக” என்று சுருக்கிக்கொள்கிறேன்.

தலைவன் தலைவியை விட்டுவிட்டு பொருள்வயின் பிரிகிறான். கொடிய புலிகளும், புலிகளைக்காட்டிலும் கொடிய கள்வர்களும், பருந்துகளும் திரியும் பாலைநிலம் வழிப் பயணிக்கிறான். அந்நிலம் பகலிலேயே அச்சுறுத்தக் கூடியது .அந்த அச்சத்தை மேலும் கூட்டுவதாக இருள் வந்து கவிகிறது. “இருள் கூர் மாலை” என்கிறது அகநானூறு.

“விளையாடிச்சலித்த சிறார்கள் கரையில் நின்றுகொண்டு, கடலில் இருந்து திரும்பிவரும் கப்பல்களை எண்ணிக்கொண்டிருக்கும் மாலைப் பொழுதில் தலைவன் எங்களைச் சந்தித்தான்” என்கிறாள் ஒரு தோழி.

இவைபோல பின்புலமாக சில மாலைகள் காணக்கிடைக்கின்றன. இவ்வாறன்றி அழுத்தமான ஒரு கதாபாத்திரம் போலவே பல மாலைகள் புனையப்பட்டுள்ளன. பெரும்பாலும் படுமோசமான வில்லன் பாத்திரம். அரிதாக காதலரைச் சேர்த்துவைக்கும் குணச்சித்திர வேடம் தாங்கி வருகின்றன.

மாலை நீ, .... வெள்ளமான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும்
கொடியான்போல்
அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ?

 ( கலித்தொகை—120 )


மான் வெள்ளத்தில் சிக்கிப் பரிதவிக்கும் காலம் பார்த்து, அதன் மார்பை குறிவைத்து அம்பெய்தும் கொடிய வேடனைப் போல வருகிறதாம் மாலை. ஏற்கனவே பிரிவுத்துயரில் இருக்கும் தலைவியை மேலும் வதைக்க வருகிறது அவன் நினைவின் காமம் கிளர்ந்தெழும் மாலைப்பொழுது.


மாலை வந்தன்று, மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே.

( ஐங்குறுநூறு – 116)


உயிர்கவ்வும் யமனைப் போன்ற கொடிய தென்றலை ஏவியபடி வருகிறது மாலை. பாடலின் முதல் காலை காலனையும், இரண்டாம் காலை தென்றலையும் குறித்து வந்தது. “கால்” என்பது இரண்டையும் குறிக்கும் சொல்.

“கூற்று நக்கது போலும் உட்குவரு கடுமாலை” என்கிறது ஒரு பாடல். “ படர் சுமந்து எழுதரு பையுள் மாலை” என்கிறது இன்னொரு பாடல். “பெரும்புன் மாலை”, “கொலை குறித்தன்ன மாலை”, “புலம்புகொள் மாலை”, “ புன்கண் மாலை”, “கையறு மாலை” என்று விதவிதமான துயரத்து மாலைகள். “நார் இல் மாலை” என்கிறது குறுந்தொகை அதாவது அன்பற்ற கொடிய மாலையாம்.



              படம்: ஏ.வி. மணிகண்டன் 

பிரிவு எப்போது நிகழ்ந்தாலும் துயரம்தான். ஆனால் இன்பம் பொங்கி வழியும் மாலைப்பொழுதில் ஒருவன் பிரிந்து செல்லத்துணிந்து விடுவானெனில், இனி அவன் எந்தக்கொடுமையையும் செய்யத் தயங்கமாட்டான். இவ்வளவு செய்பவன் எவ்வளவும் செய்வான்!

மற்ற வேளைகளில் பிரிந்தால் அவன் கொடியவன். மலர்கள் புதரெனப் பூத்துத்ததும்பும் மாலையில் பிரிவோன் “கொடியருள் கொடியன்”.


“புதல்மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவார் – அன்னாய்”

( ஐங்குறுநூறு – 215 )


தலைவி ஊடல் தீர்ந்த குறுந்தொகைப் பாடலொன்று( 359) …

கண்டிசிற் பாண, பண்புடைத் தம்ம
மாலை விரிந்த பசுவெண்ணிலவிற்
குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்
புதல்வற் றழீஇயினன் விறலவன்
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே.

தலைவி ஊடலில் இருக்கிறாள். தலைவன் வாயிற் வேண்டி பாணனை பல முறை தூது விடுகிறான். தலைவி இரங்கவில்லை. ஒருநாள் , நிலவுதிக்கும் ஒரு மாலை வேளையில் தலைவனே நெடுநெடுவென்று வீட்டுக்குள் புகுந்து, படுக்கையில் இருக்கும் தன் புதல்வனைப் பெருமூச்செறிந்தபடி தழுவிக்கொள்கிறான். அதைக்காணும் தலைவி தானும் ஓடி வந்து தலைவனைப் பின்னே கட்டிக்கொள்கிறாள். “ பள்ளியானையின் உயிர்த்தன்ன” என்கிறது பாடல். யானையைப் போன்று பெருமூச்செறிந்தபடி தழுவிக் கொள்கிறானாம்.

தலைவி இத்தனை நாளும் கட்டிக்காத்த ஊடலுக்கு என்ன ஆனது? எது தலைவியின் ஊடலை உடைத்தது? தலைவனுக்கு தன் புதல்வன் மேலிருக்கும் அன்பா? அவனுக்கு தன் மீதிருக்கும் அதீத உரிமையா? அல்லது நெடுநாள் பிரிந்திருந்த அவனை திடீரெனக் கண்ட மயக்கமா? இப்படியாக இந்தப்பாடலை நிறைய விரிக்கலாம். இப்படி நிறைய விரிப்பதற்கு ஏதுவான காட்சி நிகழும் பொழுது மாலையாக இருக்கிறது. எனில் இந்தப்பாடலில் மாலை பின்புலமாக வந்திருக்கிறதா? அல்லது ஒரு பாத்திரமாக பங்காற்றியுள்ளதா? பாத்திரமெனில் அது சிறுபாத்திரமா அல்லது வலுவான பாத்திரமா?

இருபாற்புலவர்களும் பொழுதைப் புனைந்து பாடியுள்ளனர். ஆயினும் பெண் பாற் புலவர்கள் பாடுகையில் கவிதை கூடிப்பொலிவதாகத் தோன்றுகிறது அல்லது என் மனம் ஆழ இரங்கி விடுகிறது. யாமத்தை முட்டியும் தாக்கியும் அழிக்கப் பார்க்கிறாள் அவ்வை. “வைகறையை வாளாக்கி” சித்தத்துள் தித்திக்கும் தேனென்று இனிக்கிறாள் அள்ளுர் நன்முல்லையார். அதே புலவரின் இன்னொரு பாடல்..


“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்”

(குறுந்தொகை – 32)

ஒரு நாளின் எல்லா பொழுதுகளையும் பட்டியலிட்டு இதில் எந்தப் பொழுதிலும் பிரியா அன்போடு கூடியே இருக்கவேண்டும் என்கிறான் ஒரு தலைவன். காதலில் திளைத்து காலத்தை மறந்திருப்பதே மெய்யான அன்பு.

ஒக்கூர் மாசாத்தியார் என்றொரு பெண்பாற் புலவர். முல்லைத் திணையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதிலொன்றில் வாராத தலைவனை எண்ணி வருந்தி நிற்கும் தலைவியைக்கண்டு முல்லை மலர்கள் கெக்கலித்ததுச் சிரிக்கின்றன.

இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ? எனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே

(குறுந்தொகை : 126)

“தோழி! கார்காலம் வந்துவிட்டது. இளமையின் இன்பத்தைத் துய்த்து மகிழாது, பொருளாசையால் உந்தப்பட்டுப் பிரிந்து சென்றவனைக் காணாது வருந்தும் என்னை நோக்கி , “அவன் இன்னும் வரவில்லையா?” என்பது போல, தானே பற்களாகிச் சிரிக்கின்றன இந்த முல்லை மொட்டுக்கள்.

இதில் மாலை என்கிற சொல் இல்லை. ஆனால் முல்லை சிரிப்பதால் இதை மாலை என்று கொள்ள இயலும். இப்படி மாலை என்கிற சொல் இல்லாமலும் மாலைப் பொழுதுகள் வருவதுண்டு.

இதே புலவரின் இன்னொரு பாடல். தூரத்தில் ஒரு மணியோசை கேட்கிறது. அது மேய்ச்சல் முடிந்து மாலை வீடு திரும்பும் பசுவின் கழுத்து மணியோசையா? அல்லது தலைவனின் தேர்மணியோசையா? என்று முல்லை படர்ந்திருக்கிற அந்தப் பெரிய கல்லின் மீது ஏறிப்பார்த்து வரலாம் வா என்று தலைவியை அழைக்கிறாள் ஒரு தோழி.

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
……………………….
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.

(குறுந்தொகை- 275)


“வரவில்லை” என்பதில் நன்கு அறிந்த வருத்தம்தான் தொனிக்கிறது. “வந்து விட்டாரோ ?” என்பதில் பாவம், ஆசை துடிதுடித்துவிடுகிறது.

தூரத்தில் ஒலிக்கும் கணவனின் பைக்சத்தம் கேட்டு, சீரியலைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, கட்டிலிலிருந்து தாவிக்குதித்து, கால் இடறி விழப்போய், ஓரத்தில் இருந்த தண்ணீர்ச் சொம்பை சரித்துவிட்டு, புடவைத் தலைப்பு நாதாங்கியில் சிக்கிக்கிழிய, ஓடோடி வந்து வாசலில் நின்று பெருமூச்செறியும் நவீனத்தலைவியின் சித்திரம் ஒன்று விரிகிறது. இதுபோன்ற இனிய கற்பனைகள் நம் குடும்பஅமைப்பு தழைத்தோங்க வழிவகுக்கும்.

தலைவனுக்கு வினை என்று ஒன்று இருந்தது. அவன் அதில் கரைந்து பொழுதை மறந்திருந்தான். தலைவிக்கு ஓய்வு அதிகம். காதலிப்பதுதான் வேலையே என்றால், காலுக்கடியில் கிணறு ஊறத்தான் செய்யும். பொழுது ஏற்கனவே கனத்தது. காதற்பொழுது மேலும் கனத்தது. “பொழுதுபோக்கு” என்பதைக் களியாட்டத்தோடு சேர்த்து சொல்லி வைத்திருந்தாலும் அது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. “ சும்மா இருக்கும் சுகம்” என்பது சாமான்யனுக்கு இயலாதது என்பதால்தான், ஒரு துறவி அதைத் தொட்டு வைத்தான்.

கணவனை வேலைக்கு அனுப்பி, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பிறகு தங்களைப் பொழுது வந்து பீடித்துக்கொள்வதாகப் புலம்பும் இல்லத்தரசியர் உண்டு. “கொள்ளி வாய்ப் பிசாசை ”ஸ்கூட்டரில் அனுப்பி விட்டு, “ குட்டிச் சாத்தான்களை” ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிய பிறகே தங்களுடைய பொழுது புலர்வதாகச் சொல்லும் மனைவியரும் உண்டு. சமூகம் என்பது நான்கு பேர்.

மாலை தலைவியை வதைக்கும் என்பதை அறிந்த தலைவன் ஒருவன் விரைவிலேயே வினை முடித்து வீடு திரும்ப வேண்டும் என்று தன்னை நெஞ்சத்தை முடுக்கியது இப்பாடல்..

அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
எழுஇனி- வாழிய நெஞ்சே!
...................................
குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
“யாண்டு உளர் கொல்? என்று கலிழ்வோள் எய்தி
...... முயங்குகம் பலவே !

( அகநானூறு – 47 )


கார்காலத்து மாலையில் தலைவனைக் காணாது வருந்தும் தலைவியைத் தோழி பல சொல்லி ஆற்றுகிறாள். அதில் ஒன்று..

“பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும்...”

( அகநானூறு- 4 )

அதாவது, சோலையில் தன் துணையோடு இன்புற்றிருக்கும் வண்டு, தேன்
உண்ணும் போது, அவை தன் தேர்மணியோசைக்கு பயந்து விடுமோ என்றஞ்சி, மணியின் நாவை ஓசை எழாத வண்ணம் இழுத்துக்கட்டும் மாண்புடையவனாம் தலைவன். அப்படிப்பட்டவன் உன்னை தவிக்கவிட்டு வாராதிருப்பானா? விரைவில் வந்துவிடுவான் என்கிறாள் தோழி.

தலைவனைக் காணாது வருந்தி அழும் தலைவியரையே நாம் முல்லைத் திணையில் அதிகம் காண்கிறோம். அரிதாக தலைவன் வந்தும் விடுகிறான். அப்படி வரும் தலைவனும் மாலை வேளையிலேயே வந்து சேர்கிறான்.

“மாலை இனிது செய்தனையால் – எந்தை ! வாழிய! ” என்று வாழ்த்துகிறாள் ஒரு தோழி. வினை முடித்த உடனே “ பரந்த உலகத்தையே ஓடிக்கடக்கவல்ல வலிய குதிரைகளுள் நான்கைச் சேர்த்துப் பூட்டிய தேரில் ஏறி, இடையில் எங்கும் நில்லாது, நேராகத் தலைவியை நோக்கிப் பாய்ந்து வருகிறான் ஒரு தலைவன். “ பாய்பரிக் கடுந்திண் தேர்” என்கிறது கலித்தொகை.

மாலைப்பொழுதை விதவிதமாக ஏசித்தள்ளும் பல பாடல்கள் சங்கத்தில் உள்ளன. மாலையாவது? காலையாவது? என்று பொழுதையே புரட்டிப் போட்டு விடுகிறாள் ஒரு தலைவி.

“சுடர்செல் வானம் சேப்பப் படர்கூர்ந்து
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே!
குடுமிக்கோழி நெடுநகர் இயம்பும்
பெரும்புலர் விடியலும் மாலை
பகலும் மாலை- துணை இலோர்க்கே“

(குறுந்தொகை - 234)

முல்லை பூத்து மணக்க, வானம் சிவந்து ஒளிரும்படி கதிரவன் சென்று மறையும் பொழுதையே மாலை என்பார்கள் அறிவற்ற மூடர்கள். இதெல்லாம் துணையோடு இருப்போருக்குத்தான். தலைவனை பிரிந்திருக்கும் பெண்களுக்கோ விடியலும் மாலைதான். பகலும் மாலைதான். எப்போதுமே மாலையின் துயரம்தான்.

பொழுதை மயக்கும் இன்னொரு பாடல்...

...... கடும்பகல் வருதி – கையறு மாலை!
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.

( ஐங்குறுநூறு – 183)

திருமண ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு பிரிந்து செல்கிறான் ஒரு தலைவன். அது நண்பகல் வேளை. ஆனால் அப்போதே சட்டெனக் கவிழ்ந்து விடுகிறதாம் மாலைப் பொழுது. இனி தலைவிக்கு வேறு பொழுதுகள் இல்லை. எப்போதும் மாலைதான். எப்போதும் துயரம்தான். மாலையே ! நீ இப்படி கடும்பகலில் வாராமல் காலையிலேயே வந்தாலும் உன்னைத் தடுப்பது யார்? என்று கேட்கிறாள்.

நெய்தல் மாலையில் கூம்பும் மலர். இங்கு மாலை காலையில் வருவதால், மலரும் குழம்பி காலையிலேயே கூம்பிவிடுகிறதாம். ஐங்குறுநூறில் அம்மூவனார் எழுதிய பாடல் இது. அம்மூவனாரே! நீங்கள் யார்? எப்படி வாழ்ந்தீர்? வேளைக்கு உண்டீரா? நல்லதை உடுத்தினீரா ? இதுதான் உம் பெயரா?

கலித்தொகையில் திணைமயக்கமாக நெய்தலில் இடம்

பெற்றிருக்கும் மாலைக்காட்சிகள் அழகானவை. ஆழம் மிக்கவை. நினைவில் நீங்கா உருவகங்களாலும், உவமைகளாலும் யாக்கப்பட்டவை. மொத்த கட்டுரையையும் அந்த நான்கு பாடல்களைக் கொண்டே முடித்திருக்கலாம். “ ஒண்சுடர் கல்சேர” என்கிற எளிய வரிக்கே ஏனோ என் மனம் உருகிவிடுகிறது கல் எனில் இங்கு மலை. அந்தி வேளையில் விளக்கேற்றும் போது கடவுளின் நாமத்தைச் சொல்வது போல, “ கனைசுடர் கல்சேரும்” பொழுதில் “ நல்லந்துவனார்” என்று அவர் நாமம் சொல்லலாம். மாலையின் நாயகன் அவர்.

“நீர் நீந்து கண்ணார்” என்கிறார் ஓரிடத்தில். என் தோழியர் அழுகையில் அந்தக் கண்களை நான் கண்டிருக்கிறேன். கட்டுரையின் துவக்கத்தில் வரும் “ மாலை நீ , .... வெள்ளமான் நிறம் நோக்கிக் கணை தொடுக்கும் கொடியான்போல்” என்கிற உவமை இவருடையதுதான். மேலும் சில வரிகள்...

“உரவுத்தகை மழுங்கித் தன் இடும்பையால்
இரப்பவன் நெஞ்சம்போல் புல்லென்று புறம்மாறிக்
கரப்பவன் நெஞ்சம்போல் மரமெல்லாம் இலை கூம்ப”


வாராதகாலம் வந்து தன் வறுமையைத் தாங்க இயலாத ஒருவன் ஈயென்று இரக்கையில் அவன் நெஞ்சம் அவமானத்தால் அழிவது போல இருளுகிறதாம் மாலை. அப்படி இரந்தும் ஈயாது மறைப்பவனின் நெஞ்சம் போல் மரமெல்லாம் இலை கூம்புகிறதாம். இன்றும் வெகு மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் ஒரு உவமை ஒருவேளை நல்லந்துவனார் தந்ததாகவும் இருக்கலாம். “ வெந்ததோர் புண்ணின்கண் வேல் கொண்டு நுழைப்பான் போல” வருகிறது மாலை.

“வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்
நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கறத் தான்செய்த
தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம் வேட்டு எழுந்தாற்போல்
பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலை சேர“

என்கிறது ஒரு பாடல். அதாவது, போர்கள் பல கண்டு புகழ்மிக்க ஒரு மன்னவன், அறநெறியின் வழியே நெடுங்காலம் நாடு காத்து, பிறகு தன் முதுமையில், தான் இதுவரை செய்த நல்வினைகளின் பயனால் சொர்க்கத்தை அடைய விரும்பி துறவு பூண்டு செல்வது போல சூரியன் மாலையில் மலை சென்று மறைகிறதாம்.

“குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும்
இடை நின்ற காலம்போல் இறுத்தந்த மருள்மாலை!”

ஒரு அரசன் பதவியிலிருந்து விலகியதற்கும், இன்னொரு அரசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கும் இடைப்பட்ட சிறுகாலம் போலான மாலையாம்! “ ஸ்திரத்தன்மையற்ற குழப்பம் மிக்க காலம்” என்று நாம் இதை விரித்துக் கொள்ளலாம்.

“வெந்துஆறு பொன்னின் அந்தி பூப்ப” என்கிறது அகநானூறு. என் நண்பர் ஒருவர் சொன்னார். “ சிறுபிராயத்தில் அந்திவேளையில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு துயரத்தால் பிணிக்கப்பட்டு தேம்பித்தேம்பி அழுவேன். இடையில் கொஞ்சகாலம் நின்றிருந்த அழுகையை ஒரு கேரளத்து அந்தியின் முன் மொத்தமாகக் கொட்டித்தீர்த்தேன்” மாலையில் என்னவோ இருக்கிறது. அது புறத்தே மயங்கி நம்மை அகத்துள் மயக்குகிறது. துயரம்... களிப்பு... அல்லது இரண்டும் முயங்கிய களிதுயர். இருக்கிறது... மாலைக்குள் உறுதியாக என்னவோ இருக்கிறது?

நன்றி : காலச்சுவடு- அக்டோபர் 2020

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம